தவற விட்ட 2 இலட்சம் ரூபாயை சிசிடிவி கேமரா மற்றும் பொதுமக்கள் உதவியுடன் மீட்ட காவல்துறையினர்..

நாகை மாவட்டத்தை சேர்ந்த திரு. மணிகண்டன் சென்னையில் உள்ள தன் பிள்ளைகளின் பள்ளி கட்டணம் செலுத்த ரூ. 2 இலட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு காரில் சென்னைக்கு புறப்பட்டார். 29.07.2018 அன்று காலை 8 மணியளவில் திண்டிவனம் அருகேயுள்ள ஒலக்கூரில் உள்ள ஓட்டலில் காலை டிபன் சாப்பிட்டுவிட்டு காரில் சென்னை நோக்கி செல்லும்போது பணப்பையை ஓட்டலில் மறந்து வைத்தது தெரிய வர உடனே சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கு மணிகண்டன் விரைந்தார். அங்கு அவர் அமர்ந்திருந்த இடத்தில் பணப்பை இல்லை இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அங்கிருந்தவர்களிடம் விசாரித்தார்.

ஆனால் பணம் எங்கு போனது என தெரியவில்லை. உடனே¸ இது குறித்து ஒலக்கூர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். காவல் ஆய்வாளர் திரு. சீனிராஜி அவர்கள் உத்தரவின்பேரில் உதவி ஆய்வாளர் திரு. நடராஜன் விரைந்து வந்து ஓட்டலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போது¸ இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் அடங்கிய குடும்பத்தினர் மணிகண்டனின் பணப்பையை எடுத்துக் கொண்டு வெளியே சென்றதும். அந்த கும்பல் சென்னை நோக்கி சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட காரின் பதிவு எண்ணை கண்டறிந்த காவல்துறையினர் போலீஸ் ஜீப்பில் சென்னை நோக்கி விரைந்தனர். முன்னதாக மணிகண்டன் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது பணப்பையை தவற விட்டதும்¸ அதை அங்கிருந்து ஒரு குடும்பத்தினர் எடுத்து சென்றதையும் கவனித்த அதே ஓட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்த நெய்வேலி என்எல்சியில் வேலை செய்து வரும் முத்துகுமார் என்பவர் செங்கல்பட்டில் உள்ள தனது நண்பர் மெக்கானிக் ராஜி என்பவருக்கு போன் மூலம் காரின் எண்¸ காரின் நிறம் ஆகியவற்றை கூறி செங்கல்பட்டு டோல்கேட்டில் காரை மடக்கி பிடிக்குமாறு கூறியுள்ளார்.

அதன்பேரில்¸ அங்கு தனது நண்பர்களுடன் சென்ற ராஜி சம்பந்தப்பட்ட காரை செங்கல்பட்டு டோல்கேட்டை கடக்கும் போது மடக்கி பிடித்தார். இதனிடையே திண்டிவனத்தில் இருந்து சென்னை விரைந்த காவல்துறையினரும்¸ செங்கல்பட்டு டோல்கேட் சென்று ராஜி பிடித்து வைத்திருந்த கார் மற்றும் அதில் இருந்தவர்களை ஒலக்கூர் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். அதில் மணிகண்டனின் பணப்பையை திருடி சென்றது தெரியவந்தது. அவர்களிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்த பின்னர்¸விசாரணை மேற்கொண்ட விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஜெயக்குமார் அவர்கள் மணிகண்டனிடம் பணத்தை வழங்கினார். மேலும்¸ விரைந்து செயல்பட்டு பணத்தை மீட்க உதவிய நெய்வேலி ஊழியர் முத்துகுமார் மற்றும் அவரது நண்பர் ராஜி ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டினார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..