வார்டுகளின் எல்லை மறுவரையறை உத்தேச பட்டியல் ராமநாதபுரத்தில் கலெக்டர் நடராஜன் வெளியிட்டார்…

ராமநாதபுரம் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு ஏதுவாக ஐகோர்ட்டு உத்தரவின்படி வார்டுகளின் எல்லை மறுவரையறை செய்யப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ள உத்தேச பட்டியலை ராமநாதபுரத்தில் கலெக்டர் முனைவர் நடராஜன் வெளியிட்டார்.

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்த நிலையில் தேர்தலை நடத்துவதற்கு முன்னர் வார்டு எல்லைகளை மறுவரையறை செய்து அதன் அடிப்படையில் தேர்தலை நடத்த ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இதன்படி கடந்த 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பினை அடிப்படையாக கொண்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள வார்டுகளின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் செய்யாமல் மக்கள் தொகையை மட்டும் கணக்கீடு செய்து வார்டுகளின் எல்லையை மறுவரையறை செய்ய பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இவ்வாறு வரையறை செய்யும் போது சராசரி மக்கள் தொகையில் கிராம ஊராட்சிகளின் வார்டு எண்ணிக்கையில் 25 சதவீதம் அளவிற்கு கூடுதலாகவோ, குறைவாகவோ மக்கள் தொகை இருக்கலாம் என்றும், ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி வார்டுகளை பொறுத்தவரை அதன் சராசரி மக்கள் தொகை விகிதாச்சாரத்தில் 10 சதவீதம் அளவிற்கு கூடுதலாகவோ, குறைவாகவோ மக்கள் தொகை இருக்கலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் அந்தந்த வார்டுகளில் மேற்கண்ட சதவீதத்தினை விட அதிகமாகவோ, குறைவாகவோ மக்கள் தொகை இருந்தால் அதனை அருகில் உள்ள வார்டுகளில் பகிர்ந்தளித்து வார்டுகளை மறுவரையறை செய்ய அரசு உத்தரவிட்டது.

இந்த உத்தரவின் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 ஆயிரத்து 75 கிராம ஊராட்சி வார்டுகளும், 170 ஊராட்சி ஒன்றிய வார்டுகளும், 17 மாவட்ட ஊராட்சி வார்டுகளின் எல்லைகள் ஆய்வு செய்யப்பட்டு உத்தேச மறுவரையறை பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த உத்தேச பட்டியலை நேற்று கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் நடராஜன் வெளியிட மாவட்ட திட்ட இயக்குனர் தனபதி பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டு தங்களின் சந்தேகங்களை கேட்டு விளக்கம் பெற்றனர்.

மறுவரையறை செய்யப்பட்டுள்ள வார்களின் விபரங்கள் அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்கள், ஒன்றிய அலுவலகங்கள், ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகம், மாவட்ட ஊராட்சி அலுவலகம், கலெக்டர் அலுவலக உள்ளாட்சி தேர்தல் பிரிவு அலுவலகங்களில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது என்றும் மறுவரையறை தொடர்பாக கருத்து மற்றும் ஆட்சேபனைகளை வரும் ஜனவரி 2-ந் தேதி மாலை 5.45 மணி வரை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் நேரிடையோகவோ, பதிவு தபால் மூலமாகவோ தெரிவித்துக்கொள்ளலாம். அந்த கருத்துக்கள் மறுவரையறை ஆணைய சட்ட வரைமுறைகளுக்கு உட்பட்டு இருந்தால் உரிய மாற்றம் செய்யப்பட்டு இறுதி பட்டியல் வெளியிடப்படும் என்று கலெக்டர் நடராஜன் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் செல்லத்துரை, பயிற்சி துணை ஆட்சியர் மணிராஜ், மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை, உதவி அலுவலர்கள் கயிலைசெல்வம், விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கீழக்கரை நகராட்சியில் வார்டுகளை மறுவரையரை செய்யப்பட்ட பட்டியலின் மாதிரி படங்கள் மற்றும் விளக்கங்களை பற்றி பொதுமக்கள் பார்வைக்கு 29.12.2017 முதல் நகராட்சி அலுவலகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

விபரம் தெரிய விரும்புவர்கள் நகராட்சி அலுவலகம் சென்று தெரிந்து கொள்ளலாம்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..