மனதில் விரியும் அந்த நாள் பெருநாள் தினம்…

கீழக்கரை… ரமலான் மாதம் பிறை 27 பிறந்தவுடனே எல்லோருடைய மனிதிலும் பெருநாள் குதூகலம் கிளம்பிவிடும்.  சிறப்பான முறையில்  26 நோன்பு திறந்தவுடனே 27 இரவுத் தொழுகைக்கு ஆயத்தமாகிவிடுவார்கள்.. வயதானவர்கள் வரை சிறு குழந்தைகள் வரை..  பள்ளிவாசலை மிதிக்காதவர்கள் கூட சொந்தங்களுடனும், பந்தங்களுடனும் நீண்ட 27ம் நாள் இரவுத் தொழுகை.  பள்ளி வாயிலில் சில மணித்துளிகள் தொழுது விட்டு கடைசியில் கேட்க இருக்கும் சிறப்பு துஆவுக்காக காத்து இருக்கும் இஞைர் கூட்டம்.  இரவு நேரத் தொழுகையில் கொடுக்கப்படும் சிறப்பான சேமியா கஞ்சி, பிஸ்கட்டுகளை ஏக்கத்துடன் பார்த்து கொண்டே தொழும் விளையாட்டு பிள்ளைகள்.  அந்த தொழுகை நேரத்திலும் அகல்களில் கஞ்சி சட்டிகளை தள்ளிவிட்டு ஆலிம்சாக்களை  வம்புக்கிழுக்கும் விடலைகள்.  இரவுத் தொழுகை முடிந்தவுடன் நண்பர் வட்டத்துடன் இரவு நேரக் கடைத் தெருவுக்கு சென்ற மீணடும் நொறுக்குத் தீனியுடன் இஞ்சி சாயா இப்படித்தான் தொடங்கியது அந்தக் கால கீழக்கரை பெருநாட்கள்.

27 அன்று தொடங்கும் பெருநாள் குதூகலம் எத்தனை நோன்புகள் வைத்தோம் என்ற விவாதத்தோடு ஃபித்ரா வசூலின் கணக்கு வழக்கோடு, பெருநாளைக்கு வரப்போகும் வருமானத்தின் கனவுகளோடு.  28 முதல் 29 வரை தனக்கு பெற்றோர் எடுத்து வந்த பெருநாள் துணிமணிகளை தான் விரும்பிய ஹீரோவின் உடையன பெருமையுடன் தொடங்கும் சிறார்களின் பெருநாள் சண்டை….  29 இரவே டவுன் ஹாஜி பெருநாள் இரவை அறிவித்துவிடுவார் என இஷா தொழுகைக்கு வந்து அடுத்த நாள் பெருநாள் என்பதை உறுதிப்படுத்தும் சந்தோசம்.

பெருநாள் இரவு என்றவுடன் இனம் புரியாத சந்தோசத்துடன் களை கட்டும் கீழக்கரை தெருக்கள். விடிய விடிய சந்தோசத்துடன் சுற்றி வரும் இளைஞர் கூட்டம்.  பல வருடம் வெளிநாட்டில் உழைத்து விட்டு குடும்பத்துடன் பெருநாள் கொண்டாட ஊர் வந்திருக்கும் வாப்பாமார்கள் சந்தோசத்துடன் பிள்ளைகளின் கைப்பற்றி உலா வரும் அழகிய காட்சி. கடைசி நேரத்தில் பெருநாளைக்காகவே பார்த்து பார்த்து வாங்கப்படும் மார்டின் கலர் கலர் சட்டைகள்.. இரவு பத்து மணிக்கே பெருநாள் கறி வாங்க செல்லும் குடும்பத் தலைவர்கள்.  மறுபுறம் ஈரல்,  பல்லுக்குத்தி என வாங்கி விளையாட்டாக சுட்டுத் திங்கும் இளைஞர் கூட்டம்.  இரவில் தொடங்கி அதிகாலை வரை பரபரப்பாக வட்டலப்பம் அடை கறி என சமையல் கூடத்தில் இருக்கும் உம்மாமார்கள்.  மனைவி வீட்டுக்கு கறி வாங்கி செல்லும் புது மாப்பிள்ளைகள்..

பெருநாள் காலை வட்டலப்பத்தை சுவைத்து விட்டு தொழுகைக்கு செல்லும் பரபரப்பு. மனைவியை சந்தோசப்படுத்த அங்கு ஒரு காலை உணவு,  உம்மாவை சந்தோசப்படுத்த அங்கு கொஞ்சம் இடியாப்ப சோறு.  காலையில்  சென்னையில் இருந்து வரும் ரயிலையும், பஸ் நேரத்தையும் வைத்து ஜமாத் பள்ளிகளில் மட்டுமே பெருநாள் தொழுகை. தொழுகை முடிந்தவுடன் அனைத்து ஜமாத்தும் ஒன்று சேர கூடும் ஜும்ஆ பள்ளிவாசல் அங்கிருந்து ஒவ்வொரு ஜமாத்தினரும் தங்களின் தெரு பள்ளிகளுக்கு செல்வது அதுவே பெருநாள் அடையாளம் என அங்கு காத்திருக்கும் மனைவிமார்கள்   என கவிதைய கடந்து செல்லும் பெருநாள் காலை.

