Home செய்திகள் அம்மா, அப்பா ஆதரவு, விடா முயற்சி, இராமநாதபுர மாவட்டத்தில் போலீஸ் பணியில் ‘திருநங்கை நஸ்ரியா’…

அம்மா, அப்பா ஆதரவு, விடா முயற்சி, இராமநாதபுர மாவட்டத்தில் போலீஸ் பணியில் ‘திருநங்கை நஸ்ரியா’…

by ஆசிரியர்

அம்மா இல்லாவிடில் அன்பு போய்விடும், அப்பா இல்லாவிடில் கல்வி போய் விடும், சகோதரன் இல்லாவிடில் பலம் போய் விடும் என்பார்கள். ஆனால் அம்மா, அப்பா தைரியம் கொடுத்தால் மலையை கூட சாய்த்து விடலாம். இதற்கு எத்தனையோ வரலாற்று சான்றுகளை கூறலாம். மின்சாரம் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட அறிவியல் கண்டுபிடிப்புகளை உலகிற்கு தந்த தாமஸ் ஆல்வா எடிசன் பள்ளிக்குச் சென்றபோது உடல் அங்ககீனங்களை காரணம் காட்டி துரத்தப்பட்ட அவருக்கு தாயார் புகட்டி கல்வியே சாதனைகளை எட்ட முடிந்தது. ஆயிரம் பேர் பாராட்டலாம். பெற்றோர் பாராட்டே சிறந்தது.

திருநங்கை என்ற நகைப்பை உடைத்தெறிந்து எங்களாலும் முடியும் என மார்பு தட்டி பத்மினி பிரகாஷ் (தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்), குணவதி (அரசு மருத்துவமனை குழந்தை பராமரிப்பு), கிரேஷ் பானு (பொறியாளர்), தாரிகா பானு (சித்த மருத்துவ மாணவி), பிரீத்திகா யாஷினி (காவல் சார்பு ஆய்வாளர்க), சத்யஸ்ரீ ஷர்மிளா (வழக்கறிஞர்), இந்த வரிசையில் தற்போது காவல் பணியில் தன்னை இணைத்து கொண்டுள்ளார் திருநங்கை நஸ்ரியா. ஆம், தடைகளை தகர்த்து விடா முயற்சியால் திறம்பட சிறப்பாக பயிற்சி முடித்து தமிழக காவல் துறையில் போலீசாக நேற்று பணியில் இணைந்தார் நஸ்ரியா.

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வசந்தபுரத்தைச் சேர்ந்த திருநங்கை நஸ்ரியா 22. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் கடந்தாண்டு நடத்திய இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றார். திருநங்கை சான்று இல்லை என அவர் நிராகரிக்கப்பட்டார். இதையடுத்து மதுரை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்து திருநங்கை என சான்று பெற்றார். இதன் பிறகு நடந்த உடல் தகுதி காண் முதல் கட்ட தேர்வில் பங்கேற்காததால் அனுமதிக்க முடியாதென நஸ்ரியாவுக்கு அடுத்த தடை ஏற்பட்டது. இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அரசு வழங்கிய நல வாரிய அடையாள அட்டை இருந்ததால் அனுமதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

இதைதொடர்ந்து இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் நடராஜன் நஸ்ரியாவுக்கு நல வாரிய அடையாள அட்டை வழங்கியதன் அடிப்படையில் உடல் தகுதி காண் தேர்வில் கலந்து கொண்டு தேறினார். இதன்படி சீருடை பணியாளர் தேர்வாணைய நேர்முகத்தேர்விலும் பங்கேற்று நஸ்ரியா வென்று காவலராக தேர்வு செய்யப்பட்டார். காவலர்களுக்கான அடிப்படை பயிற்சி மற்றும் செயல்முறை பயிற்சிக்கு பின் சொந்த மாவட்டமான இராமநாதபுரத்திலேயே பணி நியமனம் பெற்றார். பணி ஒதுக்கீடு உத்தரவு பெற்ற நஸ்ரியா ராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் பணி நியமன ஆணையை வழங்கி ஆயுதப்படை பிரிவில் நேற்று சேர்ந்து தனது பணியை ஏற்றுக்கொண்டார்.

நஸ்ரியா கூறுகையில்,‘ எனது அம்மா, அப்பாவின் தைரியத்துடன் இடைவிடா முயற்சியால் பல தடைகளை முறியடித்து காவலராக தேர்வாகி திருச்சி, மதுரை காவலர் பயிற்சி பள்ளிகளில் பயிற்சி முடித்தேன். இதன்பிறகு சிவகங்கை நகர் காவல் நிலையம், ஆயுதப்படை செயல்முறை பயிற்சி எடுத்தேன். பயிற்சி நிறைவில் மாநில அளவில் 1,315 என்ற தரவரிசையுடன் 500க்கு 421 மதிப்பெண் பெற்று தன் விருப்ப அடிப்படையில் ராமநாதபுரத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைக்கப் பெற்று ஆயுதப்படையில் பணியில் சேர்ந்தேன். ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் வீடு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய குரூப்& 1 தேர்வெழுதிய பயிற்சி பெற உள்ளேன். திருநங்கைகளுக்கு சமுதாயத்தில் தற்போது உரிய அங்கீகாரம் கிடைத்து வருகிறது. திருநங்கைகள் நன்கு படித்தால் சமுதாயத்தில் உன்னத நிலை எட்டலாம். என்னை மரியாதை குறைவாக அழைத்தவர்கள் காவல் உடை அணிந்ததும் மரியாதையுடன் அழைக்கின்றனர். என் வெற்றிக்கு பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் ஆதரவு தான் காரணம். திருநங்கையாக மாறுவோரை பெற்றோர் புறக்கணிக்காமல் ஆதரவு கரம் நீட்டவேண்டும். ஆதரவு கிடைக்காதபோது தான் திருநங்கைகள் வேறு பாதைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இவ்வாறு நஸ்ரியா கூறினார்.

TS 7 Lungies

You may also like

1 comment

Anonymous August 8, 2018 - 10:57 am

congratz nasriya!

Comments are closed.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!