கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி 18வது கல்லூரி விளையாட்டு விழா..

கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 07.03.2018 அன்று மாலை 3 மணியளவில் முகம்மது சதக் தொழில்நுட்பக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் 18வது விளையாட்டு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவிற்கு கல்லூரி முதல்வர் ரஜபுதீன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை செயலரும் தலைவருமான பழனிச்சாமி கலந்து கொண்டார். அவர் பேசுகையில் “ மாணவர்கள் கல்வியில் எவ்வாறு கவனம் செலுத்துகிறார்களோ, அதேயளவு விளையாட்டுத்துறையிலும் ஆர்வத்துடன் பங்கெடுத்து கொள்ள வேண்டும். மிகச்சிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளில் வேலைவாய்ப்புகள் அதிகமாக உள்ளன. அதே வேளையில் இந்திய இராணுவத் துறையிலும் மத்திய ரிசர்வ் போலீஸ் துறையிலும் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு அதிக வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமன்றி இரயில்வே துறை, வங்கித்துறைகளில் விளையாட்டு வீரர்களுக்காகவே வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். விளையாட்டு வீரர்கள் தங்களது திறமைகளை வளர்த்துக்கொள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் முக்கியத்தளமாக விளங்கி வருகிறது. தமிழக மாணவர்கள் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பல சாதனைகளை புரிந்து வருகிறார்கள்” என்றார்.

இவ்விழாவிற்கு முகம்மது சதக் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் அலாவுதீன், முகம்மது சதக் பொறியியல் கல்லூரி நெறியாளர் முகம்மது ஜஹபர், முகம்மது சதக் பொறியியல் கல்லூரி முதல்வர் அப்பாஸ் முகைதீன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

அதைத் தொடர்ந்து விளையாட்டுத்துறை ஆண்டறிக்கையினை கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் தவசிலிங்கம் வாசித்தார். இவ்விழாவில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. மேலும் இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் பல்வேறு சாகசங்களை நிகழ்த்தி காட்டினர். இவ்விழாவில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சுமார் 1500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் மற்றும் முகம்மது சதக் தொழில்நுட்பக் கல்லூரி உடற்கல்வி இயக்குநர்ம ருதாச்சலமூர்த்தி, சத்தியேந்திரன் மற்றும் செந்தில்முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியினை நுண்ணுயிரியல் துறைப் பேராசிரியர் சோபனா மற்றும் தொழில் நுட்பத்துறைத்தலைவர் விமலி ஆகியோர் தொகுத்து வழங்கினர். இறுதியாக நுண்ணுயிரியல் துறைத்தலைவரும், செஞ்சுருள் சங்க திட்ட அலுவலருமான ஆனந்த் நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சிக்கு முகம்மது சதக் அறக்கட்டளைத் தலைவர் மற்றும் தாளாளர் யூசுஃப், செயலர் ஷர்மிளா மற்றும் இயக்குநர்கள் ஆகியோர் வாழ்த்துக்களையும் பாராட்டினையும் தெரிவித்தனர்.