முத்தலாக் தடை சட்டமா?? தண்டனைக்குரிய சட்டமா?? குழப்பத்தில் மத்திய அரசு?? இல்லாத ஒன்றுக்கு சட்டம் இயற்றும் அரசாங்கம்..

தடை சட்டம் என்றால் ஒரு காரியத்தை அறவே செய்ய முடியாத அளவுக்கு தடுக்க கூடியதாக இருக்க வேண்டும், அதுதான் தடை சட்டம் ஆகும்.  ஆனால் இப்பொழுது மத்திய அரசாங்கம் இயற்றி இருக்கும் சட்டமோ முத்தலாக் என்பது கூடாது,  ஆனால் அதையும் மீறி செய்தால் மூன்று வருட தண்டனை என்று ஒரு சுளியை சேர்த்துள்ளது.  அத்தோடு இல்லாமல் தண்டனையில் இருக்கும் காலத்தில் ஜீவனாம்சமும் கொடுக்க வேண்டும். இதைப் படித்து, சிந்தித்துதான் சட்டமாக்கினார்களா? என்ற அளவுக்கு சந்தேகங்கள் எழுகின்றன.  அவ்வாறானில் ஒருவன் தவறு செய்து 3 வருட தண்டனைக்கும் தயார் என்ற நிலைக்கு வந்து விட்டான் என்றால் முத்தலாக் செய்யலாம் என்பதையே காட்டுகிறது.  ஆகையால் முத்தலாக் முறை இப்பொழுதும் தடை செய்யப்படவில்லை, தண்டனை அளிக்க கூடிய சட்டமாக்கப்பட்டுள்ளது என்பதுதான்  நிதர்சனமான உண்மை.  இந்த போலித்னமான தண்டனைச் சட்டம் மூலம் சாமானியனையும் தண்டனை வளையத்திற்குள் கொண்டு வந்து விட முடியும் என்பதே சமுதாய ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது. முத்தலாக் என்பது இஸ்லாமியர்கள் பிரச்சினையாக இன்று விவாதிக்கப்படுவதாலும், பேசப்படுவதாலும் இப்பிரச்சினையை இஸ்லாமிய பார்வையில் பார்ப்பதுதான் சிறந்த செயலாகும்.  முதலில் முத்தலாக் என்ற ஒரு செயல்பாடு இஸ்லாத்தில் உள்ளதா?? என்றால் “இல்லை” என்பதுதான்  சரியான பதிலாகும்.  இன்று இதைப் பற்றி விவாதித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும் இதுதான் உண்மை. ஏனென்றால் இன்று தடை சட்டம் கொண்டு வந்திருக்கும் முத்தலாக் எனும் முறை இஸ்லாத்தில் இல்லாத ஒரு முறையாகும். எந்த இஸ்லாமிய சட்ட புத்தகத்திலும் ஒரு ஆண்மகன் ஒருவன் ஒரே சமயத்தில் மூன்று முறை தலாக் என்று நேரடியாகவோ அல்லது பிறர் கிண்டலாக கூறும் வகையில் தொலைபேசியிலோ அல்லது ஈமெயில் மூலமாகவோ ஒரு பெண்ணை விவாகரத்து கூறிவிட முடியும் என்றால் நிச்சயமாக அதற்கு இஸ்லாம் மார்க்கத்தில் எந்த விதத்திலும் அனுமதி இல்லை.  ஆனால் இதனுடைய முழு விளக்கமும் அறியாமல்,  முழு விளக்கமும் கேட்காமல் இந்த முறைக்கு மத்திய அரசு அவசர அவரசமாக தடை சட்டம் என்ற பெயரில் தண்டனைக்குரிய சட்டத்தை கொண்டு வந்திருப்பதுதான மிகவும் வேதனையான விசயம்.

