அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் மீதான இந்துத்துவ ரவுடிகளின் கொலைவெறித் தாக்குதலுக்கு SIO வன்மையான கண்டனம்…

முன்னாள் குடியரசு துணைத்தலைவர் டாக்டர் ஹமீத் அன்சாரி கலந்து கொள்ள இருந்த ஒரு நிகழ்ச்சியை சீர்குலைக்கும் விதமாக பல்கலைக்கழகத்திற்கு சிறிதும் தொடர்பில்லாத ஏ.பி.வி.பி, இந்து யுவ வாகினி குண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனை எதிர்த்து காவல்துறையில் புகார் கொடுக்கச் சென்ற பல்கலைக்கழக மாணவர்கள் மீது ஏ.பி.வி.பி, இந்து யுவ வாகினி ரவுடிகளுடன் சேர்ந்து காவல்துறையினரும் கொலைவெறியுடன் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் பல்கலைக்கழக மாணவர் மன்ற தலைவர் உட்பட 50க்கும் மேற்பட்ட மாணவர்கள்  படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஹைதராபாத், டெல்லி என்று மத்திய பல்கலைக்கழகங்களில் சிறுபான்மை மாணவர்களுக்கு எதிரான தாக்குதல்களின் தொடர்ச்சியாக இப்போது அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்திலும் இந்துத்துவ குண்டர்களின் கொடூர தாக்குதல்கள் அரங்கேறியிருப்பது இந்தியாவில் சிறுபான்மை மாணவர்களின் உயிர்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதை படம்பிடித்துக் காட்டுகின்றது. தடுக்க வேண்டிய காவல்துறையும் சேர்ந்து கொண்டு ரவுடித்தனங்களை அரங்கேற்றுவது  மாணவர்களுக்கு காவல்துறை மீது இருக்கும் நம்பிக்கையை பொய்த்துப் போக செய்வதாக உள்ளது.

தேசத்தின் மதச்சார்பின்மை மீதும், அரசியலமைப்பு சட்டம் வழங்கியிருக்கும் கல்வி உரிமையை பாதுகாக்கவும் இத்தகைய குண்டர்கள் மீதும், காவல்துறையினர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு வலியுறுத்துகின்றது.