கீழக்கரையில் குரங்குகளை பிடிக்க நான்கு இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டது

கீழக்கரை நகராட்சி பகுதிகளில் குரங்குகள் அட்டூழியம் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் மக்கள் நல பாதுகாப்புக் கழகம், சட்டப் போராளிகள் இயக்கத்தினர் மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறை தீர்க்கும் நாளில் குரங்குகள் பிரச்சனைக்கு தீர்வு வேண்டி மனு செய்திருந்தனர்.

அதன் அடிப்படையில் கீழக்கரை வனச் சரக ஆய்வாளர் சிக்கந்தர் பாட்சா குரங்குகளை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்கும் பொருட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்து வரும் குரங்குகளை பிடித்து அதன் வாழ்வாதார பகுதிகளில் விட பரமக்குடியில் இருந்து பிரத்யேக கூண்டுகள் கொண்டு வரப்பட்டன.

அதனையடுத்து குரங்குகள் அதிகம் நடமாட்டம் இருக்கும் பகுதிகளில் கூண்டுகளை  வைக்க பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு சட்டப் போராளிகள் சார்பாக வேண்டுகோள்  விடப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இன்று கீழக்கரை வனக்காப்பக காவலர் மகேந்திரன் தலைமையில் கீழக்கரை மேலத் தெரு புதுப் பள்ளிவாசல் வளாகம், மேலத் தெரு அஹமது முஸ்தபா தோட்டம், வள்ளல் சீதக்காதி சாலை S.V.M கிட்டங்கி, நடுத் தெரு பெத்தம்மா கபுரடி பகுதி உள்ளிட்ட நான்கு இடங்களில் வாழைப்பழம், கொய்யப் பழங்களை கூண்டுக்குள் தொங்க விட்டு குரங்குகளை சிக்க வைக்க தயார் நிலையில் காத்திருக்கின்றனர்.

ஆனால் கூண்டுக்குள் சிக்க குரங்குகள் தயாரா…? என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.