1977 தமிழக அரசியல் வரலாறு மீண்டும் திரும்புமா? – சிறப்புக் கட்டுரை..

பேரறிஞர் அண்ணாவின் ஆட்சி காலத்தில் திமுகவின் இரட்டை குழல் துப்பாக்கிகளாக கலைஞர் கருணாநிதியும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும் இருந்து வந்தார்கள்.
அப்போதைய திமுகவின் மாநில பொருளாளராக எம்.ஜி.ஆர் சிறப்பாக பணியாற்றி வந்த நேரமது.அண்ணாவின் மறைவுக்கு பின் திமுகவின் அரசியல் பயணத்தில் பல்வேறு மாற்றங்கள் அரங்கேறியது.
கலைஞருக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே ஏற்பட்ட அதிகார போட்டியினால் திமுகவை விட்டு எம்.ஜி.ஆர் வெளியேறி அண்ணா திமுக என்னும் தனிக்கட்சி உருவாக்கிய போது அப்போதைய தலைவர்கள் பெரும்பாலும் ஆளும் கட்சியாய் இருந்த திமுகவுடனே இருந்தார்கள்.
திமுகவின் பெரும்பாலான தொண்டர்கள் தான் எம்.ஜி.ஆர் உருவாக்கிய அண்ணா திமுகவில் இணைந்து பயணித்தார்கள்.
புரட்சித்தலைவர் என்ற மக்களின் அடைமொழியோடு தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்ட எம்.ஜி,ஆர் ஒவ்வொரு கிராமமாய் ஏறி இறங்கினார்.கிராமப் பகுதிகளில் தான் எம்.ஜி.ஆரின் அண்ணா திமுக என்ற கட்சி ஆழமாய் வேரூன்றியது.
1977 சட்டமன்ற தேர்தலில் ஆளும் கட்சியான திமுகவுக்கும் எம்.ஜி.ஆரின் அண்ணா திமுகவுக்கும் தான் நேரடி போட்டி ஏற்பட்டது.அப்போது காங்கிரஸ் தலைமையில் மூன்றாவது அணியும் களமிறங்கியது.
முதன் முதலாக பொது தேர்தலை தனித்து நின்று சந்தித்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் அண்ணா திமுக 130 இடங்களை வென்று ஆட்சியை பிடித்தது.திமுக 48 இடங்களையும் காங்கிரஸ் 27 இடங்களையும் பிடித்தது.
1980ல் நடைபெற்ற தேர்தலிலும் எம்.ஜி.ஆரின் அண்ணா திமுக கம்யூனிஸ்டுகளுடன் கூட்டணி வைத்து 162 இடங்களை கைப்பற்றி இரண்டாவது முறையாகவும் ஆட்சியை தக்க வைத்தது.திமுக 37 இடங்களை மட்டும் பெற்று பரிதாப நிலையில் இருந்தது.
இரண்டு தேர்தல்களிலும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு காங்கிரஸ் செல்வாக்கினை பெறவில்லை என்பதால் 1984 தேர்தலில் மக்கள் செல்வாக்கும் தொண்டர்கள் செல்வாக்கும் கொண்ட எம்.ஜி.ஆருடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது.
அந்த தேர்தலில் அண்ணா திமுக 132 இடங்களையும் காங்கிரஸ் 61 இடங்களையும் வென்று மூன்றாவது முறையாகவும் எம்,ஜி,ஆர் ஆட்சியை தக்க வைத்து கொண்டார்.திமுக 24 இடங்களை மட்டும் பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்து பரிதாபமாய் காட்சியளித்தது.
எம்.ஜி.ஆரின் அண்ணா திமுகவுடன் கூட்டணி வைத்ததால் தான் காங்கிரஸாலும் அரசியல் செல்வாக்கினை தக்க வைக்க முடிந்தது.எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பின்னர் தமிழக அரசியல் கள நிலவரம் தலைகீழாக மாறியது.
பின்னர் திமுக,அதிமுக என மாறி மாறி தமிழக அரசியலில் ஆட்சிகள் அமைந்தன.இப்போதைய தமிழக அரசியல் நிலவரத்தை ஒப்பிட்டு பார்க்கும் போது 1977 அரசியல் களநிலவரம் தான் நினைவுக்கு வருகின்றன.
அதிமுகவை விட்டு வெளியேறிய TTV. தினகரனுக்கு பின்னால் அதிமுகவின் பெரும்பாலான தொண்டர்கள் அணிவகுத்து நிற்பதையும் ஆட்சி அதிகாரம் இருப்பதால் அதிமுகவின் பெரும்பாலான நிர்வாகிகள் அதிமுகவோடு நிற்பதையும் காண முடிகிறது.
1984 தேர்தலில் எம்.ஜி.ஆரோடு கூட்டணி வைத்து அரசியல் புத்துயிர் பெற்றது போல் 2019 தேர்தலில் TTV. தினகரனின் அமமுகவோடு கூட்டணி வைத்து மீண்டும் புத்துயிர் பெற காங்கிரஸ் முனைப்பு காட்ட வாய்ப்புண்டு?
காங்கிரஸ்-TTV. தினகரனின் அமமுகவோடு விடுதலை சிறுத்தைகள்-வேல்முருகனின் தமிழர் வாழ்வுரிமை கட்சி-SDPI போன்ற மக்கள் நல அமைப்புகளும் இணைந்து ஓரணியாக போட்டியிட்டால் தமிழக அரசியல் கள நிலவரம் மாறுவதற்கு முத்தான வாய்ப்புண்டு? என்பதே அரசியல் நோக்கர்களின் கணிப்பாகும்.
தமிழகத்தில் இழந்த செல்வாக்கினை நிலை நிறுத்திட காங்கிரஸுக்கு கிடைத்துள்ள அருமையான வாய்ப்பினை அக்கட்சி பயன்படுத்துமா?அல்லது மத்தியில் இரண்டொரு எம்.பி.க்கள் கிடைத்தால் போதும் என தமது கூட்டணி கணக்கினை மாற்றிக் கொள்ளுமா?என்பதை தேர்தல் நெருங்கும் போது தெரிந்து கொள்ளலாம்?
-கீழை ஜஹாங்கீர் அரூஸி.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..