கீழக்கரை கடற்கரையை சுத்தப்படுத்தும் பணியில் கீழக்கரை நகர் வளர்ச்சி அறக்கட்டளையின் மாணவ அமைப்பு..

கீழக்கரை நகர் வளர்ச்சி அறக்கட்டளை கீழக்கரை நகரை தன்னிறைவான, சுகாதாரமான நகராக மாற்றியமைக்க பல் வகையான திட்டங்களை நடைமுறைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். இத்திட்டத்தில் இளைய சமுதாயமும் பங்கேற்கும் வகையில் கடந்த டிசம்பர் 29ம் தேதி அறக்கட்டளையின் நிறுவனர் அஹமது புகாரி இல்லத்தில் மாணவ அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டது.

இவ்வமைப்பின் முதற்கட்ட பணியாக கீழக்கரை கடற்கரையை சுத்தப்படுத்தும் பணியில் இன்று (31/12/2017) மாணவர்கள் ஈடுபட்டார்கள். இப்பணியில் ஆர்வமுள்ள ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு கடற்கரையை சுத்தப்படுத்தினர். மேலும் சில பிரதான தெருக்களிலும் தூய்மைப்படுத்தும் பணியில் மாணவர்கள் ஈடுபட்டனர். இப்பணியில் அறக்கட்டளையின் நிறுவனர் அஹமது புகாரி நேரடியாக களத்தில் மாணவர்களுடன் இணைந்து பணியில் ஈடுபட்டவர்களை உற்சாகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இது சம்பந்தமாக மாணவ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கூறுகையில், “விரைவில் கீழக்கரையில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை சந்தித்து, இத்திட்டத்திற்கான அமைப்பை அனைத்து பள்ளிகள், கல்லூரிகளிலும் ஏற்படுத்தி அனைவருக்கும் சுகாதாரத்தின் அவசியத்தை வலியுறுத்தி சுகாதார பணியில் ஈடுபட வைக்க உள்ளோம்” என்றார்.

கீழக்கரை சுகாதாரமான நகர் என்ற கனவு நினைவானால் அனைவருக்குமே சந்தோசம் மற்றும் அதுவே எதிர்பார்ப்பாகவும் உள்ளது. இது போன்ற திட்டங்கள் ஆரம்பத்துடன் நின்று விடாமல், தொடர்ச்சியாக செயல்பாட்டில் இருந்தால் நிச்சயமாக பலன் கிடைக்கும்.