Home செய்திகள்கீழக்கரை செய்திகள் இரண்டு மாத விடுமுறையில் நீங்கள் உங்கள் குழந்தைகளுக்காக செய்யவேண்டியது என்ன?…

இரண்டு மாத விடுமுறையில் நீங்கள் உங்கள் குழந்தைகளுக்காக செய்யவேண்டியது என்ன?…

by ஆசிரியர்
கோடை விடுமுறை தொடங்கி விட்டது, Mobile,TV என்று வீணாக பொழுதை போக்காமல் கீழ்கண்ட செயல்களை குழந்தைகளை ஈடுபட வைக்க  முயற்சிக்கலாம், அவர்களையும் சிரமப்படுத்தாமல், பொழுது போக்காக, அவர்களே விரும்பி செய்யும்படி..
1) உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு வங்கிக்கு உங்கள் குழந்தைகளை அழைத்தச்செல்லுங்கள், வங்கியில் உள்ள அனைத்து சலான்களையும் (Chalan) நிரப்புவது எப்படி என்பதை கற்றுக்கொடுங்கள், A.T.M ல் எவ்வாறு பணமெடுப்பது என்பதையும், சேமிப்பின் அவசியத்தையும் அக்கறையுடன் சொல்லிக்கொடுங்கள்.
 
2) அதுபோல அருகில் உள்ள அனாதை ஆசிரமங்களுக்கும், முதியோர் இல்லத்திற்கும், மனநல காப்பகத்திற்கும் அழைத்து சென்று, அவர்கள் ஏன் இவ்வாறு ஆளாக்கப்பட்டார்கள்? என்பதை அருகிலிருந்து எடுத்துக்கூறுங்கள், அவர்கள் படும் துன்பங்களையும், ஏக்கங்களையும் அவர்களாகவே புரிந்து கொள்ள வழிவகை செய்து கொடுங்கள்.
3) அருகில் இருக்கும் குளங்கள், ஆறுகள், கடல்கள் ஆகிய இடங்களுக்கு அழைத்து செல்லுங்கள்.
4) அவர்களுக்கு இரண்டு மரக்கன்றுகளை பரிசாக அளித்து, அதை அவர்களை வைத்தே தண்ணீர் ஊற்றி வளர்க்க சொல்லுங்கள், மரம் வளர வளர சிறு சிறு பரிசு கொடுத்து அசத்துங்கள்.
5) இந்த இரண்டு மாதங்களில் ஒருமுறையேனும் நீங்கள் இரத்ததானம் செய்யுங்கள், அதுவும் உங்கள் குழந்தைகள் முன் செய்யுங்கள், இரத்ததானத்தின் அவசியத்தை அவர்கள் கண்டிப்பாக உணர்வார்கள். (என் பெற்றோர்கள் எப்போதும் எனக்கு ஹீரோ தான் என்று அவர்கள் கண்டிப்பாக பெருமை கொள்வார்கள்)
6) மிக முக்கியமாக அரசாங்க மருத்துவமனைக்கு அழைத்து சென்று, அங்கு நோயாளிகள் படும் கஷ்டத்தை அவர்கள் கண்முன் கொண்டுவாருங்கள், விபத்தினால் அடிபட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை காணச்செய்தாலே போதும் அவர்கள் எவ்வாறு வாகனத்தை ஓட்ட வேண்டுமென்று முடிவெடுத்து கொள்வார்கள்.
7) ஒவ்வொருவருக்கும் சொந்த கிராமம் உண்டு, அங்கு உங்கள் குழந்தைகளை அழைத்து சென்று நம் தாத்தா பாட்டி மற்றும் நம் சொந்தங்களை அறிமுகப்படுத்தி அன்பு செலுத்த வழிவகை செய்யுங்கள், நம் முன்னோர்களின் “விவசாய” முறைகளையும், வாழ்க்கையையும், அவர்களின் பெருமைகளையும், அதற்காக பட்ட கஷ்டங்களையும் கூறுங்கள்.
 
8) அதுபோல அருகில் உள்ள நீதிமன்றம், காவல் நிலையம், அரசு அலுவலகங்கள் போன்ற இடங்களுக்கு கூட்டிச் சென்று, எவ்வாறு அரசாங்கமும் அது செயல்படும் விதங்களையும் எடுத்துக் கூறுங்கள், அவர்கள் எந்த துறைக்கு வேலைக்கு எதிர்காலத்தில் செல்லலாம் என்பதற்கு சின்ன பொறி தட்டி விடுங்கள், அதன் பின் அவர்களாகவே எந்த துறையில் காலூன்ற வேண்டுமென்று தீர்மானித்து அதற்காக செயல்பட ஆரமித்துவிடுவார்கள்.
9) உங்கள் குழந்தைகளை அருகில் அழைத்து அவர்களின் சின்ன சின்ன ஆசைகளை கேட்டறிந்து அதற்காகவே நாங்கள் இருக்கிறோம் என்பதை மனதில் ஆழமாக பதிய வையுங்கள் அவர்களுக்காக சிறு விளையாட்டு பொருட்களை நீங்களே செய்து, அதை அவர்களுக்கு கற்றுக்கொடுத்து, அவர்களையும் செய்யச்சொல்லி அவர்களின் நண்பர்களுக்கு பரிசளிக்கச் சொல்லுங்கள்.
10) அனைத்து மத வழிபாட்டு தலங்களுக்கும் அழைத்து சென்று, எல்லோருடைய வழிபாட்டு முறைகளையும் காணச் செய்யுங்கள், அனைத்து மதமும் “அன்பை” மட்டுமே போதிக்கிறது என்ற உண்மையை அவர்களை உணரச் செய்யுங்கள். அன்பால் அனைத்தையும் பெறமுடியும் என்பதை உணர்த்துங்கள்.
 
11) வீட்டிற்கு என்னென்ன பொருள் தேவை என்ற லிஸ்ட்டை அவர்களையே எழுதச் சொல்லி, பணத்தையும் கொடுத்து கூடவே அழைத்து செல்லுங்கள். அவர்களாகவே கணக்கு பார்த்து பணம் வாங்கிய பொருளுக்கு கொடுக்கச் சொல்லுங்கள். பணத்தின் அருமையும், சிக்கனமும், சேமிப்பும் புரியும்.
இப்பதிவில் உள்ள சிலவற்றை நீங்கள் செய்ய முயற்சித்தாலே உங்கள் குழந்தையின் மீதுள்ள அக்கறையை உங்கள் குழந்தைகளே உணர்ந்துகொள்வார்கள்.
இதுவே இப்பதிவின் வெற்றி…
தகவல் உதவி:- அலாவுதீன், மூத்த நிருபர்..

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!