புற்று நோயை புரிந்து கொள்வோம் …

மனித இனத்தை மிகவும் அச்சுறுத்தும் ஒரு உயிர்க்கொல்லியாக புற்றுநோய் எப்போதும் இருந்து வருகிறது. ஆனால், அப்படி எல்லாம் பதற்றம் கொள்ள வேண்டியதில்லை. இன்று நவீன மருத்துவம் எவ்வளவோ வளர்ந்திருக்கிறது. புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் திறன் இன்றைய மருத்துவத்துக்கு உண்டு.

வந்தாலும் குணப்படுத்தும் அளவும் மருத்துவம் முன்னேறி இருக்கிறது என்று நம்பிக்கை தருகிறார் கதிர்வீச்சு புற்றுநோய் மருத்துவர் சுமனா.புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணங்கள், அறிகுறிகள், வகைகள், பரிசோதனைகள், மருத்துவ சிகிச்சைமுறைகள் மற்றும் தடுப்புமுறைகள் பற்றி விளக்கமாகக் கேட்டோம்…

‘‘கட்டுப்பாடற்ற உயிரணு (உடல்செல்) பிரிவால் திசுக்கள் அசாதாரண முறையில் வளர்ச்சி அடைவதையே புற்றுநோய் என்கிறோம். அதாவது, உடலில் ஏற்படும் கட்டிகள் இரண்டு வகைகளாக உள்ளது. ஒன்று தீங்கு விளைவிக்கும் புற்றுநோய் செல்களையுடைய கட்டிகள். இந்த செல்கள் அருகிலுள்ள நல்ல செல்களையும் உடலுறுப்புகளையும் ஆக்கிரமித்து அழித்துவிடும் தன்மையுடையது.

இந்த புற்றுநோய் செல்கள் உடலின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு நேரடியாகப் பரவுதல், நெறிக்கட்டிகள், நிணநீர்க்கட்டிகள் மூலம் பரவுதல் மற்றும் ரத்தநாளங்கள் மூலம் பரவுதல் என்று மூன்று வகைகளில் பரவுகிறது.

ஆனால் சில வகைக் கட்டிகளிலுள்ள செல்கள் கட்டுப்பாடின்றி வளர்வதோ, அருகிலுள்ள திசுக்களை ஆக்கிரமிப்பதோ, உடலின் பிற பகுதிகளுக்கு பரவுவதோ இல்லை. இவற்றை தீங்கு விளைவிக்காத கட்டிகள் என்கிறோம். எனவே எல்லா கட்டிகளும் புற்றுநோய்க் கட்டிகள் அல்ல என்பதை நாம் புரிந்து கொள்வது அவசியம்.’’புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணங்கள்…

‘‘நமது வாழ்க்கைமுறை மாற்றங்களால் புற்றுநோய் ஏற்படுகிறது. மது, புகையிலை, சிலவகை வேதியியல் பொருட்கள், நச்சுப்பொருட்கள், ஹார்மோன் கோளாறுகள் போன்றவை புற்றுநோயை உண்டாக்கும் முக்கிய காரணிகளாக இருக்கிறது. மேலும் மரபியல் காரணம், சூரியனின் புற ஊதாக்கதிர் போன்ற பிற கதிர்வீச்சுக்கு உட்படுதல், உணவு முறை மற்றும் உடல் செயல்பாடுகளில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவற்றாலும் புற்றுநோய்கள் உண்டாகிறது.

மார்பகத் திசுக்களில் குறிப்பாகப் பால்நாளங்கள் மற்றும் பால் சுரப்பிகளில் ஏற்படும் மார்பகப் புற்றுநோய் ஆண், பெண் என்று இருபாலருக்கும் ஏற்பட்டாலும், பெரும்பாலும் பெண்களுக்கே உண்டாகிறது. மாதவிடாயின் இறுதிக் கட்டத்தில் இருக்கும் 50 வயதைத் தாண்டிய பெண்களிடம் இந்நோய் பரவலாகக் காணப்படுகிறது.’’

புற்றுநோயின் அறிகுறிகள் என்ன?

