மக்கள் நீதி மன்றம் மூலம் ஏழை மக்களுக்கு உடனடி தீர்வு – இலவச சட்ட உதவிகள் வழங்கி தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு சிறப்பான சேவை – வீடியோ விளக்கத்துடன்..

நீதிமன்றத்தில் நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் வழக்குகள், சமரசம் ஏற்படக் கூடிய வழக்குகள் உள்பட பல்வேறு வகையான வழக்குகளுக்கு மக்கள் நீதி மன்றம் மூலம் தீர்வு காணப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்படும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு மூலம் மாதந்தோறும், சட்ட உதவி முகாம்கள் நடத்தப்பட்டு, ஏழை-எளிய மக்களுக்கு கட்டணமின்றி வழக்குகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த மக்கள் நீதி மன்றம் அழைக்கப்படும் லோக் அதாலத், தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக் குழு அலுவலகம், எழும்பூர், சைதாப்பேட்டை, ஜார்ஜ் டவுன் என சென்னை மாநகரில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகங்களிலும் நடைபெறுகிறது. இதேபோல் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் லோக் அதாலத் நடைபெற்று வருகிறது.  தமிழகத்தில் இந்த சட்டப்பணிகள் ஆணை குழுவின் தலைமையகம் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் செயல்படுகிறது.

இந்த சட்டப் பணிகள் ஆணைய குழு எதற்காக செயல்படுகிறது ? இந்த குழுவின் பணிகள் என்ன? யாரெல்லாம் இந்த குழு வழங்கும் இலவச சட்ட உதவிகளை பெற முடியும்? என்பதெல்லாம் இன்னும் பொது மக்களுக்கு தெரியாமல் இருப்பது வேதனை அளிப்பதாகவே உள்ளது.

ஆகவே அன்பான கீழை நியூஸ் வாசக பெருமக்களே..

தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சேவைகளை தெரிந்து கொண்டு பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு வழி காட்டுங்கள்..

தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு – ஓர் அறிமுகம்

இலவச சட்ட உதவிகள் பெறுவதற்கு தகுதியானவர்கள் யார் ? யார்?

சட்ட உதவி பெறுபவர்களுடைய முக்கிய தகுதிகள் என்ன.?

வழக்கு தாக்கல் செய்தவரோ அல்லது எதிர் வழக்கு செய்பவரோ சட்டப்படி சட்ட உதவிகள் பெற தகுதியானவர்கள் ஆவார்கள், அப்படி உதவி பெற அந்த நபர்கள் கீழ் கண்ட தகுதிகள் பெற்றவராக இருக்க வேண்டும்.

★ஒருவர் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மற்றும் மலை வாழ்குடி பிரிவினை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

★அரசியலமைப்பு சட்டம் சரத்து 23 ல் குறிப்பிடப் பட்டுள்ள பிச்சைக்காரர்கள் மற்றும் ஆள் கடத்தலில் பாதிக்கப்பட்டோர்.

★பெண்கள் அல்லது குழந்தைகள்.

★1995 ஆம் ஆண்டு ஊனமுற்றவர்கள் (சமவாய்ப்புகள், உரிமைகள், பாதுகாப்பு மற்றும் ழுழுபங்கேற்பு) சட்டம் பிரிவு 2 சரத்து (1) ன் படி குறிப்பிட்டுள்ள படி உள்ள ஊனமுற்றோர்.

★பேரழிவு, இனக்கிளர்ச்சி, சாதி வன்கொடுமை, வெள்ளம், பஞ்சம், நில நடுக்கம், தொழில் அழிவு ஆகிய எதிர் பாராத நிகழ்வுகளால் பாதிக்கப்பட்ட நபர்.

★தொழிற்சாலையில் பணி புரியும் தொழிலாளி.

★சிறைக்காவலில் இருப்பவர் அல்லது பாது காப்பு இல்லம், இளம் சிறார்கள் இல்லம், மனநல மருத்துவமனை, மனநல காப்பகம் ஆகிய இடங்களில் சட்டப்படி காவலில் வைக்கப்பட்டவர்கள்.