அப்படியென்றால் தலாக் என்பது இஸ்லாம் மார்க்கத்தில் இல்லையா?? மூன்று முறை தலாக் சொல்லி பிரிய தேவை இல்லையா?? என்ற கேள்விகள் எழும் ஆனால் அதற்கெல்லாம் பதில் நிச்சயமாக “உண்டு” என்பதுதான் பதில்.  ஆனால் இன்று மத்திய அரசாங்கமும் அதைப் பற்றி ஞானமும் இல்லாமல் சட்டமும் இயற்றி அதற்கு வக்காலத்து வாங்குபவர்கள் நினபைபது போல் இல்லை என்பதை முதலில் புரிந்து கொள்ள முடியும். இஸ்லாம் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட விசயங்களை எல்லாம் ஹலால் என்று கூறுவார்கள்,  அதே போல்தான் தலாக் என்பதும் அனுதிக்கப்பட்ட விசயம்.  ஆனால் அதே சமயத்தில் அதுனுடைய பாதகத்தை இஸ்லாமிய மக்கள் விளங்க வேண்டும் என்பதற்காக நபிமொழிகளில் ஹலால் ஆக்கப்பட்ட விசயங்களில் படைத்த இறைவனால் மிகவும் வெறுக்கக் கூடிய விசயம் தலாக் என்ற கோடிட்டு காண்பிக்கப் படுகிறது.  இந்த வாக்கியத்தின் அடிப்படை நோக்கம் தலாக் என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையை மாற்றியமைக்க கூடிய விசயமாகும், ஆகையால் அந்த விசயத்தை கையாளக் கூடிய ஆண்கள் மிகவும் நிதானத்துடனும், அதற்கு மாற்று வழியே இல்லை என்ற நிலை வரும் பட்சத்திலேயே இந்த தலாக் என்பதை கையாள வேண்டும் என்பதை வலியுறுத்துவதை நாம் அறிந்து கொள்ள முடியும்.

அதே சமயம் தலாக் என்பது எளிதாக அடுத்த திருமணம் செய்து கொள்வதற்கும் அல்லது ஒரே சமயத்தில் நான்கு பெண்களை திருமணம் செய்வதற்கும் வழி வகுக்கிறது என்பதாக இன்று அறியாத விமர்சகர்கள் கூறி வருகிறார்கள்.  ஆனால் இந்த தலாக் முறையால் சமுதாயத்தில் பெண் எவ்வாறு கண்ணியப்படுத்தப் படுகிறாள் அல்லது காக்கபடுகிறாள் என்பதை அறிந்தால் நிச்சயமாக அவ்வாறு விமர்சனம் செய்ய மாட்டார்கள்.  இஸ்லாமிய முறைப்படி ஒரு ஆண்மகன் தலாக் என்ற நிலைக்கு வந்து விட்டால் மூன்று மாத தவணையில் தலாக் சொல்ல வேண்டும் முதல் முறை தலாக் என்று கூறிவிட்டு இரண்டாவது தலாக் என்று கூற ஒரு மாத காலம் இடைவெளி இருக்க வேண்டும் அதே போல் மூன்றாவது முறைக்கும் பொறுந்தும், ஆக மூன்று முறை தலாக் கூறி முடிக்க மூன்றாவது மாத காலத்தை அடைந்திருக்க வேண்டும்.  இது சாமானிய மனிதனாக பார்க்கும் பொழுது இதனுடைய தாக்கம் தெரியாது, ஆனால் இதனால் பெண்ணுக்கும் ஆணுக்கும் பல சாதங்கள் உள்ளன.  அதில் முக்கியமான காரணம் ஒரு பெண் கருவுற்றிருந்தாள் அதனுடைய உண்மைத்தன்மை வெளி உலகுக்கு அறிய குறைந்தது 45 நாட்கள் ஆகும். ஆகையால் தலாக் சொல்பவன் 2 மாதத்திற்கு மேல் தவணை எடுத்து தலாக் கூறும்பொழுது தன் மனைவி கருவுற்றிருக்கிறாள் என்பதை அறிந்தால் அம்மனிதன் மனம் மாறவும் வாய்ப்பு உள்ளது (அதிகமான விவாகரத்து தன் மனைவி கருவுறவில்லை என்ற காரணத்தினாலே உருவாகிறது என்பது நாம் அறிந்த விசயம்).  அதையும் மீறி ஒருவன் தன் மனைவியை விவாகரத்து செய்தாலும் பிறக்கப் போகும் குழந்தைக்கு இவன்தான் தகப்பன் என்ற விலாசமும் வெளி உலகுக்கு தெரிந்து விடும். இன்றைய காலகட்டத்தில் இறை சட்டத்திற்க மாறாக விவாகரத்துக்கள் நடப்பதால் பல குழந்தைகளின்  எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது என்பது நாம் அறிந்த விசயம்.

