ஜாக்டோ – ஜியோ போராட்டம்: தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் கைது..ஒருவர் மரணம்.. புகைப்படத் தொகுப்பு

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், 7 ஆவது ஊதியக்குழுவின் முரண்பாடுகளை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளை போலீஸார் கைது செய்தனர்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை விரைவில் திரும்பப் பெற வேண்டும், 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், 7 ஆவது ஊதியக்குழுவின் முரண்பாடுகளை களைய வேண்டும், இடைநிலை ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை சீரமைக்க வேண்டும், சிறப்பு காலமுறை ஊதியம் பெறுபவர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்கள், அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான ஜாக்டோ – ஜியோ தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது.

இதன் ஒருபகுதியாக இன்று (செவ்வாய்கிழமை) சென்னையில் கோட்டையை முற்றுகையிடப் போவதாக அறிவித்திருந்தனர். இதைத் தவிர்க்குமாறு அரசு சார்பில் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்தார். இருப்பினும், திட்டமிட்டபடி போராட்டம் நடக்கும் என அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் அறிவித்தன.

இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள் பட்டியலை தயாரித்து ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் போலீஸார் கைது நடவடிக்கையை தொடங்கினர். இதன்படி, தமிழகம் முழுவதிலும் 250-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்காக, அண்ணாசாலை, சேப்பாக்கம், கடற்கரை சாலைகளில் கூடுதல் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை சேப்பாக்கம் வாலாஜா சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை போலீஸார் கைது செய்தனர். அதேபோல், மெரினாவில் சென்னை பல்கலைக்கழகம் அருகே ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை வண்டலூரில் வாகன சோதனையின்போது ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கைது செய்யப்பட்டனர். கோயம்பேடு அருகே போராட்டத்தில் பங்கேற்க வந்த ஜாக்டோ ஜியோ அமைப்பினரையும் போலீஸார் கைது செய்தனர். சென்னை தவிர பல்வேறு மாவட்டங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றன.

போலீசாரால் கைது செய்யப்பட்ட ஜக்டோ ஜியோ அமைப்பைச் சேர்ந்த ஆசிரியர் தியாகராஜன் மாரடைப்பால் மரணம்.