கஞ்சாவின் தாக்கத்தால் வன்முறை பூமியாகி வரும் கீழக்கரை…சிறப்புக்கட்டுரை..

வலிமார்களும் இறைநேசர்களும் நிறைந்து வாழும் மண்ணில் போதிய மார்க்கப்பற்றுதலும் கண்ணியம் பேணப்படுதலும் இல்லாமல் போனதால் இன்றைய இளம் தலைமுறை கஞ்சா, பான்பராக், பீடி, சிகரெட்,குடி போன்ற தீய பழக்கத்திற்கு அடிமையாகி கிடக்கிறது.

ஒரு காலத்தில் சிறார்களின் சண்டை என்பது கையால் ஒருவருக்கொருவர் குத்தி கொள்வதும் பிறகு பெரியவர்கள் தலையிட்டு சமாதானம் செய்து வைப்பதுமாக இருந்தது.

ஆனால்…இன்றோ,உயிர் மற்றும் உடல் சேதம் உண்டாக்கும் வகையில் இரும்பு ஆயுதங்களை கொண்டு எடுத்த எடுப்பிலேயே வெறி கொண்டு தாக்கும் குரூர புத்தியை இளைஞர்களுக்கு கொடுக்கிறதென்றால் அதற்கு கஞ்சாவே பிரதான காரணியாகும்.

முன்னொரு காலத்தில் குடிப்பதற்கே அஞ்சிய மக்கள் இன்றைக்கு நினைத்த நேரமெல்லாம் குடிக்கவும் கஞ்சா புழங்குவதும் சர்வ சாதாரணமாகி விட்டது.

பெரியவர்களை கண்டால் தூக்கி கட்டிய கைலியை கீழிறக்கி மரியாதை கொடுத்து பழகிய இளைஞர்களின் காலத்தில் நமதூரில் வன்முறையை பார்த்ததில்லை.

ஆனால் இன்றோ தகப்பனுக்கு முன்பாகவே பாட்டிலை உடைத்து குடிக்கும் குடிகார சமுதாயமாக இன்றைய இளைஞர்களில் ஒரு கூட்டம் உருவெடுத்துள்ளது அமைதியை விரும்பும் மக்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகும்.

பள்ளிக்கூடங்களின் வாயில்களில் மாணவர்கள் விரும்பும் மாங்காய்,நெல்லிக்காய்,எலந்தைப்பழம் போன்றவைகள் விற்கப்படும் வரை வன்முறையை கண்டதில்லை மகான்கள் மறைந்து வாழும் எமது ஊர் கீழக்கரை.

ஆனால்..இன்றோ ஒவ்வொரு பள்ளிக்கூட வாயில்களிலும் நேரடியாகவோ மறைமுகமாகவோ சில சமூக விரோதிகளால் விற்கப்படும் கஞ்சாவுக்கு அடிமையாகி தங்களின் எதிர்கால கனவுகளை வன்முறையால் தொலைத்து நிற்கிறது மாணவர் சமுதாயம்.

இனிமேலாவது நல்லதொரு சமுதாயம் உருவாக வேண்டுமென்றால் 5 வயது நிரம்பிய பிள்ளைகளை இஸ்லாமிய மார்க்க கல்வி கற்று கொடுக்கும் மதரசாக்களுக்கு அனுப்புவதை பெற்றோர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

போதிய வயதில் போதிய மார்க்க ஞானம் இல்லாமல் வளர்ந்த பிள்ளைகளால் மட்டுமே நெறி தவறி வாழ முடிகிறது என்பதை பல்வேறு வன்முறை நிகழ்வுகளில் பார்த்து விட்டோம்.

இனியாவது நல்லதொரு இளைஞர் சமுதாயத்தை வார்த்தெடுப்போம்.

-கீழை ஜஹாங்கீர் அரூஸி.

சத்தியபாதை மாத இதழ் ..

சத்தியபாதை மாத இதழ் ..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..