Home செய்திகள் இராமநாதபுரம் மாவட்டம் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் பயனாளிகளுக்கு ரூ.110 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள்….

இராமநாதபுரம் மாவட்டம் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் பயனாளிகளுக்கு ரூ.110 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள்….

by ஆசிரியர்

தமிழ்நாடு அரசு வருவாய்த்துறையின் மூலம் விவசாயிகளின் நலனுக்காக செயல்படுத்தி வரும் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் இதுவரை இராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 1,08,980 பயனாளிகள் ரூ.110,00,50,290/- மதிப்பிலான பல்வேறு உதவித் தொகைகள் பெற்று பயனடைந்துள்ளனர் என மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளதாவது, தமிழ்நாடு அரசு வருவாய்த்துறையின் மூலம் விவசாயிகளின் நலனை மேம்படுத்திடும் விதமாகவும், விவசாயிகளுக்கான பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையிலும் சமூக பாதுகாப்பு திட்டத்தின் வாயிலாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உழவர் பாதுகாப்பு திட்டம் என்ற திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளின் நலனுக்காக அவர்தம் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை போன்ற உதவித் தொகைகளும், விபத்து நிவாரணம், இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு, காசநோய் சிகிச்சை போன்றவற்றிற்கு உதவித்தொகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன்படி 2.50 ஏக்கருக்கும் மிகாமல் நன்செய் நிலம் அல்லது 5.00 ஏக்கருக்கு மிகாமல் புன்செய் நிலத்தை சொந்தமாக கொண்டு அந்நிலத்தில் நேரடியாக பயிர் செய்யும் 18 வயது முதல் 65 வயது வரை உள்ள அனைத்து குறுஃசிறு விவசாயிகள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள் மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு மாண்புமிகு முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உறுப்பினர்களாக பதிவு செய்து கொள்ள தகுதியுடையவர்கள் ஆவார். இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள மூல உறுப்பினர்களுக்கு பண்பேறிய சிவப்பு வண்ண அடையாள அட்டையும், இறந்த மகனுடைய மனைவி (விதவை மருமகள் மற்றும் குழந்தைகள்) மற்றும் பெற்றோர்களுக்கு சாம்பல் நிற அடையாள அட்டையும் வழங்கப்படுகிறது. மூல உறுப்பினரை சார்ந்து வாழும் குடும்ப உறுப்பினர்களுக்கு வயது வரம்பு ஏதுமில்லை.

தோட்டக்கலை, பட்டுப்புழு வளர்ப்பு, பயிர்வளர்த்தல், புல் வளர்த்தல் அல்லது தோட்ட விளைபொருள், ஒரு விவசாயி தமது நிலத்தில் முழுவதையுமோ அல்லது ஒரு பகுதியையோ மேய்ச்சலுக்காக பயன்படுத்துதல், உரவகையிலான பயிர்களை வளர்க்கும் நோக்கத்திற்காக நிலத்தை பயன்படுத்துதல், பால்பண்ணைத் தொழில், கோழிப்பண்ணைத் தொழில், கால்நடை வளர்ப்பு, மரங்களை வளர்த்தல், உள்ர் மீன்பிடி தொழிலில் ஈடுபடுதல் போன்ற தொழில்களில் ஈடுபடுபவர்களாக இருத்தல் வேண்டும். இத்திட்டத்தில் உறுப்பினராக சேருவதற்கு குடும்ப அட்டை அவசியம். குடும்ப அட்டை இல்லாதவர்கள் இத்திட்டத்தில் பயனடைய இயலாது. இத்திட்டத்தில் பதிவு செய்து கொள்ள கட்டணம் ஏதுமில்லை. தங்களது கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலரிடம் குடும்ப உறுப்பினர்கள், வயது, தொழில், நில அளவு, குடும்ப அட்டை எண் ஆகிய விவரங்களை தெரிவித்து பதிவு செய்து கொள்ளலாம்.

உழவர் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் இராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டில் தற்போது வரை கல்வி உதவித்தொகையாக 18,874 பயனாளிகள் ரூ.4,92,72,790/- மதிப்பிலும், திருமண உதவித்தொகையாக 8,474 பயனாளிகள் ரூ.2,69,40,280/- மதிப்பிலும், முதியோர் உதவித்தொகையாக (மாதத்திற்கு சராசரியாக 74,000 பயனாளிகள் வீதம்) ரூ.97,55,14,980/- ம் யற்கை மரண உதவித்தொகையாக 6,264 நபர்கள் ரூ.2,85,12,000/- மதிப்பிலும், விபத்து நிவாரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகையாக 137 நபர்கள் ரூ.1,28,34,200/- மதிப்பிலும், காசநோய் சிகிச்சை உதவித்தொகையாக 1,231 நபர்கள் ரூ.69,76,040/- மதிப்பிலும் என மொத்தம் 1,08,980 நபர்கள் ரூ.110,00,50,290/- (ரூபாய் நூற்றி பத்து கோடியே ஐம்பதாயிரத்து இருநூற்றி தொண்ணூறு மட்டும்) மதிப்பில் உதவித்தொகை பெற்று பயனடைந்துள்ளனர்.

மேற்கண்ட திட்டங்களில் பயன்பெற விரும்புவோர் சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் அலுலவகத்தில் உள்ள தனி வட்டாட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகத்தில் முறையாக விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன் தெரிவித்துள்ளார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!