தியாகத்தை பறைசாற்றும் ஹஜ்ஜுப் பெருநாள்

அன்புள்ள இஸ்லாமிய சகோதர சகோதரிகளே. எல்லாம் வல்ல அல்லாஹ் இந்த ஹஜ்ஜுப்பெருநாளை கொண்டாட கூடிய பாக்கியத்தை நமக்கு தந்திருக்கிறான். எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே.

இந்த ஹஜ்ஜுப்பெருநாள் நமக்கு இறைதூதர் இப்ராஹிம் (அலை) அவர்களின் மற்றும் அவர்களின் குடும்பத்தின் தியாக வாழ்க்கையை நினைவு படுத்துகிறது. நபி இப்ராஹிம் (அலை) அப்படி என்ன தியாகம் செய்தார்கள்.?,  அவர்கள் அல்லாஹ்விற்காக தன் முழு வாழ்க்கையையும் தியாகம் செய்தார்கள். அவர்கள் மட்டுமல்ல அவர்களின் மனைவி பிள்ளை என அனைவரும் தியாகம் செய்தார்கள் அல்லாஹ்விற்காக. உண்மையில் இந்த இஸ்லாமிய மார்க்கம் தியாகத்தை அடிப்படையாக கொண்ட மார்க்கம் ஆகும்.  எனவேதான் அல்லாஹ் இந்த மார்க்கத்தை பற்றி அல்குர்ஆனில் கூறும் போது இது இப்ராஹிமின் மார்க்கம் என்று கூறுகிறான்.

நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் நபியாக தேர்ந்தெடுத்த ஆரம்ப காலத்தில் இந்த முஸ்லிம் சமூகம் ஒன்றுமே இல்லாமல் இருந்தது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து நபி (ஸல்) அவர்களின் இறுதி காலத்தில் உலகிலேயே மிகப்பெரும் புரட்சி மிக்க சமுதாயமாக மாறியது. இந்த புரட்சிக்கு மிகப்பெரிய காரணம் அன்றைய காலத்தில் வாழ்ந்த முஸ்லிம்களாகிய சஹாபாக்கள் செய்த தியாகமே ஆகும்.

அன்பு சொந்தங்களே. நாமும் இந்த இஸ்லாமிய மார்க்கத்தை தான் பின்பற்றுகிறோம். ஆனால் இந்த மார்க்கத்திற்க்காக நாம் என்ன தியாகம் செய்திருக்கிறோம்.? ஹிஜ்ரி 10 ஆம் ஆண்டு துல்ஹஜ் மாதம் அல்லாஹ்வுடைய தூதர் நிகழ்த்திய இறுதி போருரையில் இந்த மார்க்கத்தை நிலை நிறுத்துவது முஸ்லிம்கள் ஒவ்வொருவர் மீதும் கடமை என்று கூறினார்கள். நாம் மார்க்கத்தை நிலை நிறுத்த என்ன செய்துள்ளோம்?

சஹாபாக்கள் சமுதாயத்தில் ஏற்படுத்திய புரட்சியை போன்று நாமும் புரட்சி செய்ய வேண்டுமானால் சஹாபாக்களை போன்று நாமும் தியாகம் செய்ய வேண்டும். உடலாலும், பொருளாலும், ஆன்மீக ரீதியிலும் நாம் தியாகம் செய்ய தயாராக வேண்டும்.

இந்த தியாக திருநாளன்று அல்லாஹ்விற்காக, அல்லாஹ்வின் இந்த மார்க்கத்திற்காக தியாகம் செய்ய தயாராகுவோம்.

நற்செயல்களை நம்மிடம் இருந்தும் உங்களிடம் இருந்தும் ஏக இறைவன் ஏற்றுக்கொள்வானாக.

(தகப்பல் அல்லாஹு மின்னா வ மின்கும்)

சகோ. இஜாஸ் முஹம்மது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..

1 Comment

  1. மாஷா அல்லாஹ்…..
    அருமையான பதிவு சமுதாயத்திற்கு தியாகத்தை தியாகத்திருநாளன்று நினைவூட்டியதற்கு ஜஸாக்கல்லாஹ் கைரன். …

Comments are closed.