‘‘புற்றுநோய் வளரும் உடல் பகுதியில், அது ஏற்படுத்தும் பாதிப்பை வைத்தே அறிகுறிகள் உண்டாகும். உணவுக்குழாய் புற்று இருப்பவருக்கு, உணவுக்குழாய் சுருங்குவதால் உணவு விழுங்கும்போது வலி ஏற்படுகிறது. பெருங்குடல் மலக்குடல் புற்றால் குடல் சுருங்கி அடைப்புகள் ஏற்படுவதால் உண்ணுதல், மலங்கழித்தல் போன்ற பழக்கவழக்கங்களில் மாறுதல் ஏற்படுகின்றன.

சில பொதுவான அறிகுறிகள் நேரடியான அல்லது இடமாறிப் பரவலோடு தொடர்புடையதாக இருப்பதில்லை. புற்றுநோயின் மறைமுக விளைவுகளால் எதிர்பாராத எடைகுறைவு, காய்ச்சல், எளிதாக சோர்வடைதல், சருமத்தின் நிறம், தோற்றம், களைப்பாக உணர்தல் போன்ற அறிகுறிகளும் ஏற்படுகின்றன.’’

புற்றுநோயின் வகைகள் பற்றிச் சொல்லுங்கள்…

‘‘மனிதர்களைப் பாதிக்கும் 200 வகையான அறியப்பட்ட புற்றுநோய் வகைகள் உள்ளன. பெரும்பாலான புற்றுநோய்கள் தோன்றும் இடத்தை வைத்தே பெயர் பெறுகின்றன. உதாரணமாக நுரையீரல் புற்று நுரையீரலில் தோன்றுகிறது. மார்பகப் புற்று மார்பகத்தில் தோன்றுகிறது. உடலின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்குப் புற்றுநோய் பரவுவது ‘நோய் இடம்மாறல்’ (Metastasis) என்று அழைக்கப்படுகிறது.

புற்று நோயின் வகை, அறிகுறி மற்றும் அதன் கடுமையைப் பொறுத்தே அதற்குரிய மருத்துவ முறைகள் அமைகிறது. பெரும்பாலான மருத்துவ சிகிச்சைகள் அறுவை சிகிச்சை மருத்துவம், கதிர்வீச்சு மற்றும் வேதியியல் மருத்துவ முறைகளை உள்ளடக்கி உள்ளது.’’

நோய் கண்டறியும் முறை…

‘‘இன்றைய மருத்துவத் தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலம் புற்றுநோயைத் தொடக்கத்திலேயே முறையான பரிசோதனைகள் மூலம் கண்டறிந்து, சரியான மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டால் அதை எதிர்த்து நமது வாழ்க்கையைத் தொடர முடியும்.

பெண்கள் தங்களுடைய மார்பகங்களில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி மருத்துவரிடம் ஆலோசித்து உரிய பரிசோதனைகள் செய்துகொள்வது நல்லது. இதனால் மார்பகப் புற்றினை முன்கூட்டியே கண்டறிந்து உரிய சிகிச்சையளிக்க உதவியாக இருக்கும்.

Mammogram, Ultrasound, Biopsy போன்ற பரிசோதனைமுறைகள் மார்பிலுள்ள கட்டிகள் சாதாரண கட்டிகளா அல்லது புற்றுநோய்க் கட்டிகளா என்பதை கண்டறிய பயன்படுத்தப்படுகிறது. பெரும்பான்மையான மார்புக் கட்டிகள் புற்றுநோய்க் கட்டிகளாக இருப்பதில்லை. இருந்தபோதும் அவற்றை ஒரு மருத்துவர் ஆலோசனையுடன் பரிசோதனை செய்வது அவசியம்.’’

பொதுவான பரிசோதனை…

‘‘புற்றுநோயைத் தொடக்க நிலையில் அறிகுறிகள் தோன்றும் முன்னரே கண்டறியத் திரையிடல்(Screening) என்னும் பரிசோதனை முறை உதவுகிறது. அசாதாரணமான திசுக்களோ, புற்றோ ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்டால் மருத்துவம் செய்வதும் குணப்படுத்துவதும் எளிது. ஆனால், புற்று வளர்ந்து பரவிய பின்னரே அதன் அறிகுறிகள் வெளிப்படுகின்றன. அதன் பின் புற்றுநோய்க்கு சிகிச்சை செய்வதோ குணப்படுத்துவதோ சற்று கடினமாகி விடுகிறது.

