முதுகுளத்தூர் அருகே 153 பயனாளிகளுக்கு ரூ.49.43 லட்சம் அரசு நலத்திட்ட உதவிகள் ..

முதுகுளத்தூர் அருகே நடந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 153 பயனாளிகளுக்கு ரூ.49.43 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நடராஜன் வழங்கினார். 

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே சாத்தனூர், தட்டான்குடியிருப்பு பகுதியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாவட்ட ஆட்சியர் நடராஜன் தலைமையில் இன்று (12/97/2018) நடந்தது. 

அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி மாவட்ட ஆட்சியர் நடராஜன் பேசுகையில், ‘ இன்று நடக்கும் முகாம் குறித்து இக்கிராம மக்களுக்கு முன்னறிவிப்பு செய்து 181 முன் மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு தகுதியான மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. முகாமில் தேர்வு செய்யப்பட்ட தகுதியான 153 பயனாளிகளுக்கு ரூ.49,43,460 அரசு நலத்திட்டங்கள் மற்றும் கடனுதவிகள் வழங்கப்பட்டது. சாத்தனூர், தட்டான்குடியிருப்பு பகுதி வளர்ச்சிக்காக 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்க ரூ.4.99 லட்சம், ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கழிப்பறை மராமத்து , கட்டட சீரமைப்பு பணிகளுக்கு  ரூ.16.04 லட்சம் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இப்பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். வளரும் மாவட்டமாக தேர்வு செய்யப்பட்ட ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல் கட்டமாக 34 வருவாய் கிராமங்களில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  கிராம சுயாட்சி இயக்கம் திட்டத்தின் கீழ் 2ம் கட்ட பணிகள் தற்போது துரிதப்பட்டுள்ளது. 

இதன்படி அங்கன்வாடி மையங்களை சுத்தமாக வைத்துக்கொள்ள போஷன் அபியான் திட்டம், விவசாயிகள் நலன் மேம்பாட்டிற்கு கிஷான் கல்யாண் அபியான் திட்டம் மூலம் பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் பராமரிப்பு, பாதுகாக்கப்பட்ட குடிநீர், தண்ணீர் வசதியுடன் கூடிய கழிப்பறைகள் ஆகியவற்றை 100 சதவீதம் பூர்த்தி செய்து தன்னிறைவு பெற்ற கிராமங்களாக உருவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

மாவட்டத்தில் நீர், நில வள திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் வட்டத்தில் 22 கண்மாய்கள், பரமக்குடி வட்டத்தில் 31 கண்மாய்கள், ரூ.20.51 கோடி மதிப்பில் புனரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. நீடித்த, நிலையான மானாவாரி இயக்கத்தின் கீழ் 98 ஊரணிகள் ரூ. 90 லட்சத்தில் ஆழப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. குடிமராமத்து பணி திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் ரூ.31.20 கோடியில் 64 கண்மாய்களில் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இவ்வாறு அவர் பேசினார். 

இம்முகாமில் பரமக்குடி சார் ஆட்சியர் விஷ்ணுசந்திரன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் காளிமுத்து, கூட்டுறவு சங்க இணை பதிவாளர் முருகேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ராஜா, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் செல்லத்துரை, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை, மாவட்ட வழங்கல் அலுவலர் மதியழகன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல அலுவலர் சிவதாஸ் மற்றும் இதர துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

புனித ரமலான் வாழ்த்துக்கள்..