Home செய்திகள் நபார்டு வங்கியின் சார்பாக ‘பருவநிலை மாற்றமும், வேளாண்மையும்” விவசாயிகளுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம்..

நபார்டு வங்கியின் சார்பாக ‘பருவநிலை மாற்றமும், வேளாண்மையும்” விவசாயிகளுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம்..

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கடலோர உவர் ஆராய்ச்சி மையத்தில் இன்று (31.07.2018) தேசிய விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி (NABARD) சார்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன் தலைமையில் ‘பருவநிலை மாற்றமும் வேளாண்மையும்” என்பது தொடர்பான விவசாயிகளுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம்  நடைபெற்றது.

​​இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன் ‘பருவநிலை மாற்றமும், வேளாண்மையும்” என்ற தலைப்பில் தயார் செய்யப்பட்டிருந்த விழிப்புணர்வு கையேட்டினை வெளியிட்டு, பொதுமக்களுக்கு வழங்கினார்.

​இக்கருத்தரங்கினைத் துவக்கி வைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன் பேசியதாவது, “இன்றைய சூழ்நிலையில் மக்கள்தொகை பெருக்கம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வின்மை போன்ற காரணங்களால் பருவநிலை மாற்றம் ஏற்படுகிறது.  சமீப காலங்களில் உலகளவில் வெப்பமயமாதல் போன்ற நிகழ்வுகள் ஏற்படுகின்றன.  இதன் காரணமாக ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிக் பிரதேசங்களில் உள்ள பனிமலைகள் உருக தொடங்கியுள்ளதாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.  இத்தகைய பருவமாற்றங்களின் காரணமாக பருவமழை பொய்த்தல், வறட்சி, எதிர்பாராத நேரத்தில் பெருவெள்ளம் போன்ற இயற்கை இடர்பாடுகள் ஏற்படுகின்றன.

இதுபோன்ற பருவநிலை மாற்றங்களை எதிர்கொள்வது குறித்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமாகும். பருவமழை பொய்த்தல், வறட்சி போன்ற சூழ்நிலைகளில் குறைந்த அளவு தண்ணீரில் வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய உயர்ரக பயிர்களை பரவலாக்க வேண்டும்.   அதேபோல ஒருங்கிணைந்த கூட்டுப்பண்ணையம், நுண்ணீர் பாசனத் திட்டம் போன்ற விவசாயிகள் நலத்திட்டங்களை முழுமையாக பயன்படுத்திட வேண்டும்.

இதுதவிர முறையான நீர்மேலாண்மை திட்டங்கள் மூலமாகவும், அதிகளவில் மரக்கன்றுகளை நடுவதன் மூலமாகவும் பருவநிலை மாற்றங்களை எதிர்கொள்ளலாம்.  இராமநாதபுரம் மாவட்டத்தில் நீர்வள நிலவள திட்டத்தின் (IAMWARM) கீழ் இராமநாதபுரம் வட்டத்தில் 22 கண்மாய்கள், பரமக்குடி வட்டத்தில் 31 கண்மாய்கள் என மொத்தம் 53 கண்மாய்கள் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.  அதேபோல நீடித்த நிலையான மானாவாரி இயக்கத்தின் கீழ் 98 ஊரணிகள் தேர்வு செய்யப்பட்டு ஆழப்படுத்தும் பணிகள் நடைபெறுகின்றன. இதுதவிர குடிமராமத்து பணிகள் திட்டத்தின் கீழ் நடப்பு நிதியாண்டில்  64 கண்மாய்களில் குடிமராமத்து திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. மாவட்ட நீர்வடிப்பகுதி முகமையின் மூலம் 191 ஊரணிகளில் 860 பணிகள் நடைபெற்று வருகின்றது.  அதேபோல வனத்துறை மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பாக பெருமளவில் மரக்கன்றுகள் நடும் திட்டப்பணிகளும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.   எனவே விவசாயிகள் பருவநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு பெற்றிருப்பது மிகவும் அவசியமாகும்.  எனவே விவசாயிகள் இன்று நடைபெறும் இந்த கருத்தரங்கினை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என பேசினார்.

இந்நிகழ்ச்சியில் நபார்டு வங்கி துணை பொது மேலாளர் நாகராஜன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் (பொ) எல்.சொர்ணமாணிக்கம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பி.ராஜா, மாவட்ட நபார்டு வங்கி மேலாளர் எஸ்.மதியழகன்,   கடலோர உவர் ஆராய்ச்சி மைய தலைவர் சாத்தையா, பரமக்குடி வேளாண்மை ஆராய்ச்சிமைய தலைவர் சக்திவேல், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஏ.சங்கரன் உள்பட அரசு அலுவலர்கள் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!