கீழக்கரை பொதுமக்கள் சார்பாக மதுரை சென்று மறுவரையறை ஆணையரிடம் முறையிட்ட மனுதாரர்கள் – மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தல்

கீழக்கரையில் வார்டு மறுவரையறை குளறுபடிகள், கீழக்கரை நகராட்சியின் மக்கள் தொகையில் குளறுபடிகள் உள்ளிட்ட பிரச்சனைகளை முன்னிறுத்தி நூற்றுக்கணக்கான கீழக்கரை பகுதியை சார்ந்த சமூக ஆர்வலர்கள், சட்டப் போராளிகள், அரசியல் கட்சி அமைப்பினர்கள் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியருக்கும், கீழக்கரை நகராட்சி ஆணையருக்கும் ஆட்சேபனை மனுக்களை மின்னஞ்சல் வாயிலாகவும், நேரடியாகவும், பதிவுத் தபால் மூலமும் அளித்து இருந்தனர். இந்நிலையில் மனுக்களை அளித்திருந்த அனைவரும் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறும் உள்ளாட்சி அமைப்புகளின் வார்டு மறுவரையறை கருத்து கேட்பு கூட்டத்தில் ஆஜராகுமாறு, கீழக்கரை நகராட்சி ஆணையரிடம் இருந்து கையெழுத்திடாத கடிதம் மனுதாரர் அனைவருக்கும் அனுப்பப்பட்டு இருந்தது.

இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்தி கீழக்கரை பொதுமக்களின் ஆட்சேபனையை நேரடியாக தெரிவிக்கும் விதமாக கீழை நியூஸ் கீழக்கரை சட்டப் போராளிகள் சார்பாக 06.02.18 அன்று மதுரையில் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் கீழக்கரை பொதுமக்கள் சென்று கலந்து கொள்ள வசதியாக வாகன ஏற்பாடு செய்யப்பட்டு சமூக வலைத்தளங்களில் அறிவிப்பு செய்யப்பட்டது. இதனையடுத்து தன்னெழுச்சியாக புறப்பட்ட மனுதாரர்கள் மற்றும் பொதுமக்கள் மதுரை சென்று உள்ளாட்சி அமைப்புகளின் வார்டு மறுவரையறை ஆணையரின் முன்னிலையில் தங்களுடைய ஆட்சேபனை கருத்துக்களை வலுவாக எடுத்து வைத்துள்ளனர்.

இந்த கூட்டத்தில் மறுவரையறை ஆணையரும், மாநிலத் தேர்தல் ஆணையருமான எம்.மாலிக் பெரோஸ்கான் தலைமை வகித்தார். மறுவரையறை ஆணைய உறுப்பினர் செயலர் டி.எஸ்.ராஜசேகர், ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் கே.பாஸ்கரன், பேரூராட்சிகளின் இயக்குநர் எஸ்.பழனிசாமி, மாவட்ட கலெக்டர்கள் வீரராகவராவ் (மதுரை), எஸ்.நடராஜன் (ராமநாதபுரம்), என்.வெங்கடாசலம் (தேனி), டி.ஜி.வினய் (திண்டுக்கல்), ஜி.லதா (சிவகங்கை) மற்றும் மேற்குறிபிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் அதகாரிகள் கலந்து கொண்டனர்.

கீழக்கரை நகரில் இருந்து கீழக்கரை சட்டப் போராளிகள் குழுமத்தின் ஒருங்கிணைப்பாளர் சாலிஹ் ஹுசைன் தலைமையில் சட்டப் போராளிகள் ஜாபீர் சுலைமான், முஹம்மது அஜிஹர், தாஜுல் அமீன், அஹமது கபீர், நூருல் ஜமான், பாதுஷா, அல்தாப், மெஹ்மூது ரிபான், முபீத், SDPI கட்சி சார்பில் கீழக்கரை நகர் நிர்வாகி ஹமீது பைசல் தலைமையில் SDPI கட்சி பிரமுகர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் செயலாளர் ஹமீது யூசுப் தலைமையில் அற்புத குமார் உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள், திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் முன்னாள் சேர்மன் பஷீர் தலைமையில் கட்சி தொண்டர்கள், நிஷா பவுண்டேசன் சார்பில் நஸ்ருதீன் உள்ளிட்டோர் கீழக்கரை பொது மக்கள் சார்பாக கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை வலிமையாக வைத்துள்ளனர். இக்கூட்டத்தில் பேசிய கீழக்கரை நகரவாசிகள் பின்வரும் குற்றச்சாட்டுக்களையும், கோரிக்கைகளையும் மறுவரையறை ஆணையரின் முன்னிலையில் வைத்துள்ளனர்.

