‘நாங்க… நூறு பேரு’ – கீழக்கரை சட்டப் போராளிகளின் சந்திப்பு நிகழ்ச்சி

கீழக்கரை நகரின் முக்கிய பிரச்சனைகளுக்கு சட்ட ரீதியில் ஜனநாயக வழியில் தீர்வு காண்பதற்காக ‘கீழக்கரை சட்டப் போராளிகள்’ என்கிற பெயரில் வாட்சப் குழுமம் கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 6 ஆம் தேதி கீழை நியூஸ் நிர்வாகத்தினரால் துவங்கப்பட்டது.

இந்த தளம் வாயிலாக அரசு சார்ந்த உள்ளூர் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வினை ஏற்படுத்தும் வகையில் தகவல் அறியும் உரிமை சட்டம் விண்ணப்ப பயிற்சி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஆன்லைன் பெட்டிஷன், தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவு ஆன்லைன் பெட்டிஷன், ஒருங்கிணைந்த மத்திய மாநில அரசு துறையினருக்கான ஆன்லைன் பெட்டிஷன், RTI ஆன்லைன் பெட்டிஷன் போன்ற அத்தியாவசிய பெட்டிஷன் செய்வதற்கான ஆன்லைன் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இது போன்ற ஆக்கபூர்வ செயல்பாடுகள் மூலமாக வெளிநாட்டில் வசிக்கும் கீழக்கரை நண்பர்களும் ஆன்லைன் மூலம் வெளிநாட்டில் இருந்தபடியே உள்ளூர் பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்து தொடர் முயற்சிகளில் ஈடுபடுவதன் மூலம் நம் மக்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமைகளை பெற முடிகிறது.

குறிப்பாக நகராட்சி, அரசு பொது மருத்துவமனை, மின்சார வாரியம், தாலுகா அலுவலம் உள்ளிட்ட அரசுத் துறை அலுவலகங்களின் மூலம் பொது மக்களுக்கு கிடைக்க வேண்டிய நலத் திட்டங்கள், நகர்ப்புற வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு அத்தியாவசிய பணிகள் உள்ளிட்ட செயல்பாடுகளை நூறு சதவீதம் நம் மக்களுக்கு இலஞ்ச லாவண்ய ஊழல்களுக்கு அப்பாற்பட்டு தங்கு தடையின்றி கிடைப்பதற்கான முயற்சிகளை நூறு சட்டப் போராளிகளை உருவாக்கி, அவர்களுக்கு உரிய சட்டப் பயிற்சி அளித்து  தொடர்ந்து முன்னெடுத்து வெற்றி கண்டு வருகிறது.

இந்நிலையில் கீழக்கரை சட்டப் போராளிகள் குழுமத்தின் ‘நாங்க… நூறு பேரு’ சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி கடந்த வியாழக் கிழமை (08.03.2018) இரவு 7 மணியளவில் ஆலீம் புலவர் பவாஸ் வணிக வளாக கட்டிடத்தில் இயங்கும் சினர்ஜி இன்டர்நெஷனல் இன்ஸ்டிடியூட் அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கீழக்கரையில் வசிக்கும் ஏராளமான சட்டப் போராளிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சியினை இஸ்லாமிய கல்வி சங்கத்தின் தலைவர் அல் பையினா அகாடமியின் பேராசிரியர் சட்டப் போராளி ஆலீம் தவ்ஹீத் ஜமாலி கிராத் ஓதி துவங்கி வைத்தார். கிழக்குத் தெரு ஜமாஅத் துணை பொருளாளர் சட்டப் போராளி முஹம்மது அஜிஹர் தலைமையேற்று தலைமை உரை நிகழ்த்தினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர் செயலாளர் சட்டப் போராளி ஹமீது யூசுப் வரவேற்புரை பேசினார். சட்டப் போராளிகள் குழுமத்தின் நிர்வாகி சட்டப் போராளி அப்துர் ரஹ்மான் அறிமுக உரையாற்றினார். சட்டப் போராளிகள் குழுமத்தின் ஒருங்கிணைப்பாளர் முஹம்மது சாலிஹ் ஹுசைன் ”சட்டப் போராளிகள் இது வரை சாதித்து என்ன..? சட்டப் போராளிகளின் தற்போதைய நிலை மற்றும் எதிர்கால திட்டமிடல்” என்கிற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.

அதனையடுத்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு பெற்ற சட்டப் போராளிகள் ஒருங்கிணைப்பாளருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சட்டப் போராளிகளுடனான அறிமுகம், கலந்தாய்வு மற்றும் ஆலோசனை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பின்வரும் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

1) சங்கப்பதிவுகள் சட்டப்படி ‘கீழக்கரை சட்டப் போராளிகள் இயக்கம்’ என்கிற பெயரில் உரிய முறைப்படி பதிவு செய்து அரசாங்க பதிவு பெற்ற இயக்கமாக உருவாக்குவது.

2) இஸ்லாமிய ஷரியத் சட்டம், இந்திய அரசியலமைப்பு சட்டம், தகவல் அறியும் உரிமை சட்டம், மாவட்ட நகராட்சிகள் சட்டம் உள்ளிட்ட சட்டங்களை சாமானியனும் அறிந்து கொள்ளும் வகையில் சட்ட பயிற்சி வகுப்புகள் நடத்துவது.

3) கீழக்கரை நகரின் பிரச்சனைகளை உடனுக்குடன் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் தமிழக முதலமைச்சரின் தனிப் பிரிவு ஆன்லைன் பெட்டிஷன், மாவட்ட ஆட்சியரின் குறை தீர்க்கும் நாள் பெட்டிசன்கள் உள்ளிட ஆன்லைன் பெட்டிசன்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது.

4)சிறுபான்மையினர் உரிமைகளை நிலை நாட்டும் வகையில் சிறுபான்மையினருக்கான மத்திய மாநில அரசின் நலத் திட்ட உதவிகளை பெறுவதற்கான வழிகாட்டுதல்களை பொதுமக்களுக்கு வழங்குவது.

5) முதியோர், விதவைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான அரசின் நலத் திட்டங்களை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது.

6) மாணவர்கள் மத்தியில் சட்டப் படிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதோடு நல்ல சமுதாயத்திற்கான சிறந்த வழக்கறிஞர்களை உருவாக்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்நிகழ்ச்சியின் நிறைவாக கீழை மர செக்கு நிறுவனத்தின் முதன்மை நிர்வாகி சட்டப் போராளி நூருல் ஜமான் நன்றியுரை பேசினார். சட்டப் போராளிகளின் ‘நாங்க நூறு பேரு’ சந்திப்பு நிகழ்ச்சியினை சட்டப் போராளி முஸம்மில் இபுறாகீம் தொகுத்து வழங்கினார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..

1 Comment

Comments are closed.