★பிரிவு 12 (எச்) இல் குறிப்பிட்டப்படி ஆண்டு வருமானம் ₹ 100000 (ரூபாய் ஒரு லட்சம் மட்டும்) மிகாமல் உள்ளவர்கள்.

மேற்குறிப்பிட்டுள்ள தகுதிகள் பெற்ற நபர் யாராக இருந்தாலும் , அடிப்படையாக ஏற்றுக் கொள்ளக் கூடிய காரணங்களாய் இருந்தால் அவர்கள் வழக்கு தொடரவும், எதிர் வழக்கு நடத்தவும் இலவச சட்ட உதவிகள் பெற தகுதியுடையவர் ஆவார்கள்.

மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் இலவச சேவைகள் என்னென்ன?

★சிவில் வழக்குகள் சம்பந்தமாக.

★குடும்பநல வழக்குகள் சம்பந்தமாக.

★வங்கி கடன் சம்பந்தபட்ட வழக்குகள் மற்றும் பிரச்சனைகள் சம்பந்தமாக.

★குற்றவியல் வழக்குகள் நடத்துதல், மற்றும் ஜாமீனில் வெளியில் வருதல் சம்பந்தமாக.

★வழக்குகளை நேரடியாக கோர்ட் முறையில் இல்லாமல் மாற்று முறையில் தீர்வு காண்பது. அதாவது நீதிமன்றம் செல்லாமல் சமரச தீர்வு ஏற்படுத்துவது.

★பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமைகள்பற்றி தெரிந்து கொள்ள.

★மக்கள் நீதிமன்றம் / நடுவர் அரங்கங்கள் பற்றி விழிப்புணர்வு பெற .

★மோட்டார் வாகன விபத்துகளில் இழப்பீடு மற்றும் ஆலோசனை பெற.

★காசோலைகள் கொடுக்கல் வாங்கல் ஆகிய வற்றில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து.

★தொழிலாளர்களுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து.

பொது மக்கள் அவர்களது பிரச்சனைகளை மனுவாக சமர்ப்பிக்கலாம். வட்ட சட்ட பணிகள் குழு அந்தந்த வட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் செயல் படுகிறது.

மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அந்தந்த மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் செயல் படுகிறது. தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைகுழுவினையோ, அல்லது தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள நீதிமன்றத்தையோ நேரில் அணுகி உரிய நிவாரணம பெறலாம்

இப்படி ஒரு இலவச சேவை இருப்பது எத்தனை பேருக்கு தெரியும்.?

  • உங்களது பிச்சனைகளை இந்த குழுவினர் தீர்த்து வைப்பார்கள்.
  • தீர்வு காண முடியாத பிரச்சனைகளாக இருந்தால் அவர்களே வழக்கறிஞர் வைத்து நீதிமன்றத்தில் தீர்வு பெற்று தருவார்கள்.
  • வழக்கறிஞர் கட்டணம் உட்பட நீங்கள் எந்த ஒரு கட்டணமும் செலுத்த தேவை இல்லை.
  • வழக்கறிஞர்களுக்கான கட்டணத்தை அரசே கொடுக்கும் .

இனி கவலையை விடுங்கள்… வழக்கில் வென்று காட்டுங்கள்….

மேலும், இது குறித்த சந்தேகங்களுக்கும், ஆலோசனைகளுக்கும் அணுகுங்கள்.

தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு

வடக்கு கோட்டை சாலை, நுழைவாயில் எண் : 6, உயர்நீதிமன்ற வளாகம், சென்னை -600 104 தொலைபேசி :044 25342834 சட்ட உதவிக்கு :044 25342441 கட்டணம் இல்லா தொலைபேசி :1800 425 2441.

புகைப்படத்தொகுப்பு

புனித ரமலான் வாழ்த்துக்கள்..