புற்றுநோயாக இருக்கலாம் என்று சந்தேகப்படும்போது ஒருவருக்கு மருத்துவ சோதனைகள் செய்யப்படுகின்றன. இதில் ரத்தப் பரிசோதனை, X-கதிர், MRI Scan மற்றும் புற்றுநோயின் தன்மைகளைக் கண்டறிய உதவும் பயாப்சி என்கிற திசுப் பரிசோதனை முறைகளான Needle Biopsy, Pap Smears மற்றும் CT Scan, Endoscope உதவியுடன் செய்யப்படும் பரிசோதனை முறைகளும் மருத்துவரால் பரிந்துரை செய்யப்படுகிறது.’’

புற்றுநோயைக் குணப்படுத்த முடியுமா?!

‘‘புற்றுநோயைக் குணப்படுத்தும் மருத்துவம் (Remedial Treatment) என்பது நோயாளியை நன்றாக இருப்பதாக உணரவைக்கும் ஒரு முயற்சியே. புற்றுநோயை எதிர்த்துத் தாக்கும் முயற்சி இதில் அடங்கலாம்; அடங்காமலும் இருக்கலாம். புற்றுநோயாளிகள் அனுபவிக்கும் உடல், உணர்வு, உளவியல், ஆன்மரீதியிலான மற்றும் சமுதாய வேதனையைக் குறைப்பது இம்மருத்துவத்தில் அடங்கியுள்ளது.’’

புற்றுநோய் மருத்துவத்தில் இருக்கும் முக்கியமான சிகிச்சைகளை விளக்குங்கள்…

‘‘பிணி தீர்க்கும் மருத்துவத்திலும், வாழ்வை நீட்டிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கும் அறுவைசிகிச்சை மருத்துவமே பெரும்பான்மையான பரவாப்புற்றுக்கு அடிப்படையான மருத்துவ முறையாக உள்ளது.

வழக்கமாக திசுச்சோதனை தேவைப்படுவதால் தீர்க்கமாக நோயை அறிவதற்கும், வளர்நிலையைக் கணக்கிடவும் இந்த முறை முக்கிய பங்கு வகிக்கிறது. ஓரிடத்தில் உள்ள புற்றை மொத்தமாகவும் சில நோயாளிகளுக்கு அப்பகுதியில் இருக்கும் நிணநீர் முடிச்சுகளையும் சேர்த்து அகற்றவும் அறுவை மருத்துவ முறை மேற்கொள்ளப்படுகிறது. பெரும்பாலும் கண்ணுக்குப் புலப்படும் கட்டிகள் அறுவை சிகிச்சைகள் மூலம் அகற்றப்படுகிறது.

லேப்ரோஸ்கோப்பி அறுவை சிகிச்சைஉடலின் உள்ளுறுப்புகளில் செய்யப்படும், புற்றுக் கட்டிகள் மற்றும் பிறவகை அறுவை சிகிச்சைகளுக்கு சிறிய அளவிலான துவாரங்கள் மூலம் Laparoscope என்ற உபகரணத்தைப் பயன்படுத்தி இந்த சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. 0.1 முதல் 1.5 சென்டி மீட்டர் அளவிலான துவாரங்கள் இட்டு அறுவை சிகிச்சை செய்வதால் இதை Keyhole Surgery என்றும் அழைக்கிறோம்.

Robotic Surgery

கணினியின் உதவியோடு Robotic Eye மூலமாக Robotic Arm-ஐ பயன்படுத்தி இந்த அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. கணினி உதவியுடன் முப்பரிணாம தோற்றத்தில் புற்றுநோய் பாதிப்புகளைக் கண்டறிந்து சிகிச்சையளிக்க இந்த முறை உதவுகிறது.

