கீழக்கரை நகராட்சி வார்டு மறுவரையறையில் குளறுபடி – நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனருடன் சட்டப் போராளிகள் சந்திப்பு

கீழக்கரை நகராட்சியில் வார்டு மறுவரையறை செய்யப்பட்டதில் குளறுபடி உள்ளதாக வழங்கப்பட்ட மனுக்களின் அடிப்படையில், நிர்வாக மண்டல இயக்குனர் ஜானகி ரவீந்திரன் மாவட்ட வாரியாக நேற்று (10.02.18) முதல் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நேற்று இராமநாதபுரம் வருகை தந்த நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர், நிர்வாக குளறுபடிகளை மொத்த குத்தகைக்கு எடுத்திருக்கும் கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தையும் ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து கீழக்கரை சட்டப் போராளிகளுக்கு இராமநாதபுரம் வந்திருக்கும் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனரை சந்திக்க வருமாறு கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தினரிடம் இருந்து அவசர அழைப்பு தரப்பட்டது.

இதனை ஏற்று கீழக்கரை சட்டப் போராளிகள் சாலிஹ் ஹுசைன், சட்டப் போராளி கீழை மரச்செக்கு நூருல் ஜமான், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கீழக்கரை நகர் செயலாளர் சட்டப் போராளி ஹமீது யூசுப் ஆகியோர் விரைந்து சென்று இராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் முகாமிட்டு இருந்த நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் ஜானகி ரவீந்திரனை சந்தித்து 45 நிமிடங்கள், கீழக்கரை நகராட்சியில் மக்கள் தொகை குளறுபடி, நிர்வாக குளறுபடிகளை சுட்டிக்காட்டி பேச்சு வார்த்தை நடத்தினர்.


கீழக்கரை நகராட்சியில் இந்த வார்டு மறுவரையறை குளறுபடிகள் சம்பந்தமாக ஏற்கனவே நூற்றுக்கணக்கான ஆட்சேபனை மனுக்களை கீழக்கரை சட்டப் போராளிகள், சமூக நல அமைப்பினர், அரசியல் கட்சியினர், நகராட்சி ஆணையர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டவர்களுக்கு அனுப்பியுள்ளனர். இதன் அடிப்படையில் கடந்த பிப்.,6ல் மதுரை மாவட்ட கலெக்டர் கூட்ட அரங்கில் மறுவரையறை தொடர்பாக ஆட்சேபனை மற்றும் கருத்து தெரிவிக்கும் கூட்டம் நடந்தது. இதில் கீழக்கரையில் இருந்து வந்திருந்த பொது மக்களின் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, நேற்று ஆய்வு செய்ய நகராட்சிகளின் நிர்வாக மண்டல இயக்குனர் ஜானகி ரவீந்திரன் வந்திருந்தார். இதனை தொடர்ந்து மீண்டும் மனு அளித்தவர்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தார்.

இது குறித்து மண்டல இயக்குனர் ஜானகி ரவீந்திரன் கூறுகையில் ”தற்போதைய சூழலில் ஆட்சேபனை தெரிவித்தவர்களிடம் கருத்து கேட்டு ஆய்வு நடத்த வந்துள்ளேன். எனது அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்க உள்ளேன். அவரும் உரிய விசாரணை மேற்கொண்டு எழுத்துப்பூர்வ பதிலை விரைவில் தருவார்” என்று பதிலளித்தார்.