அதற்கும் மேலாக ஒரு இஸ்லாமியன் தலாக் என்பதில் அவசரப்பட்டு விடக்கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக ஒருவன் விவாகரத்து செய்த பின் மீண்டும் சேர்ந்து வாழ நினைத்தால், விவாகரத்து ஆன பெண் வேறு ஒருவனுக்கு மணமாகி பின் அவள் அத்திருமண வாழ்கையில் இருந்து மீண்டு வரும் சூழல் ஏற்பட்டு,  பின் அப்பெண்ணும் விரும்பினால் மட்டும் தான் அவ்வாறு விவாகரத்து செய்த பெண்ணை மீண்டும் திருமணம் செய்து கொள்ள முடியும் என்ற கடுமையான சட்டத்தையும் கொடுத்துள்ளது. இதனால் ஒருவன் எளிதில் தன் மனைவியை விவாகரத்து செய்வது தடுக்கப்படுகிறது.  ஆனால் இவ்வாறான கடுமையான சட்டங்கள் இல்லாத பிற கலாச்சாரத்தில் விவாகரத்து ஆன பின்பும் சேர்ந்து வாழ்ந்து, அதன் மூலம் பிறக்கும் குழந்தைகள் சமுதாயத்தாலும், சட்டத்தாலும் புறக்கணிக்கப்படும் அவலத்தை நாம் தினம் தினம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அதே போல் தலாக் காலங்கள் கடந்த பின்பு அப்பெண்ணுக்கு இஸ்லாம் மார்க்கம் முழு சுதந்திரமும் வழங்குகிறது, அவள் விரும்பியபடி வாழ்கையை அமைத்துக் கொள்ள எல்லா வகையான அனுமதியும் வழங்குகிறது எக்காரணத்திலும் தலாக் என்ற காரணத்தைக் கூறி அடிமைத்தனம் செய்யக் கூடாது என்பதையும் வலியுறுத்துகிறது.

தலாக் பற்றிய சட்டம் இஸ்லாமியர்களின் வேதமான குர்ஆனில் இரண்டாவது அத்தியாயம் 227 முதல் 241 வசனங்கள் தெளிவாக கூறப்பட்டுள்ளது. இந்த வசனங்களை படித்து பார்த்தால் தலாக் சட்டத்தில் பெண்ணுக்கு உள்ள சாதகங்களை எளிதாக அறிந்து கொள்ள முடியும். http://www.tamililquran.com/qurandisp.php?start=2#2:227

ஆனால் இன்று முத்தலாக் சட்டத்தை இஸ்லாமியர்கள் கடுமையாக எதிர்ப்பதற்கு காரணம், இஸ்லாம் மார்க்கத்தில் இல்லாத ஒன்றை இஸ்லாத்தின் பெயரில் சட்டத்தை இயற்றி இஸ்லாமிய சமுதாயத்திற்கு களங்கம் விளைவிக்க மத்திய அரசாங்கம் முற்படுவதுதான் என்பதை எதிர்ப்பை விமர்சனம் செய்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

சத்திய பாதை மாத இதழ் ..

சத்திய பாதை மாத இதழ் ..

சத்தியம் வந்தது… அசத்தியம் அழிந்தது..