சென்னை 41வது புத்தகக் கண்காட்சி – கீழை பதிப்பகம் (கீழை நியூஸ்) பங்கேற்கிறது…

சென்னையில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றாலும் புத்தகக் கண்காட்சி என்பது ஒரு முக்கிய நிகழ்வாகவே சமூக ஆர்வலர்களால் பார்க்கப்படுகிறது.  நாளை (10-01-2018) முதல் 22-01-2018 வரை சென்னை கீழ்ப்பாக்கம் புனித ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் 41வது புத்தக கண்காட்சி நடைபெறுகிறது. இந்தப் புத்தக கண்காட்சி  பபாசி அமைப்பினரால் நடத்தப்படுகிறது.

இந்தப் புத்தக கண்காட்சியில் அனைவரையும் கவரும் வகையில் அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற வகையிலான புத்தகங்கள் விற்பனைக்கு வர உள்ளது.  இந்தப் புத்தக கண்காட்சியில் அரசியல் தலைவர்கள் முதல் பிரபல எழுத்தாளர்கள் வரை கலந்து கொள்ள உள்ளார்கள்.

முதன் முறையாக இந்தப் புத்தக கண்காட்சியில் கீழை பதிப்பகமும் (கீழை நியூஸ்)நிலவொளி பதிப்பதகத்துடன் இணைந்து பங்கு பெறுகிறது.  கீழை பதிப்பகம் (கீழை நியூஸ்) 13வது எண் அரங்கத்தில் இடம் பெறுகிறது.  இந்த அரங்கில் சமுதாய விழிப்புணர்வு எழுத்தாளர் முத்துக்கிருஷ்ணன் படைப்புகளும் கிடைக்கும். மேலும் எழுத்தாளர் முத்துக்கிருஷ்ணன், கீழக்கரை சட்டப்போராளிகள் குழும ஒருங்கிணைப்பாளர் சாலிஹ் ஹுசைன் மற்றும் கீழை பதிப்பகம் (கீழை நியூஸ்) இயக்குனர் முஜம்மில் இபுராஹிம் ஆகியோர் கலந்துரையாடல் மற்றும் விளக்கம் அளிக்க உள்ளார்கள்.

ஆண்டுதோறும் சென்னையில் நடைபெறும் புத்தகக் காட்சியின்போது கல்லூரி மற்றும் பள்ளி மாணவியரிடம் அவர்களது பேச்சு மற்றும் எழுத்துத் திறமைகளை வெளிக்கொணர்ந்து பாராட்டும் பரிசும் வழங்கும் பொருட்டு பல்வேறு நிலைகளில் பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடத்தி, அவர்களிடையே வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவதற்காக புத்தகங்களையும், கலந்துகொள்வோர் அனைவருக்கும் சான்றிதழ்களையும் பபாசி வழங்கி வருகிறது.

ஆண்டுதோறும் புத்தகக் காட்சியின்போது சிறந்த எழுத்தாளர்கள், படைப்பாளர்கள், சிறந்த புத்தக விற்பனையாளர்களுக்கு பபாசி பரிசுகள் பலவற்றை வழங்கி கௌரவித்து வருகிறது. ‘பதிப்பகச் செம்மல்’ க.கணபதி விருது சிறந்த நூல் வெளியீட்டாளர்களுக்கும், பதிப்புச் செம்மல் மணிவாசகர் பதிப்பகத்தின் திரு. மெய்யப்பன் விருது சிறந்த புத்தக விற்பனையாளருக்கும், அழ. வள்ளியப்பா விருது குழந்தைகளுக்கான சிறந்த நூல் எழுதியவருக்கு வழங்கப்படுகிறது.