ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் – இயற்பியல் ஆராய்ச்சியின் பொக்கிஷம் மறைந்து விட்டது…

காலத்தின் பல்வேறு பரிமாணங்களை நமக்கு படிப்பினையாக வழங்கிய ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் (Stephen William Hawking சற்று முன்னர் காலமானார். ஜனவரி 8 , 1942 ல் பிறந்த ஸ்டீபன் ஹாக்கிங் உலகின் முதன்மையான இயற்பியல் கோட்பாளராக திகழ்ந்தார். கடந்த 76 வருடங்களில் 50 வருடங்களுக்கு மேலாக நரம்பு நோயால் பாதிக்கப்பட்டாலும், இயற்பியலில் பல ஆச்சர்யமிகு அதிசயங்களை உலகுக்கு வழங்கியவர். இவர் விஞ்ஞானி என்ற எல்லையை தாண்டி தன்னம்பிக்கையின் எடுத்துக்காட்டாகவே திகழ்ந்தார்.

இவருடைய முக்கியமான ஆய்வுத்துறைகள், அண்டவியலும் (cosmology), குவாண்ட்டம் ஈர்ப்புமாக (quantum gravity) திகழ்ந்தன. கருந்துளை (black holes)களுக்கும், வெப்ப இயக்கவியலுக்குமான தொடர்புகள் பற்றிய தொடர்ந்து ஆய்வு செய்து வந்தார். இவருடைய படைப்பு ‘காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம்’ என தமிழாக்கமாக வெளி வந்த பொழுது தமிழ் வாசக வட்டத்துக்கு அறிமுகமானார்.

இவருடைய வாழ்தநாளில் தனது நரம்பியல் நோயை கடுமையாக எதிர்கொண்டு உடலுடன் சமர் செய்தவாரு இந்த பிரபஞ்சத்தின் ரகசியங்களை அறிய முயன்ற அவரது மன உறுதி எல்லோருக்கும் ஒரு சமகால உதாரணமாகும். அவர் மறைந்தாலும் அவருடைய அறிவியல் படைப்புகள் இவ்வுலகை விட்டு மறையாது.