Home செய்திகள் விவசாயிகள் நல்வாழ்வு இயக்கம் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான தேனீக்கள் வளர்ப்பு தொடர்பான பயிற்சி..

விவசாயிகள் நல்வாழ்வு இயக்கம் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான தேனீக்கள் வளர்ப்பு தொடர்பான பயிற்சி..

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (31.07.2018) விவசாயிகள் நல்வாழ்வு இயக்கம் திட்டத்தின் கீழ் தேசிய தேனீக்கள் வளர்ப்பு வாரியம் சார்பாக அகில் பாரதிய விகாஸ் சன்ஸ்தான் (Akhil Bharatiya Vikas Sansthan) மூலம் 2 நாட்கள் நடைபெறும் விவசாயிகளுக்கான தேனீக்கள் வளர்ப்பு தொடர்பான பயிற்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன் துவக்கி வைத்தார்.

இப்பயிற்சியினைத் துவக்கி வைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன் பேசியதாவது, “இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மக்கள்தொகையில் பெரும்பாலானோர் விவசாயத்தையே முக்கிய தொழிலாக கொண்டுள்ளனர். குறிப்பாக நெல், பருத்தி, மிளகாய் போன்ற பயிர்களை முக்கிய பயிர்களாக பயிரிட்டு வருகின்றனர். சில சமயங்களில் எதிர்பார்த்த அளவில் மழை கிடைக்காத சூழ்நிலையில் விவசாயிகள் நெல் போன்ற பயிர்களை சாகுபடி செய்ய இயலாமல் பாதிக்கப்படுகின்றனர். இத்தகைய சூழ்நிலையில் நெற்பயிருக்கு மாற்றாக சிறிய முதலீட்டில் அதிக மகசூல் பெறக்கூடிய தோட்டக்கலைப் பயிர்களை சாகுபடி செய்து பயனடையலாம்.

அதேபோல விவசாயிகள் தேனீக்கள் வளர்ப்பினையும் மேற்கொள்வதன் மூலம் கூடுதல் பயனடையலாம். அதாவது தேனீக்கள் வளர்ப்பின் மூலம் முக்கிய மூலப்பொருளான தேன் கிடைக்கப்பெறுவதோடு, மெழுகு, ராயல் ஜெல்லி போன்ற உபபொருட்களும் கிடைக்கப்பெறும். இவ்வாறு கிடைக்கப்பெறும் தேனை சுத்தமான மலைதேன், கொம்புதேன், நாவல்தேன், வேம்புதேன், இஞ்சிதேன் என பல்வேறு விதமாக மதிப்புக்கூட்டு செய்து, முறையாக சந்தைப்படுத்துவதன் மூலம் விவசாயிகள் இருமடங்கு வருமானம் பெறலாம். அதேவேளையில் தோட்டக்கலை பயிர் வளர்ப்பின்போது, தேனீக்கள் தாவரங்களின் மகரந்த சேர்க்கையினை அதிகரிக்கின்றன. இதன் காரணமாக விவசாயிகளுக்கு பயிர் சாகுபடியும் அதிகரிக்கின்றது.

மத்திய அரசு விவசாயிகள் நல்வாழ்வு இயக்கம் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 25 கிராமங்களைத் தேர்வு செய்து அந்த கிராமங்களில் பல்வேறு விவசாயிகள் நலத்திட்டங்களை செயல்படுத்தவும், விவசாய பணிகளில் தொழில்நுட்ப வளர்ச்சியினை பயன்படுத்துதல் குறித்து பயிற்சிகளை நடத்தவும் அறிவுறுத்தியுள்ளது. அதனடிப்படையில் தேசிய தேனீக்கள் வளர்ப்பு வாரியம் சார்பாக அகில் பாரதிய விகாஸ் சன்ஸ்தான் என்ற மத்திய அரசு அங்கீகாரம் பெற்ற அமைப்பு விவசாயிகளுக்கான இந்த பயிற்சி வகுப்பினை நடத்துகின்றது. இப்பயிற்சி வகுப்பில் தேனீக்கள் வளர்ப்பு தேனீ வளர்ப்பிற்கான உபகரணங்களின் பயன்பாடு, தேனீ வளர்ப்பின் மூலம் கிடைக்கப்பெறும் பொருட்களை மதிப்பு கூட்டு செய்து சந்தைப்படுத்துதல் குறித்து பயிற்சி வழங்கப்படுகிறது. இப்பயிற்சியினை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் வேளாண்மைத்துறை இணை இயக்குநர் (பொ) எல்.சொர்ணமாணிக்கம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பி.ராஜா, தோட்டக்கலைத் துணை இயக்குநர் (பொ) ஜே.ராஜேந்திரன், தேசிய தேனீக்கள் வளர்ப்பு வாரியத்தின் முன்னாள் இயக்குநர் திரு.யோகேஷ் சிங், கடல் உவர் ஆராய்ச்சி மைய பேராசிரியர் முனைவர்.ந.சாத்தையா, அகில் பாரதிய விகாஸ் சன்ஸ்தான் சார்ந்த தேனீக்கள் வளர்ப்பு வல்லுநர்கள் சந்தோஷ்குமார், பிரமோத்குமார், மதுரையைச் சேர்ந்த தேனீக்கள் வளர்ப்பு வல்லுநர் ஜோசபின், இராமநாதபுரம் வேளாண்மை ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த ராஜேஷ்குமார் உள்பட அரசு அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!