நீட் தேர்வு – அகதிகளாக்கப்பட்ட தமிழ் மாணவர்கள், வஞ்சிக்கும் ஆட்சியாளர்கள்…சாமானியனின் வேதனை பார்வை..

தொலை தூர நகரங்களுக்கு..
தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்கு.. அவசர உதவி எண்கள் அறிவிக்கப்படுள்ளன..
அவர்கள் ஒன்றும் ஆழிப்பேரலையால்
சூழ்ந்து கொள்ளப்பட்டிருக்கவில்லை.:..
 
அவர்களுக்கு
பயண உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது..
அவர்கள் கடும் புயலில்
காணாமல் போய்விடவில்லை..
 
அவர்களுக்கு உதவத் தயார் என்று
கருணைக் கரங்கள் நீட்டப்படுகின்றன..
அவர்கள் பூகம்பங்களில் இடுபாடுகளில்
சிக்கிக்கொண்டிருக்கவில்லை..
 
அவர்களுக்கு
காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்படவிருக்கிறது
அவர்கள்
ஒரு கலவரத்தில் சிதறடிக்கபட்டவர்கள் அல்ல..
 
அவர்களுக்கு
தங்குமிடம் தர யாரோ
அன்புக் கரம் நீட்டுகிறார்கள்…
அவர்கள் நகரங்கள்
தண்ணீரில்  மூழ்கிப்போய்விடவில்லை …
 
அவர்களுக்கு உணவளிக்கத்தயார் என்று
யாரோ வாக்குறுதி அளிக்கிறார்கள்…
அவர்கள் அகதி முகாம்களைத்தேடி
நடந்துகொண்டிருக்கவில்லை …
 
அவர்கள் வெறுமனே
ஒரு தேர்வை எழுத விரும்புகிறார்கள்….
அதற்காக நாம் ஏன்
அகதிகளாக மாற்றப்படுகிறோம் என்பதை
அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை…
 
இதற்கு முன்னும் அவர்கள்
ஒரு தேர்வை எழுத நிர்பந்திக்கப்பட்டார்கள்
மூச்சுத்திணறினார்கள்…
ஒரு இளம்பெண்
தன் கழுத்தில்
ஒரு தூக்குக் கயிறை மாட்டிக்கொண்டு
அந்த மூச்சுத்திணறலிருந்து விடுபட்டாள்…
 
இதற்கு முன்னும் அவர்கள்
ஒரு தேர்வை எழுத வந்தார்கள்..
அவர்கள் உள்ளாடைகள் அவிழக்கப்பட்டன..
கீழே கொட்டபட்ட கைப்பைகளிலிருந்து
சானிடரி நாப்கின்கள் சிதறி விழுந்தன
உள்ளாடைகளை கண்ணீருடன் அணிந்து கொண்டு நாப்கின்களை பொறுக்கிகொண்டு
அவர்கள் தேர்வை எழுதினார்கள்..
 
இதற்கு முன்னும் அவர்கள் ஒரு தேர்வை எழுதினார்கள் கடினமான கேள்வித்தாள்களின் பாறைகளில்
அவர்கள் தங்கள் தலையைமுட்டி கொண்டனர்..
தோல்வியடைந்து மெளனமாக வீடு திரும்பினார்கள்..
 
இப்போது அவர்கள்
ஒரு தேர்வை எழுத நெடுந்தூரம் செல்ல
நிர்பந்திக்கபட்டிருக்கிறார்கள்…
ரயில் பெட்டிககளின் ஜன்னலோரங்களில் அமர்ந்து இரவெல்லாம் இருளையே
தூங்காமல் வெறித்துப் பார்த்துகொண்டிருக்கிறார்கள்..
 
அவர்களுக்கு அவசர உதவி எண்கள் தரப்பட்டிருக்கின்றன..
அவர்களுக்கு கருணைக் கரம் நீட்டுபவர்கள் இருக்கிறார்கள்..
அவர்கள் வெறுமனே ஒரு தேர்வை எழுதத்தான் விரும்பினார்கள்…
 
அவர்கள் போர்முனைக்குச்  செல்வதுபோல
பெற்றோர்கள் பதட்டத்துடன்
அவர்களை வழியனுப்புகிறார்கள்….
’நீ போகத்தான் வேண்டுமா?’ என்று
ஒரு அன்னை தன் மகளின் கைகளை பற்றிக்கொண்டு கேட்கிறாள்…
அவர்கள் வெறுமனே ஒரு தேர்வைத்தான் எழுத விரும்பினார்கள்…
 
நாம் ஏன் எப்போதும்
எதற்காகவாவது மன்றாடியபடி
தெருக்களில் நின்றுகொண்டிருக்கிறோம்?..
நாம் ஏன் நம் எளிய உரிமைகளுக்காக
இத்தனை உரத்த குரலில் பேச நிர்பந்திக்கபடுகிறோம்? …
ஒரு இனம் பிற இனங்களைபோல வாழ
ஏன் இத்தனை தியாகங்களை நோக்கி செலுத்தப்படுகிறது? …
 
நாம் வேட்டையாடப்படுகிறோம்
சிறு முயல்களைபோல…
சிறு எலிகளைப்போல…
சிறு எறும்புகள் போல..
 
நாம் எதையாவது கேட்டு கத்துவதைக் கண்டு
சிலர் ஆர்கஸம் அடைகிறார்கள்…
சிலரது மதுகோப்பைகளில் நமது கோபம்
ஒரு ஐஸ் துண்டைப்போல விழுகிறது…
 
முதலில் நம்மை அவர்கள்  சவுக்கால் அடிப்பார்கள்..
நாம் அதைப்பற்றி கேள்வி கேட்பதற்குள்
அந்தக் காயத்தில் உப்பைத் தடவுவார்கள்…
அப்போது நாம் சவுக்கடியைப்பற்றியல்ல
உப்பின் எரிச்சலைப் பற்றி பேசத் தொடங்கிவிடுவோம்…
அவர்கள் உடனே நம்மேல் ஒரு வாளி
கொதிக்கும் தண்னீரை ஊற்றுவார்கள்
அப்போது நாம் உப்பைப்ப பற்றியல்ல…
வெந்நீரின் கொடுமை பற்றி பேசத் தொடங்கிவிடுவோம்..
அப்போது அவர்கள் நம் நகங்களை பிடுங்க ஆரம்பிப்பார்கள்..
நாம் ’நகங்களை பிடுங்காதே…
நகம் வைத்திருப்பது எங்கள் உரிமை’ என்று
முழங்கத் தொடங்குவோம்…
 
இப்படித்தான்  நாம்  வழிநடத்தப்படுகிறோம்..
இப்படித்தான்  நாம் வேட்டையாடப்படுகிறோம்..
எப்போதும் நெருக்கடிகளின் நுகத்தடிகள்
நம் கழுத்தை அழுத்தி கொண்டேயிருக்கும்….
நாம் களைத்துப்போய்விட்டோம்..
 
இந்தக் காலம் இதயமற்றது..
இந்தக் காலம் வஞ்சகமானது…
இந்தக் காலத்தில் எதிரி..
இருளில் மறைந்திருந்து சூதாடுகிறான்…
 
நாம் என்ன செய்யபோகிறோம் என
நம் குழந்தைகள் அச்சத்துடன்
நம் முகத்தையே பார்கிறார்கள்..
 
மக்கள் நலன் கருதி.. எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் எழுத்துக்கள் பிற தளங்களில் இருந்து….

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & @Amazon @Flipkart @Snapdeal