2011 ஆம் ஆண்டிலிருந்து 13,386 பெண் குழந்தைகளுக்கு ரூ.28.70 கோடி வைப்பு நிதி …

பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கடந்த 2011ம் ஆண்டு முதல் தற்போது வரை பயனடைந்த 13,386 பெண்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசு சமூக நலத்துறை மூலம் குழந்தைகள், பெண்கள், மூன்றாம் பாலினத்தவர், முதியோர் நலனை பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பெண் சிசுக் கொலையை முழுமையாக ஒழித்தல், ஆண் குழந்தையை மட்டும் விரும்பி ஏற்கும் நிலையை மாற்றுதல், பெண் கல்வியை ஊக்கப்படுத்தல் போன்ற பெண் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு முதலமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் 1992ல் முதன் முதலில் துவங்கப்பட்டது.
இத்திட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதிகள்:  35 வயது தம்பதியரில் ஒருவர் கருத்தடை அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும். குடும்பத்தில் ஒன்று அல்லது இரண்டு பெண் குழந்தை மட்டும் இருக்க வேண்டும். ஆண் குழந்தை இருக்கக்கூடாது. பின்னாளில் ஆண் குழந்தையை தத்தெடுக்கக்கூடாது. விண்ணப்பிக்கும்போது பெற்றோர் அல்லது அவர்களின் பெற்றோர் தமிழகத்தில் 10 ஆண்டு வசித்தவராக இருக்க வேண்டும். திட்டம் எண் 1ன் கீழ் ஒரு பெண் குழந்தை மட்டும் இருப்பின் அக்குழந்தை பிறந்த 3 ஆண்டுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். திட்டம் எண் 2ன் கீழ் 2 பெண் குழந்தைகள் மட்டும் எனில் 2வது பெண் குழந்தை பிறந்த 3 ஆண்டுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆண்டு வருவாய் ரூ.72 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
இத்திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்புவோர் பிறப்பு , பெற்றோரின் வயது , குடும்ப நல அறுவை சிகிச்சை (சம்பந்தப்பட்ட அரசு அல்லது தனியார் மருத்துவமனை), வருமானம், ஆண் குழந்தை இன்மை, இருப்பிடம் ஆகிய சான்றிதழ்களுடன் இ&சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
 இத்திட்டத்தின் கீழ் முதலீடு செய்யப்படும் வைப்பு தொகை 5 ஆண்டு நிறைவில் புதுப்பிக்கப்பட்டு 18 ஆண்டு முடியும்போது வட்டியுடன் முதிர்வு தொகை 10ம் வகுப்பு பொதுத்தேர்வெழுதிய பெண் குழந்தைக்கு வழங்கப்படும். இத்திட்டம் அகதிகள் முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கடந்த 2011ம் நிதி ஆண்டில் இருந்து தற்போது வரை 13,386 பேருக்கு ரூ.28,70,68,400 மதிப்பில் பெண் குழந்தைகளின் பெயரில் நிரந்த வைப்பு தொகையாக தமிழக மின்விசை நிதி, அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டு வைப்பு தொகை ரசீது குழந்தையின் பெற்றோரிடம் வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்ட பயனாளி நயினார்கோவில் குளத்துர் கிராமத்தைச் சேர்ந்த  அர்ஜூனன் மகள் அபர்ணா கூறியதாவது: என் தந்தை ஓர் விவசாயி. விவசாயக் கூலி மூலம் குடும்பச் செலவு, படிப்பு செலவு கவனித்து வந்த என் தந்தை உடல் நலக்குறைவால் சில நாட்களுக்கு இறந்து விட்டார். இதையடுத்து என் தாய் சம்பாத்தியத்தில் குடும்பம் நடத்துகிறோம். சமூகநலத்துறை மூலம் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் என் பெயரில் என் தந்தை வைப்பு தொகை செலுத்தியிருந்தார். தற்போது நான் பிளஸ் 2 முடித்து நிலையில் வைப்பு தொகைக்கான முதிர்வு தொகை ரூ.42,601 கிடைத்துள்ளது. இத்தொகை என கல்லூரி கல்விக்கு பேருதவியாக இருக்கும். முதிர்வு தொகை வழங்கிய முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், தமிழக அரசுக்கு என் குடும்பம் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..