தைவான் நாட்டின் மருத்துவ பல்கலைக்கழக நிகழ்ச்சியில் உரையாற்றிய ‘கீழக்கரை’ மாணவனின் நீங்காத நினைவலைகள்

‘சீன தேசம் சென்றாலும் சீர் கல்வியைத் தேடு’ என்பது முன்னோர்களின் வாக்கு. ஆனால் இன்று நம் இந்திய தேசத்திலேயே அதற்கான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கிறது. தற்போது நம்மில் பலரும் நமது குழந்தைகளின் எதிர்காலம் பற்றி சிந்திக்கும் போது அவர்களை என்ன படிக்க ‎வைக்கலாம்? அதற்கென எந்தக் கல்வி நிலையத்தைத் தேர்வு செய்யலாம்? என்பதை மட்டும்தான் ‎எண்ணுகிறோம்.

அதையும் தாண்டி அவர்களுடைய உள்ளார்ந்த திறமைகளை வெளிக் கொணர்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்காமல் விட்டு விடுகிறோம். அதே போல் எல்லா மாணவர்களுக்கும் அவர்களுக்கு பிடித்தமான துறை கிடைத்து விடுவதில்லை.

மாணவர்கள் பிடிக்காத படிப்பை படித்தாலும் அதனை எவ்வாறு வெற்றி படிக்கட்டுகளாக மாற்றி சிகரம் தொடுவது என்பதை கீழக்கரை சேரான் தெருவை சேர்ந்த மருத்துவ மாணவன் முஹம்மது நபீல் கீழை நியூஸ் வலைத்தளத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியின் சாராம்சம் :-

நான் சென்னையில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தில் மருத்துவக் கருவியல் துறையில் மூன்றாமாண்டு படித்து வருகிறேன். பள்ளிப்பருவத்தில் இருந்தே டாக்டர் படிப்பதே என்னுடைய இலட்சியமாக இருந்து வந்தது.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 96 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றேன். ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் என் மீது அளப்பரிய நம்பிக்கை வைத்து இருந்தனர். ஆனால் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 80 சதவீதம் மட்டுமே பெற்றேன்.

இந்த அதிர்ச்சி தரும் தேர்வு முடிவிற்கு பிறகு டாக்டர் ஆக முடியும் என்கிற எனது சிறு வயது கனவு சுக்கு நூறாக உடைந்தே போனது. அதனை தொடர்ந்து கடுமையான மனக் கவலை என்னை தொற்றிக் கொண்டது. சரி டாக்டர் ஆவது தான் எனக்கு இறைவன் நாடவில்லை. மருத்துவ பட்டப் படிப்பில் ஏதேனும் தேர்வு செய்து படிக்கலாம் என்று மருத்துவ கருவியல் பட்டப்படிப்பை தேர்வு செய்து டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன்.

இந்த கல்லூரியில் சேர்ந்த நாள் முதல் கல்லூரிக்கு சரியாக செல்வது இல்லை. காரணம்… நான் சிறுவயது முதல் படிக்க வேண்டும் என கனவு கண்ட டாக்டர் படிப்பு படிக்கவில்லையே… என மனம் தடுமாறிக் கொண்டே இருந்தது. முதலாமாண்டு நிறைவு செய்த பின்னரும் கல்லூரிக்கு முழு மன நிறைவோடு சென்று படிக்க மனமில்லாமல் சென்றேன்.

இந்த இக்கட்டான தருணத்தில் அல்லாஹ்வின் மாபெரும் கருணையால் டாக்டர். ஆரிப் என்கிற சகோதரரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் ஒரு மருத்துவர் என்பதால் நான் இந்த கல்லூரியில் தேர்ந்தெடுத்து இருக்கும் துறையின் சிறப்பம்சம் குறித்தும், பிற்காலத்தில் இந்த துறை எந்த அளவில் சிறப்பான உயரத்தை தொடும் என்பது சம்பந்தமாகவும், தற்போது நான் படித்து கொண்டிருக்கும் இந்த துறை எந்த அளவிற்கு வேகமாக வளர்ந்து வருகிறது என்பதை எல்லாம் தெளிவாக விளக்கமாக எனக்கு எடுத்து கூறினார்.

