ஜார்கண்ட் இறைச்சி வியாபாரியை அடித்து படுகொலை செய்த குற்றவாளிகளுக்கு மாலை அமைச்சரை பதவிநீக்கம் செய்ய வேண்டும்! எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல்…

ஜார்கண்டில் முஸ்லிம் இறைச்சி வியாபாரியை அடித்துப் படுகொலை செய்த குற்றவாளிகளுக்கு, மாலை அணிவித்து மரியாதை செய்த மத்திய பா.ஜ.க. அமைச்சர் ஜெயந்த் சின்ஹாவை பதவி நீக்கம் செய்ய எஸ்.டி.பி.ஐ. கட்சியின் புதிய தேசிய தலைவர் எம்.கே. ஃபைஜி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்; “ஜார்கண்ட் மாநிலத்தில் முஸ்லிம் இறைச்சி வியாபாரி அலிமுதீன் அன்சாரி என்பவரை அடித்துப் படுகொலை செய்த வழக்கில் ஆயுள்தண்டனை பெற்று, ஜார்கண்ட் உயர் நீதிமன்ற உத்தரவால் ஜாமீனில் வெளிவந்திருக்கும் கொலைக் குற்றவாளிகளுக்கு, மத்திய பாஜக அரசின் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா மாலை அணிவித்து, அவர்களுக்கு இனிப்புகள் வழங்கி கவுரப்படுத்தியுள்ளார்.

இந்த நிகழ்வு கண்டனத்துக்குரியது. ஒரு மத்திய அமைச்சர் இப்படி வெளிப்படையாக கொலை குற்றவாளிகளை கவுரவப்படுத்திருப்பது மன்னிக்க முடியாத செயல்.கொலை குற்றம் சாட்டப்பட்டு தண்டனை பெற்று தற்போது ஜாமீனில் வெளிவந்திருப்பவர்களை, பொறுப்பு மிக்க மத்திய அமைச்சர் ஒருவர் மரியாதை செய்திருப்பது மிகவும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. மேலும் அது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். இதன்மூலம் அவர்கள் எதை உதாரணப்படுத்த முயற்சிக்கிறார்கள்? உணர்ச்சிமிக்க பாமர மக்களின் மனதில் இதுபோன்ற செயல்கள் தவறான தாக்கத்தை ஏற்படுத்தும்.

மத்திய அமைச்சர் சின்ஹாவின் செயல் அரசியல் நாகரீகத்துக்கு அப்பாற்பட்ட, சட்டத்தின் ஆட்சி மீது சவாரி செய்யும் செயலாகும். இந்திய வரலாற்றில் இது கீழான, மட்டகரமான நிலையாகும்.

அமைச்சரின் இந்த செயல், பா.ஜ.க. அரசின் நாடகத்தை வெட்ட வெளிச்சமாக்குவதோடு அவரது கட்சியின் உண்மையான பிம்பத்தை பிரதிபலிக்கிறது. இப்படிப்பட்ட, அறிவற்ற அமைச்சர்கள் உடனடியாக பதவிநீக்கம் செய்யப்பட வேண்டும்.

ஜார்கண்ட் மாநிலம், அடித்துக் கொல்லும் குற்றத்தில் கைதேர்ந்த மாநிலம். புனிதமான பசு என்ற போர்வையில் இந்த கொடுஞ் செயல்கள் நிகழ்த்தப்படுகின்றன. கொலையாளிகளுக்கு நீதிமன்றங்கள் சுதந்திரம் அளிப்பது, நீதி மறுப்பே தவிர வேறில்லை. வலுவான சான்றுகள் இருந்தும் கூட, கொலையாளிகளை பிணையில் விடுவித்திருப்பது கொலையாளிகள் இலகுவில் தப்பித்துவிடலாம் என்ற சமிக்ஞையை மக்கள் மனதில் ஏற்படுத்தும்.

அமைச்சர் ஜெயந்த் சின்ஹாவின் செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற மனபான்மையுள்ள அமைச்சர்கள் தேசத்தை அழித்துவிடுவார்கள். இதன் மூலம் வன்முறையும், சட்டமீறலும் பரவ வாய்ப்பு ஏற்படுகிறது.”

மேற்கண்டவாறு தேசிய தலைவர் எம்.கே.ஃபைஜி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..