Home செய்திகள் பவளப்பாறைகளால் உருவான தனுஷ்கோடி – மரபுநடை நிகழ்ச்சியில் தகவல்…

பவளப்பாறைகளால் உருவான தனுஷ்கோடி – மரபுநடை நிகழ்ச்சியில் தகவல்…

by ஆசிரியர்

ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடங்களை மாணவர்கள், பொதுமக்கள் நேரில் கண்டு அறிந்துகொள்ளச் செய்யும் மரபுநடை நிகழ்வை ஒவ்வொரு மாதமும் நடத்தி வருகிறது. ஏழாம் மரபுநடை நிகழ்வு 26.08.2018 அன்று தனுஷ்கோடியில் நடந்தது. இதில் தனுஷ்கோடியின் பெரும்பான்மையான கட்டடங்கள் பவளப்பாறைக் கற்களைக் கொண்டுகட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் நிவாஸ்சங்கர் அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்வுக்குத் தலைமை வகித்த இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு பேசியதாவது, ராமநாதபுரம் மாவட்டத்தின்கிழக்கு எல்லையா ராமேஸ்வரம் தீவில் பண்பாடும் இயற்கைத் தாவரங்களும் பரவி அழகுபடுத்துகின்றன. பறவைப் பார்வையில் இத்தீவு கைப்பிடியுள்ள ஒரு வாள்போன்ற அமைப்பில் உள்ளது.

பாம்பு போன்று அமைந்துள்ளதால் பாம்பன் கால்வாய் எனஅழைக்கப்படுகிறது. குதிரை தாண்டும் தூரத்தில் இருந்த இக்கால்வாய், கி.பி.1480ஆம் ஆண்டு ஏற்பட்ட புயலால் பெரிதானது. கி.பி.1639இல் திருமலை நாயக்கரின் தளபதி ராமபையன், பாம்பனில் ஒளிந்து கொண்ட தளவாய் சேதுபதியை பிடிக்க பாம்பன் கால்வாயில் முதன்முதலாக ஒரு பாலம் ஏற்படுத்தினார்.

ராமேஸ்வரம் கோயிலுக்கு பாண்டியர், சோழர், இராஷ்டிரகூடர், இலங்கைமன்னர்கள், விஜயநகர மன்னர்கள், மதுரை நாயக்கர்கள், சேதுபதிகள் ஆகியோர் திருப்பணி செய்துள்ளார்கள். ராமேஸ்வரம் அருகில் அரியாங்குண்டு பகுதியில்ஒரு பெரிய பௌத்தப் பள்ளி இருந்துள்ளது. இங்கு புத்தரின் கற்சிற்பமும்கிடைத்துள்ளது.

தனுஷ்கோடியில் வங்காள விரிகுடாவும், மன்னார் வளைகுடாவும் ஒன்றாகச்சங்கமிக்கும் அரிச்சல்முனை பகுதி, அம்புமுனை போ உள்தால் தனுஷ்கோடிஎன பெயர் வந்துள்ளது. சங்க இலக்கியமான அகநானூறில் மதுரைத் தமிழ் கூத்தனார் கடுவன் மள்ளனார் எனும் புலவர் இராமன் தனுஷ்கோடி ஆலமரத்தடியில் வேதம் ஓதிய செய்தியைக் குறிப்பிடுகிறார்.

இரட்டைத்தாழை முனியசாமி கோயிலில் கி.பி.9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தஒரு வட்டெழுத்து கல்வெட்டு உள்ளது. இது முன்னூற்றுவர், வளஞ்சியர், திசைஆயிரத்து ஐந்நூற்றுவர் ஆகிய வணிகக் குழுவினர் இணைந்து இராமேஸ்வரத்தில் செய்த தர்மத்தைக் குறிப்பிடுகிறது.

முஸ்லிம்களின் கல்லறையின் மேல் நீளமான ஒரு தூண் கட்டப்பட்டிருப்பதை கோரிஎன்கிறார்கள்.  இது குத்துக்கல் அல்லது நெடுங்கல் போன்ற அமைப்பில்உள்ளது. கோரிகள் தனுஷ்கோடி, மண்டபம் உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் காணப்படுகின்றன. குந்துகால் மற்றும் குருசடித் தீவிற்கு இடையில் கடலில் ஒருகோரி உள்ளது.

கி.பி.1162இல் திருநெல்வேலியை ஆண்டு வந்த சடையவர்மன் குலசேகரபாண்டியன் மதுரையை ஆண்டுவந்த பராக்கிரம பாண்டியன் மீது போர் தொடுத்து மதுரையைக் கைப்பற்றிக் கொண்டான். அப்போது உதவிக்கு வந்தஇலங்கை படை, குந்துக்கால் பகுதியைக் கைப்பற்றிக் கொண்டதாக  மகாவம்சம் கூறுகிறது. குருசடித் தீவிற்கும், பாம்பனுக்கும் இடையில் உள்ளதுகுந்துக்கால்வாய். குந்து என்பவர் பெயரால் இக்கால்வாய் அழைக்கப்படுகிறது. சமண மதத்தின் 17வது தீர்த்தங்கரர் குந்துநாதரால் இப்பெயர் வந்திருக்கலாம்.

ராமேசுவரம் தீவில் பாரம்பரியத் தாவரங்களாக மண்ணரிப்பைத் தடுக்கும் தாழை மரங்கள், அடும்புக்கொடி ஆகியவை காணப்படுகின்றன. ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட பொந்தன்புளி மரங்கள் தங்கச்சிமடம், இராமேசுவரத்தில் உள்ளன இவ்வாறு அவர் கூறினார்.

கமுதி ஒருங்கிணைப்பாளர் வெள்ளைப்பாண்டியன் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்குரிய ஏற்பாடுகளை முதுகுளத்தூர் கால்நடை மருத்துவர் சுந்தரமூர்த்தி, ஆசிரியர் கார்த்திகேயன் ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் கலந்துகொண்டு பாம்பன் பாலம்அழிந்துபோன தனுஷ்கோடி, பொந்தன்புளி,  தாழை மரங்கள், அடும்புக்கொடி ஆகியவற்றை நேரில் பார்த்து அறிந்து கொண்டனர். நிகழ்வின் தனுஷ்கோடி பற்றிய சிறு நூல் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

தகவல்:- முருகன், கீழைநியூஸ், இராமநாதபுரம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!