இறைவனுடைய கிருபையால் அந்த நிமிடத்தில் இருந்து நாம் படித்து கொண்டிருக்கும் என் துறை மீது ஈர்ப்பு ஏற்பட்டு, அதீத ஆர்வத்துடன் விருப்பமுடன் படிக்க ஆரம்பித்தேன். என்னுடைய படிப்பில் நான் தேர்வு செய்த எனது விருப்ப பாடம் (NEURO PROSTHETICS) தமிழில் இதனை மூளை இயந்திரம் கிடைமுகம் என்று சொல்லுவார்கள்.

இதற்கிடையில் அல்லாஹ்வுடைய அருளால் கடந்த டிசம்பர் 2017 ல் தைவான் நாட்டில் உள்ள TAIPEI மருத்துவ பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ‘INTERNATIONAL HONORS PROGRAM’ நிகழ்ச்சிக்கு இந்தியாவில் இருந்து தலைசிறந்த 25 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டதில் நானும் ஒருவனாக தைவான் நாட்டிற்கு சென்றேன். அங்கு 15 நாட்கள் நடைபெற்ற வகுப்புகளில் பங்கேற்று உரையாற்றினேன்.

இதில் எனக்கு பல்வேறு படிப்பினைகளை இறைவன் வழங்கி கவுரவித்தான். எந்த இலட்சியத்தோடு படித்து டாக்டர் தான் ஆவேன் என்று இருந்தேனோ… அந்த இலட்சியம் தவறு என்பதை உணர்ந்தேன். அங்கு எனக்கு பாடம் எடுத்த டாக்டர்கள் பெருபாலானோர் மருத்துவ படிப்பினை முடித்து விட்டு என்னுடைய துறையை தேர்வு செய்தவர்களே.

அப்போது தான் நான் விளங்கி கொண்டேன். நம்மை அழகாக படைத்த இறைவனுக்கு மட்டுமே தெரியும் நமக்கு எது சிறந்தது என்று… இறைவன் நமக்கு கொடுத்துள்ள விஷயங்களை ஆராய்ந்து பாருங்கள்… நாம் படைக்கப்பட்டதின் முக்கியத்துவம் புரியும்.

என்னை போன்ற மாணவர்களுக்கு அன்பான வேண்டுகோள்.

நீங்கள் எந்த துறையை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி. ஏதோ கல்லூரிக்கு சென்றோம், புத்தகத்தில் உள்ளதை படித்தோம், பாஸ் செய்தோம் என்று இருந்து விடாமல் உங்கள் துறை பற்றி ஆழமாக படியுங்கள். உங்கள் துறையின் நுணுக்கங்களை ஆராயுங்கள். அதில் ஒன்றை தேர்வு செய்து அதிகம் உழையுங்கள்.

இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழ கற்றுக் கொள்வோம். அல்லாஹ் நாடினால்.. நீங்கள் இந்தியாவின் தலைசிறந்த மாணவனாகவும், நம் இந்திய தேசத்தின் உயர்பதவி வகிக்கும் சிறந்த குடிமகனாகவும் ஆகலாம்.” இவ்வாறு தன்னுடைய கல்வி அனுபவங்களை நம்மிடையே பகிந்து கொண்டார்.

இந்த மூளை இயந்திர மருத்துவ படிப்பினை கீழக்கரையில் இருந்து படிக்கும் ஒரே மாணவன் சேரான் தெருவை சேர்ந்த முஹம்மது நபீல் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் தமிழகத்திலேயே டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தில் மட்டும் தான் இந்த பட்டப் படிப்பு துறை செயல்படுகிறது.

‘கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு’ என்னும் சொற்பொதிக்குள் அடங்கியுள்ள அர்த்தங்கள் ஏராளம். அதனை கீழக்கரை மாணவன் முஹம்மது நபீல் மெய்ப்பித்து இருக்கிறார்.

இறைவன் அருளால் முஹம்மது நபீல் இன்னும் பல வெற்றிகளும் சாதனைகளும் படைத்திட கீழை நியூஸ் நிர்வாகம் மனதார வாழ்த்துகிறது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..

2 Comments

  1. Congratulations on your achievement. I totally agree with you. I never thought I would end up where I am now. The creator chose the best for his creation.

Comments are closed.