பெருநாள் அன்று மாலை நேர மணல் மேட்டிற்காக காத்து இருக்கும் சின்னஞ்சிறு குழந்தைகள்.. மணல் மேட்டுக்கு ஒரு ரூபாய் கொண்டு வரும் தோழனை பொறாமையுடனும்,  பெறுமையுடன் பார்க்கும் நட்புக் கூட்டம்.  10 பைசா மஜா பால் கலர் ஜஸ்,  10பைசா ஆச்சி இட்லி,  10 பைசா ராட்டிணம், 15பைசா பலூன் என 1 ரூபாயில் இன்னும் பல மன நிறைவோடும் சந்தோசத்துடனும் பெருநாள் கடந்து செல்லும்.  சூரியன் சாய்ந்த பின் தன் பெற்றோர்களுடன் பெண்கள் மட்டுமே வந்து செல்லக் கூடியதாக மாறும் இந்த இரவு மணல் மேடு. பெருநாள் இரவு சம்பிரதாயமாக கேகேஆர் ஹோட்டல் புரோட்டடா,  ஐயர் ஹோட்டல் இட்லி தோசையுடன் முடியும்.

இன்று நாகரீகம் வளர்ந்து விட்டது ஆனால் சந்தோசம் மறைந்து விட்டது. விஞ்ஞான நட்பு வட்டம் ஆயிரக்கணக்கில், ஆனால் ஒரு நிமிடம் முகம் பார்த்து சிரித்து பேச நட்புக்கு நேரம் இல்லை. 1ரூபாயில் சந்தோசமாக சென்ற மணல் மேட்டிற்கு இன்று 1000ரூபாய் கொண்டு செல்லும் குழந்தைகள் கூட்டம்,  ஆனால் கிடைப்பதோ சுகாதாரம் இல்லாத குப்பை உணவுகள்.

உண்மையான மார்க்கத்தை நாங்கள் சொல்கிறோம் என உருவாகிய இயக்கங்கள்.  இன்று இயக்கங்கள் மட்டும் பெருகவில்லை தெருவுக்கு பல தொழுகைபள்ளிகளுடன்.. ஆனால் அறிந்த மார்க்கத்தை கொண்டு இஸ்லாம் வலியுறுத்திய ஒற்றுமை மறைத்து,  இஸ்லாம் என்ற போர்வயில் இயக்கத்தின் பெயரால் ஒற்றுமை மறைந்து சண்டை சச்சரவுகளுடன் ஒரே பெருநாள் மூன்று நாட்கள் தொழும் வினோதம்,  அதையும் தாண்டி ஒரே நாளில் பெருநாள் வந்தாலும் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒரே இடத்தில் தொழுத நிலை மாறி பல இடங்களில் தொழும் நிலை.

இதுதான் ஒற்றுமையா???.. மீண்டும் அந்த சந்தோச பெருநாள் திரும்புமா??

இதுதான் இயற்கையான சந்தோசத்தை இழந்த செயற்கை வளர்ச்சி..

 

புனித ரமலான் வாழ்த்துக்கள்..

2 Comments

  1. மலரும் நினைவுகள் அருமை..
    பெருநாளை உறுதிப்படுத்தி பஞ்சாயத்து போர்டில் சங்கு ஊதப்படும் போது ஏற்படும் உற்சாகம் மிஸ்ஸிங்

  2. மத்திய அரசாணை இதுவரை தயாராக்கி தலைமை ஹாஜிக்கு அனுப்பி வைத்திருப்பார்கள் இந்த தேதியில்தான் பெருநாள் கொண்டாட வேண்டுமென்று, நபிவழியைப் பின்பற்ற மறந்த, மறுக்கும் கூட்டமும் அதற்கு ஒத்து ஊதுவதற்கான தயார் எடுப்பில் இருப்பார்கள். வளைகுடா நாடுகளுன் ஒன்றாக நோன்பைத் துவங்கும் வாய்ப்பைத் தந்த வல்ல ரகுமான் ஈகைத் திருநாளாம் நோன்புப் பெருநாளை எப்படி முடிவு செய்து வைத்திருக்கானோ?
    அனைவருக்கும் எமது ஈகைத் திருநாளாம் “ஈத் அல் ஃபித்ர்” நல்வாழ்த்துக்கள்.
    அன்புடன் சாதிக் MJ தம்மாமிலிருந்து….

Comments are closed.