குற்றச்சாட்டுகள்

1. பொதுமக்கள் தங்கள் ஆட்சேபனையை தெரிவிக்க போதுமான கால அவகாசம் தரப்படவில்லை

2. கீழக்கரை நகரில் இருக்கும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வார்டு மறு வரையறை பட்டியலின் நகல்கள் வழங்கப்படவில்லை

3. கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தினரால் முறையாக பொது அறிவிப்பு செய்யப்பட வில்லை.

4. தகுதியற்றவர்களை கொண்டு வரையறை செய்யப்பட்டுள்ளதால் வார்டு மறு வரையறை பட்டியலில் ஏகப்பட்ட குளறுபடிகளை செய்துள்ளனர்.

5. வார்டு மறு வரையறை பட்டியலின் அடிப்படையாக இருக்கும் கீழக்கரை மக்கள் தொகையை சட்ட விதிமுறைகளுக்கு முரணாக குறைத்து மதிப்பிட்டு உள்ளனர். ஏறத்தாழ கீழக்கரை பொதுமக்களை காணவில்லை.

6. கீழக்கரை நகராட்சியின் 21 வார்டுகளும் குடியிருப்பு கட்டிடங்களின் அடிப்படையில் மாற்றி அமைக்கப்பட்டு மொத்த வரையறையும் தப்பும் தவறுமாக செய்யப்பட்டுள்ளது.

7. அனைத்து வார்டு பகுதிகளிலும் இயல்பான வாக்குரிமை சதவீதங்கள் துண்டாடப்படும் சூழலை உருவாக்கி உள்ளனர்.

8. கீழக்கரை நகராட்சியில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்கள் தொகையினரும் ஆதார், ஓட்டுநர் உரிமம், ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு உள்ளிட்ட அனைத்து ஆவணங்களிலும் வார்டு மாற்றம் செய்ய வேண்டிய சூழலில் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாவர்

கோரிக்கைகள் :

1. கீழக்கரை நகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் முறையற்ற வகையில் மறு வரையறை செய்யப்பட்டுள்ளதால், இந்த மறு வரையறை பட்டியல் முழுவதையும் திரும்ப பெற வேண்டும்

2. கீழக்கரை நகராட்சியின் மக்கள் தொகையை நகராட்சி ஆவணங்களின் அடிப்படையில் சீர்திருத்தம் செய்ய உரிய ஆய்வு மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட வேண்டும்.

3. சிறப்பு பயிற்சி பெற்ற அதிகாரிகளை கொண்டு , மீண்டும் சட்ட விதிமுறைப்படி சிறப்பு கள ஆய்வுகளை மேற்கொண்டு வார்டு மறு வரையறை பட்டியலை வெளியிட வேண்டும்.

அனைத்து கோரிக்கைகளையும் கேட்டறிந்த உள்ளாட்சி அமைப்புகளின் வார்டு மறுவரையறை ஆணையர், நகராட்சி மண்டல ஆணையர் ஜானகிக்கும், இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் முனைவர் நடராஜனுக்கும், கீழக்கரை நகராட்சி ஆணையாளர் நாராயணனுக்கும் (பொறுப்பு) கீழக்கரை நகராட்சியில் உரிய ஆய்வு செய்து மனுதாரர்களுக்கு தகுந்த பதிலை அளிக்குமாறு பரிந்துரைத்துள்ளனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..