மரண சாலையாக மாறி வரும் ECR சாலை – ஆய்வு செய்து விபத்துக்களை தடுக்க மாவட்ட நிர்வாகம் முயற்சி

கன்னியாகுமரி இருந்து சென்னை வரை சுமார் 800 கிலோ மீட்டர் தூரம் வரை நீளும் கிழக்கு கடற்கரை சாலை தூத்துக்குடி, கீழக்கரை, இராமநாதபுரம், அதிராம்பட்டினம், நாகப்பட்டினம், கடலூர், பாண்டிச்சேரி வழியாக செல்கிறது.. இந்த கிழக்கு கடற்கரை சாலை வழியாக பல்வேறு மாநிலங்களுக்கும் செல்லும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் நாள்தோறும் அதிவேகத்தில் சென்று வருகிறது. ஆனால் பல இடங்களில் விபத்துக்களை தடுக்கும் வகையில் முறையான எச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் இல்லாததால் நாளுக்குநாள் விபத்துக்கள் அதிகளவில் நடைபெற்று வருகிறது.

வாகன ஓட்டுனர்களுக்கு வேகத்தை கட்டுப்படுத்தும் விதமாக தேவையான இடங்களில் எச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் ஏற்படுத்துவது அவசியமாகிறது. கடந்த மாதத்தில் மட்டும் தொண்டி கிழக்கு கடற்கரை சாலையில் திருவாடானையில் 2 பேரும், நேற்று முன்தினம் திருப்பாலைக்குடியில் 4 பேரும் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். இவ்விபத்துக்களை தடுக்க வட்டார போக்குவரத்துறையினர் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.திருவாடானை தாலுகாவில் மட்டும் பாசிபட்டினம், வீரசங்கலிமடம், பழயணக்கோட்டை, கற்காத்தகுடி உட்பட 27 இடங்கள் விபத்து பகுதிகளாக ஏற்கனவே அறிவிக்கபட்டது.

மேலும் இந்த இடங்களில் விபத்துகளை தடுக்கும் வகையில் எச்சரிக்கை போர்டுகள், சிக்னல்அமைக்கவும் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது சம்பந்தமாக கிழக்கு கடற்கரை சாலையில் அடிக்கடி விபத்துகள் நடப்பது குறித்து ஆய்வு செய்ய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எஸ்.பி. ஓம்பிரகாஷ்மீனா நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டு இருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் ஆறுதலை ஏற்படுத்தி உள்ளது.