மன்னார் வளைகுடா அரியவகை உயிரினங்கள்பாதுகாப்பு, சுற்றுச்சூழல் கருத்தரங்கு…

கீழக்கரை மண்டல மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகத்தில் உள்ள கடல்வாழ் அரியவகை உயிரினங்களின் பாதுகாப்பு மற்றும்சுற்றுச்சூழல் மேலாண்மை குறித்த கருத்தரங்கு திருப்புல்லாணி அருகே குத்துக்கல்வலசை சமுதாயக்கூடத்தில் நடந்தது.

துணை மண்டல அலுவலர் அருண் பிரகாஷ் வரவேற்றார். மாவட்ட வனஉயிரினத்துறை அலுவலர் டி.கே.அசோக்குமார் தலைமை வகித்து பேசுகையில்,மன்னார் வளைகுடா உயிரின காப்பகத்தில் கடலில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரியவகை கடல்வாழ் உயிரினங்கள் உள்ளது. கடந்த 1972ம் ஆண்டு வனச்சட்டத்தின் படி அழியும் தருவாயில் உள்ள கடல்வாழ் உயிரினங்களை பட்டியல் இனங்களில் கொண்டுவரப்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினங்கள் குறித்த முழுவிபரங்களையும், பொதுமக்களுக்கும், மீனவர்களுக்கும் படக்காட்சிகள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சியாக காண்பிக்கப்படுகிறது. 21 தீவுகளிலும் உள்ள பவளப்பாறைகளை பாதுகாத்தலின் அவசியம், தடைசெய்யப்பட்ட கடல்வாழ் உயிரினங்கள் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்துகருத்தரங்கின் மூலம் விளக்கப்பட்டு வருகிறது என்றார்.

கிராமத்தலைவர்கள் விவேகானந்தபுரம் முனியசாமி, ராஜேந்திரன், கீழக்கரை முனியசாமி, திட்ட அலுவலர் சந்தானகிருஷ்ணன் உட்பட திட்டக்கள பெண் பணியாளர்கள் பங்கேற்றனர். மண்டல அலுவலர் பா.ஜெபஸ் நன்றி கூறினார்.