மாநில அளவில் மாற்று திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி

இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பின் (SIO) விளையாட்டுப் பிரிவான டிராக் ஃபோர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் (TFSC) சார்பாக கடந்த மூன்று வருடங்களாக பல்வேறு விளையாட்டுப் பிரிவினர்க்கான போட்டிகள் நடைபெற்று வருகிறது.  அதன் ஒரு தொடர்ச்சியாக மாநில அளவில் மாற்று திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நான்கு பிரிவுகளில் ஏபில்டு கோவை ட்ராபி (Abled Kovai Trophy) எனும் பெயரில் மே 13 காலை 10 மணி முதல் நீலாம்பூர், டெகத்லான் விளையாட்டு மைதானத்தில் வைத்து நடைபெற்றது.

இந்நிகழ்விலே 16 கைப்பந்து அணிகள், 5 கால்பந்து அணிகள், மற்றும் நூறுக்கும் மேற்ப்பட்டோர் குண்டு எறிதல், சதுரங்கம் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடினர். போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு ரூபாய் 30,000 ரொக்கப்பரிசு மற்றும் ரூபாய் 50,000 மதிப்புள்ள கோப்பைகளும் வழங்கப்பட்டன. பரிசு வழங்கும் நிகழ்வு இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பின் கோவை மாவட்ட தலைவர் சபீர் அகமது தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பார்க் இன்ஸ்டிட்யூட் CEO Dr.அனுசா , பேரா லிம்பிக் கோவை அசோசியேஷன் பொதுச்செயலாளர் ஆல்பர்ட் பிரேம்குமார், ஜமாத்தே இஸ்லாமி ஹிந்தின் கோவை பெரு நகர தலைவர் உமர் ஃபாரூக், சந்தோஷ் ட்ராபி தமிழ்நாடு அணியின் பயிற்சியாளர் அஸ்மதுல்லாஹ் பங்குபெற்று பரிசுகளை வழங்கினர்.

கால்பந்து போட்டியில் சேலம் அணி முதல் பரிசையும், கோவை அணி இரண்டாம் பரிசையும் தட்டிச்சென்றது. கைப்பந்து போட்டியில் கன்னியாகுமரி அணியினர் முதல் பரிசு பெற்றனர். இரண்டாவது பரிசினை கோவை அணியினரும் மூன்றாம் பரிசினை திருநெல்வேலி கிங்க்ஸ் அணியினரும் பெற்றனர்.

மேலும் சதுரங்கம் விளையாட்டில் முகுந்தன் மற்றும் ராகுல் ஆகியோர் முறையே முதல் மற்றும் இரண்டாம் பரிசினை வென்றனர். சிட்டிங் குண்டு எறிதல் போட்டியில் பாலமுருகன், வினோத்குமார் மற்றும் மாதேஷ் ஆகியோரும், ஸ்டேண்டிங் குண்டு எறிதல் போட்டியில் வீரமணி, ஜெகதீஷ் மற்றும் புதியராஜ் ஆகியோரும் முதல் மூன்று பரிசுகளை வென்றனர்.