‘தமிழ்நாடு பொன்விழா ஆண்டு’ விழாவினை முன்னிட்டு, கல்லூரி மாணாக்கர்களுக்கான மாவட்ட அளவிலான போட்டிகள் துவக்கம்…

‘தமிழ்நாடு பொன்விழா ஆண்டு” விழாவினை முன்னிட்டு, இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் முகமது சதக் தஸ்தகீர் கல்வியியல் கல்லூரி வளாகத்தில் இன்று (27.06.2018) தமிழ்வளர்ச்சித் துறையின் சார்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் கல்லூரி மாணாக்கர்களுக்கான கவிதைப்போட்டி, கட்டுரைப்போட்டி மற்றும் பேச்சுப்போட்டிகளை துவக்கி வைத்தார். இவ்விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன், பேசியதாவது: தமிழ்மொழியின் வரலாறும், தமிழ் மக்களின் கலாச்சாரமும் வரலாற்றில் மிகவும் தொன்மை வாய்ந்ததாக கருதப்படுகிறது. உலகில் உள்ள அனைத்து மொழிகளையும் ஒப்பிடுகையில் நமது தமிழ் மொழியானது மிகச் சிறந்த இலக்கண வளமும், இலக்கிய வளமும் நிறைந்த மொழியாக விளங்குகின்றது. ஆங்கிலேயர்கள் காலத்தில் தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களை ஒருங்கிணைத்து ‘பிரசிடென்சி ஆப் மெட்ராஸ்” என்று ஆங்கிலத்திலும், ‘சென்னை மாகாணம்” என்று தமிழிலும் அழைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சென்னை மாகாணம் என்ற பெயரை தமிழ்நாடு என பெயர் மாற்றப்பட வேண்டும் என தியாகி சங்கரலிங்கனார் அவர்கள் கோரிக்கை முன் வைத்தார்கள்.

அதனடிப்படையில் பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசின் மூலம் 1967ஆம் ஆண்டு அப்போதைய ‘சென்னை மாகாணத்திற்கு’ ‘தமிழ்நாடு” என்று பெயர் சூட்ட சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, நமது மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டது. வரலாற்று சிறப்புமிக்க இந்த நிகழ்வின் 50வது ஆண்டு தொடங்குவதை முன்னிட்டு, தமிழ்மொழியின் சிறப்பினையும், நமது கலாச்சாரத்தின் பெருமையையும் சிறப்பிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு ‘தமிழ்நாடு பொன்விழா ஆண்டாக” கொண்டாட அறிவுறுத்தியுள்ளது.  அதனடிப்படையில் இராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்வளர்ச்சித்துறை, கலைபண்பாட்டுத்துறை, விளையாட்டுத்துறை சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள், மாணவ, மாணவியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. அந்தவகையில் இன்றைய தினம் தமிழ்வளர்ச்சித் துறை சார்பாக, கல்லூரி மாணாக்கர்களுக்கு மாவட்ட அளவிலான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்படுகின்றது.

மாவட்ட அளவில் நடைபெறும் இப்போட்டியில் வெற்றிபெறும் மாணாக்கர்களுக்கு முதல் பரிசு ரூ.5000/- இரண்டாம் பரிசு ரூ.3000/- மூன்றாம் பரிசு ரூ.2000/- மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. மேலும் மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவியர்கள் மாநில அளவில் நடைபெறவுள்ள போட்டிகளில் பங்குபெற அனுமதிக்கப்படுவார்கள். மாநில அளவில் வெற்றிப்பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.50,000/- மற்றும் 4 கிராம் தங்கப்பதக்கம், இரண்டாம் பரிசு ரூ.25,000/- மற்றும் 4 கிராம் தங்கப்பதக்கம், மூன்றாம் பரிசு ரூ.10,000/- மற்றும் 4 கிராம் தங்கப்பதக்கம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் சென்னையில் நடைபெறவுள்ள தமிழ்நாடு 50வது ஆண்டு பொன்விழாவில் வழங்கப்படவுள்ளது. இப்போட்டியில் கலந்து கொண்டுள்ள மாணவ, மாணவியர்கள் அனைவரும் போட்டி, பரிசு என்பதை கடந்து நமது மொழியின் பெருமையினை மனதிலேந்தி தமிழ்வளர்ச்சிக்காக பாடுபட வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன், பேசினார்.

இவ்விழாவில் தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் வெ.குமார், முகமது சதக் தஸ்தகீர் கல்வியியல் நிறுவன முதல்வர் முனைவர்.சு.சோமசுந்தரம், இராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர்.அ.வள்ளியம்மை,இராஜா கலைக்கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் முனைவர்.க.காளீஸ் பிரபு உள்பட அரசு அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..