சகோதரியின் அழகிய ரமலான் சிந்தனை…

இறைவன் உடுத்த உடை வழங்குகிறான்.. பெற்று அணிந்து கொண்டு மானத்தை மறைத்து கொள்கிறோம்…..
இறைவன் வயிற்று பசிக்கு உணவு வழங்குகிறான்.. உண்டு வயிற்றையும் நிரப்பி கொள்கிறோம்…
இறைவன் வசிக்க வசிப்பிடம் தருகிறான்.. அதிலே வெயிலும் மழையும் தெரியாத வண்ணம் வசித்து கொள்கிறோம்…
ஆனால் இத்தனையையும் தந்த இறைவனுக்கு நன்றி செலுத்திட மட்டும் நமக்கு மனம் வந்திடுவதில்லையே…😢
தொலைக்காட்சி பெட்டிக்கு நாம் வழங்கிய தொகைக்கான கால அவகாசம் முடிந்ததும் ஒரு நாள் கூட அதிகம் செல்லும் முன் அதற்கான மறு தொகையை செலுத்தி விடுகிறோம்…
கைபேசிக்கு அதற்கான கால அவகாசம் முடியும் முன்னரே அதற்கும் தொகை போட்டு விடுகிறோம்… 
ஆனால் நமது அமல்களை மட்டும் பூஜ்யமாகவே வைத்திருக்கிறோமே…
சிறு வயதிலிருந்து நமது தாய் தகப்பனார் மூலமாக நமக்கு இறையச்சத்தை ஊட்டினான் நம் இறைவன்…
ஆனால் அதை அலட்சிய படுத்தி நாட்களை கடத்தி விட்டோம்…
குடும்பத்தாரின் மார்க்கப்பற்றை காட்டி இறையச்சத்தை ஊக்குவித்தான்…
அப்போதும் அசட்டையாக இருந்து விட்டோம்…
உறவுகளின் கஷ்டங்களை வைத்து இறையச்சத்தை ஆர்வமூட்டினான்…
அப்பொழுதும் கண்டு காணாமல் கடந்து விட்டோம்…
தனக்கான சோதனைகளை கொடுத்தும் இறையச்சத்தை நினைவூட்டினான்…
அப்பொழுதும் அழுகையோடு நிறுத்தி கொள்கிறோம்… 
தன் ஆலயத்திற்கே அழைத்து வந்து இறையச்சத்தை பாடமாய் புகட்டினான்…
அங்கும் நமது கல் நெஞ்சம் கரையவில்லை…
இறையச்சத்திற்கான மாதமாய் இந்த ராமலானையும் வருடா வருடம் நம்மை அடைய செய்கிறான்…
ஒவ்வொரு வருடமும் சிறிதும் மாற்றமில்லாமல் உணவை மட்டும் அருந்தி விட்டு சிறிதும் இறையச்சம் இன்றி தலையணையை நோக்கி உறங்க சென்று விடுகிறோம் இறைவனை வணங்காமலேயே….
இதற்கு மேலும் என்ன சந்தர்ப்பம் தேவை நமக்கான இறையச்சத்திற்கு…😢
வயிற்றிற்கு உணவை ஏற்றி விட்ட பின்னர், வாழ்வின் கண்ணீரின் பின்னர் என நேரத்திற்கு நேரம் நமக்கே கேடு விளைவிக்க கூடிய சிகரெட்டை கையில் தூக்க கூடிய நமக்கு ஐந்தில் ஒரு நேரம் கூட இறைவனை நினைத்து வணக்கத்தின் மூலம் நன்றி செலுத்திட நேரமில்லையோ….😢
கை பேசியை மணிக்கணக்காக பார்த்து பார்த்து மனிதனுக்கென இறைவன் சிறப்பாய் தந்திட்ட சிந்தனை எனும் ஆறாம் அறிவையே இழந்து கொண்டு வருகிறோமே…
பெயரளவில் மட்டும் ஆயிஷாவாகவும் முஹம்மதாகவும் வாழும் நாம் என்று தான் வாழ்க்கையில் செயலாற்ற உள்ளோம்…😢
நண்பர்ளோடு அமர்ந்து வீண் அரட்டைகளுக்கு ஒதுக்கும் நேரத்தில் சிறிதை கூட முழு வாழ்வையும் நமக்காக தந்திட்ட இறைவனுக்கு ஒதுக்குவதில்லை நாம்..😢
நமது இந்த நிலை கண்டு துடித்து கதறி அழும் நமது உறவுகளின் அழு குரலை கூட ஒரு பொருட்டாக மதித்திடாமல் கடந்து செல்கிறோம்…
தான் நபியாக இருந்த பொழுதும் தன்னால் நேர்வழிக்கு அழைத்து வர இயலாத தன் மனைவிமார்களை நினைத்து நூஹ் நபி லூத் நபி வருந்தியது போல நம்மை நினைத்து நமது குடும்பத்தாரும் வருந்தினாலும் நமது நிலை மாறிடுவதில்லை….
கொண்டதே கொள்கை என நாம் பயணிக்கும் பிடிவாத குணத்தை நேரான வழியின் பாதையில் காட்டினாலும் மறுமையில் வெற்றியை பெறலாம்..
இறைவன் சொல்வது போல மனிதன் நஷ்டத்தில் தான் இருக்கிறான்… 
இத்தனை ராமலானயும் தவற விட்டுவிட்டோம்…
இந்த ரமலானில் பாதியையும் தவற விட்டுவிட்டோம்..
மீதி நாட்களையாவது சிந்தனை செய்து இறையச்சத்தின் சேகரிப்பிற்காக மாற்றுவோம்…
மரணத்தை சுமந்த வண்ணமே உலகில் வலம் வருகிறோம்…
எந்த நொடி வேண்டுமானாலும் உலக வாழ்க்கை முடிந்து விடலாம்…
இன்று நமக்காக அழுகின்ற நமது உறவுகளெல்லாம் நாளை மறுமையில் எனது தவறுகளுக்கு இவரை பிடித்துக்கொள் என மாற்றி கதற ஆரம்பித்து விடுவார்கள்..
எனவே அந்த நாளும் மரணத்தின் அந்த நொடியும் வந்திடும் முன் இறைவனை நோக்கிய நேர்வழியின் பயணத்தை ஆரம்பம் செய்திடுவோம்…
அலட்சிய தன்மை போடுபோக்கு தனம் அனைத்தையும் பின் தள்ளி விட்டு இறையச்சத்திற்கும் இறைவனை வணங்கிடுவதற்கும் விரைந்திடுவோம்…
நரகத்தின் எரிபொருள் மனிதன் என இறைவன் எச்சரிக்கும் அந்த நரகத்தை விட்டும் நம்மை வெகு தூரப்படுத்திடும் வாழ்வை வாழ தொடங்கிடுவோம்.. 
இன்ஷாஅல்லாஹ்…
ஆக்கம்:- ✍உம்மு அஃப்ஸான்