கையொப்பம் இல்லாமல் அனுப்பப்பட்டு வரும் அழைப்பு கடிதம் – கீழக்கரை நகராட்சிக்கு மக்கள் நல பாதுகாப்புக் கழகம் கண்டனம்

கீழக்கரை நகராட்சியில் வார்டு மறுவரையரை குளறுபடிகள் சம்பந்தமாக ஆன்லைன் மூலமும், நேரடியாகவும், பதிவுத் தபால் வழியாகவும் ஆட்சேபனை மனு செய்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட மனுதாரர் அனைவருக்கும் கீழக்கரை நகராட்சி ஆணையராக பணியாற்றிய திருமதி வசந்தியிடம் இருந்து மதுரையில் நடைபெறும் கருத்து கேட்பு கூட்டத்திற்கான அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் அந்த அழைப்பு கடிதத்தில் எந்த ஒரு நகராட்சி அதிகாரியின் கையொப்பமும் இல்லாமல் கை விடப்பட்டுள்ளது. இதனால் கையொப்பம் இல்லாத கடிதத்தை வாங்கி வாசித்த மனுதாரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து மக்கள் நல பாதுகாப்புக் கழகத்தின் செயற்குழு உறுப்பினர். சட்டப் போராளி சீனி முஹம்மது சேட் மற்றும் செயற்குழு உறுப்பினர் ஹஸன்பாய்ஸ் ஆகியோர் கூறுகையில் ”இன்று கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் இருந்து ஒரு அழைப்பு கடிதத்தினை நகராட்சி அலுவலக ஊழியர் ஒருவர் கொண்டு வந்து தந்தார்.

அந்த அழைப்பு கடிதத்தில், மதுரை மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் எதிர்வரும் 06.02.2018 அன்று காலை 10.30 மணியளவில் மறுவரையறை ஆணைய தலைவர் மற்றும் உறுப்பினர் முன்னிலையில் நடைபெறும் கூட்டத்தில் மனுதாரர், பொதுமக்கள், அரசியல் கட்சிகள் பங்கேற்று தங்கள் கருத்துக்களை, ஆட்சேபனைகளை நேரடியாக தெரிவிக்கலாம் என கூறியுள்ளனர்.

ஆனால் நகராட்சி ஆணையரின் கையொப்பம் இல்லை. தலைமை எழுத்தரின் கையொப்பமும் இல்லை. எந்த ஒரு இளநிலை அதிகாரிகளின் இனிஷியலும் செய்யப்படாமல், இந்த கடிதம் அனைவருக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. இதனை மக்கள் நல பாதுகாப்புக் கழகம் சார்பாக கண்டிக்கிறோம். உரிய அதிகாரிகளின் கையெழுத்தில்லாமல் மனுதாரருக்கு பதில் அனுப்புவது சட்டத்தை அவமதிக்கும் செயலாகும்” என்று தெரிவித்தனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..