வேதிச்சிகிச்சை (Chemotherapy)

ரத்தநாளங்கள் மூலம் மருந்தை செலுத்தி புற்றுநோய் செல்களைக் கட்டுப்படுத்துவதற்கு இந்த சிகிச்சைமுறை உதவுகிறது. மார்பகப்புற்று, பெருங்குடல் மலக்குடல் புற்று, கணையப் புற்று, எலும்புத்திசுப் புற்று, விதைப்புற்று, கருப்பைப்புற்று, சில நுரையீரல் புற்றுகள் போன்ற வெவ்வேறு வகையான புற்று நோய்களைக் குணப்படுத்துவதில் அறுவை சிகிச்சையோடு இணைந்து வேதிச்சிகிச்சையும் பல நோயாளிகளுக்குப் பயனுள்ளதாக இருந்து வருகிறது.

புற்றுநோய்க்கு மூல உயிரணு மாற்று மருத்துவம் (Stem Cell Transplant)பொதுவாக மூல உயிரணு மாற்றத்தில் அறுவை மருத்துவத்துடன் புற்றுநோயை முற்றிலும் அகற்ற அதிக அளவிலான வேதிமருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. எலும்பு மஜ்ஜையில் உள்ள மூல உயிரணுக்கள் இம்மருத்துவத்தால் இறந்துவிடுகின்றன.

இந்த சிகிச்சைக்குப் பின் அழிக்கப்பட்ட மூல உயிரணுக்களுக்குப் பதிலாக புதிய மூல உயிரணுக்கள் செலுத்தப்படுகின்றன. இவை ரத்த மாற்றம் போலவே ஒரு நரம்பு வழியாக செலுத்தப்படுகின்றன. நாளடைவில் இவை எலும்பு மஜ்ஜையில் படிந்து, வளர்ந்து, ரத்த அணுக்களை உற்பத்தி செய்ய ஆரம்பிக்கின்றன. இம்முறைக்கு மூல உயிரணு ஒட்டுதல் என்று பெயர்.

கதிர்வீச்சு சிகிச்சை (Radiation Therapy)

கதிர்வீச்சு மருத்துவம் அயனியாக்கக் கதிர்வீச்சைப் பயன்படுத்தி புற்றுநோயின் அறிகுறிகளைக் குணப்படுத்தவோ அல்லது சீர்ப்படுத்தவோ உதவுகிறது. புற்றுநோய் பாதித்த எல்லா நோயாளிகளுக்கும் பாதி அளவு சிகிச்சைக்கு இது பயன்படுத்தப்படுகிறது.

பெரும்பாலும் கண்ணுக்குப் புலப்படாத புற்றுநோய் செல்களை அகற்ற இந்த முறை பயன்படுத்தப்படுகிறது. கதிர்வீச்சை நேரடியாக திசுவுக்குள்ளேயே செலுத்தி செய்கிற அக சிகிச்சைமுறை மற்றும் புறசிகிச்சைமுறை என்று பொதுவாக இரண்டு வகைகளாக இந்த கதிர்வீச்சு சிகிச்சை செய்யப்படுகிறது.

Stereotactic Radio Surgery (SRS)

இது அறுவை சிகிச்சை இல்லாமல், புறநோயாளிகளாகவே வைத்து கொடுக்கக்கூடிய இயல்பானதொரு கதிரியக்க சிகிச்சை முறை. மூளையின் செயல்பாடுகளில் ஏற்படும் அசாதாரண நிலை மற்றும் சிறு கட்டிகளுக்கு சிகிச்சையளிக்க இந்த முறை பயன்படுகிறது.

இம்முறையானது வரையறுக்கப்பட்ட அதிகபட்ச கதிர்வீச்சினை துல்லியமாக இலக்குகளுக்கு செலுத்தி சிகிச்சையளிக்க உதவுகிறது. இதுபோல் பலவகையான கதிர்வீச்சு சிகிச்சைமுறைகள் இன்றைய நவீன மருத்துவத்தில் செய்யப்பட்டு வருகின்றன. அதனால், புற்றுநோய் வந்தாலும் கவலை கொள்ள வேண்டியதில்லை. உரிய நேரத்தில் பரிசோதனைகள் மேற்கொண்டு, சிகிச்சைகள் பெற்றுக் கொண்டால் போதும்!’’

நன்றி :-குங்குமம் டாக்டர்

1 Comment

Comments are closed.