கீழக்கரை நினைவலைகள் உருவாக்கிய நெய்னாவின் நட்பை பற்றிய உணர்வலைகள்…

கடந்த 06/03/2018 அன்று கீழக்கரை முன்னாள் தினமலர் நிருபரின் மூத்த மகன் மற்றும் கீழை நியூஸ் நிர்வாக உறுப்பினருமாகிய அப்துல்லாஹ் ரசீது அஹமது இறைவனடி சேர்ந்தார். அதைத் தொடர்ந்து அன்னாருக்கு நண்பர்களும், உறவினர்களும் ஆறுதல் தெரிவித்த வண்ணம் இருந்தனர். ஆனால் அருமை நண்பர் நெய்னா மெஹ்மூது தன்னுடைய நட்பின் நாட்களையும், அனுபவங்களையும் உணர்வலையாக முகநூலில் பதிந்துள்ளார். அந்த வார்த்தைகள் உங்கள் பார்வைக்கு:-

சில மரணங்கள் நிகழும் விதமும், காலமும் உள்ளபடியே பேரிடியாக வந்தடைந்து, சொல்லென்னா துக்கத்தை தருகிறது.. சமீபத்தில் மறைந்த கே.எம்.ஏ. ரஷீத் காக்காவின் மரணத்தில் கையறு நிலையின் திசுக்களை மனம் சுவைத்தது.. “

“ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு முன் , 1988 இல் மதுரையில் எனது பள்ளிப்படிப்பை தொடங்க சென்ற காலம்… மதுரையில் பெரியார் பேருந்து நிலையத்துக்கு எதிரில் உள்ள கட்டிடத்தில் அவர் நிர்வகித்து வந்த ஜாய் போஃம் என்ற நிறுவனத்தில் அவரை முதலில் சந்தித்த அந்த நிகழ்வு இன்னும் உள்ளத்தில் நிழலாடி மறைகிறது… கடந்த காலங்கள் மனதில் மையம் கொண்டு ஒரு விதமாக அழுத்தி கண்னீரை பிழிந்தெடுக்கிறது…

அன்று…அவரின் மிடுக்கில் ஒரு வித கவர்ச்சி இருந்தது, அவரில் நிலவிய அமைதியும், உயர்ந்த பண்பும், பக்குவப்பட்ட பேச்சும், அடக்கமும், தெளிவும் எவரையும் கவரும், இந்த இயல்பு கொண்ட அவரின் பயணம் வேறொரு தளத்தில் பயணப்பட்டிருப்பின் புகழுச்சியில் வின்னுயர பறக்கும் நிலையை என்றோ எட்டி இருந்திருப்பார் என்றே எப்போதும் என் மனம் சொல்லிக் கொள்ளும்.”

“1988 முதல் 1990 வரை நான் மதுரை நாகமலை ஜெயராஜ் நாடார் பள்ளியில் படித்த காலங்களில் எனது லோக்கல் கார்டியனாக மதுரையில் ரஷீத் காக்கா இருந்தார். எனக்கு பள்ளிச்சீருடை வாங்கி தருவது முதல், ஹாஸ்டல் பீஸ் கட்டுவது வரை அனைத்தும் அவரின் மூலமே நிகழ்ந்தது. ஆண்டுகள் கடந்து , தொடர்புகள் அறுபட்டு, மீண்டும் 2010 -11 வாக்கில் அபுதாபியில் ஒரு, இரு முறை அவரை சந்தித்து கடந்த கால நிகழ்வுகளை அவருடன் பகிர்ந்து கொள்ள சந்தர்ப்பம் அமைந்தது…. மீண்டும் ஒரு இடை வெளி கடந்து … கடந்த 6 ஆம் தேதி அவரின் மறைவு என்னை வந்த சேர்ந்த நள்ளிரவில் என் தூக்கம் தொலைந்து, துக்கம் மனதில் சிம்மாசமனமிட்டு அமர்ந்து கொண்டது..மனித வாழ்க்கையின் கூறுகள் குறித்த எனது சிந்தனைகள் மனதை சுக்கு நூறாக உடைத்து விட்ட நிலையில்… ரஷீத் காக்காவின் மறு உலக வெற்றிக்காக வல்ல இறைவனை கையேந்துகிறேன்…”

நண்பர் நெய்னா மெஹ்மூது அவர்களுக்கு கீழை நியூஸ் நிர்வாகம் சார்பாகவும், ரசீது அஹமது குடும்பத்தின் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..