பாலஸ்தீன மக்களின் மண் மீட்கும் போராட்டம்-எழுச்சியின் மூன்றாம் அத்தியாயமாக இருக்குமா?

பாலஸ்தீன ஆக்கிரமிப்பு பகுதியில் முதல் இந்திஃபாதா (எழுச்சி) ஏற்பட்டு முப்பது வருடங்கள் நிறைவடைந்துள்ளது.  இந்திஃபாதா (INTIFADA) என்ற அரபு வார்த்தைக்கு பாலஸ்தீன மக்களின் “எழுச்சி” என்று அர்த்தம் கொள்ளப்படுகிறது. யூதர்களுக்கென்று தனி நாடு இல்லாத நிலையில்  அடைக்கலம் தேடி பாலஸ்தீனத்தில் தஞ்சம் புகுந்தனர். அவ்வாறு அடைக்கலம் தேடி பாலஸ்தீனம் வந்த யூதர்கள் அவர்களிடமிருந்து நிலத்தை சட்ட விரோதமாக அபகரித்து கொண்டு அதன் மூலம் இஸ்ரேல் என்ற ஒரு நாட்டை உருவாக்கினார்கள்.

இஸ்ரேல் உருவானது முதல் அங்கு நடக்கும் ஆக்கிரமிப்புகளையும், பாலஸ்தீனியர்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளையும் எதிர்த்து இரண்டு இந்திஃபாதா (எழுச்சி) நடந்தேறியது.  முதலில் டிசம்பர் 1987ல் ராணுவ வாகனம் ஒன்று பாலஸ்தீனியரின் காரில் மோதியதால் நால்வர் உயிரிழந்தனர் அதனை தொடர்ந்து நடந்த போராட்டத்தில் முதல் இந்திஃபாதா ஏற்பட்டது. முதல் இந்திஃபாதா 1993ல் முடிவடைந்த நிலையில் 1000 மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். மேலும்,16,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இச்சம்பவத்தில் 50 இஸ்ரேலிய பொது மக்களும் கொல்லப்பட்டனர்.

பாலஸ்தீனிய மக்கள் எழுச்சியை அல் “அக்ஸா இந்திஃபாதா” என்றும் குறிப்பிடுகின்றனர்.அதன் பின்னர் 2000ல் எதிர் கட்சித் தலைவராக இருந்த ஏரியல் சரோன் காவல்துறை அதிகாரிகளோடு மஸ்ஜிதுல் அக்ஸாவில் நுழைய முற்பட்ட பொழுது இரண்டாவது இந்திஃபாதா ஏற்பட்டது. அப்போது அல் அக்ஸா மஸ்ஜிதில் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த பாலஸ்தீனிய முஸ்லிம்களுக்கும் ஏரியல்  சரோனின் காவல்துறை அதிகாரிகளுக்கு இடையே கைகலப்பு ஏற்ப்பட்டது. அதில் ஏழு பாலஸ்தீனியர்கள் உயிர் இழந்தனர்.இச்சம்பவம் நடந்த இரண்டு நாட்களில் போராட்டம் மீண்டும்  உக்கிரமடைந்தது. அதில் 4000 பாலஸ்தீனியர்களும், 900 இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டனர்.

முதல் இந்திஃபாதாவின் முப்பது ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் மீண்டும் போராட்டம் வெடித்துள்ளது அது மூன்றாம் இந்திஃபாதாவின் (எழுச்சி) துவக்கமாக இருக்கும் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது, ஏனென்றால் சில வாரங்களுக்கு முன்பாக அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், முஸ்லிம்கள் புனித ஸ்தலங்களில் ஒன்றாக கருதப்படும் ஜெருஸலத்தை இஸ்ரேலின் தலைநகராக அறிவித்ததை தொடர்ந்து பாலஸ்தீனத்தில் மீண்டும் ஒரு போராட்டம் உருவாகி குழப்பமான சுழல் நிலவி வருகிறது. இந்த அறிவிப்பை ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கூட்டமைப்பு அங்கீகரிக்க மறுப்பதோடு, ஜெனிவா தீர்மானத்தின் அடிப்படையில் சட்ட விதிமுறை மீறல் என்றும் கருத்து தெரிவித்துள்ளது.

மேலும்,பெரும்பாலான உலக நாடுகளும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் அறிவிப்பிற்கு பெரும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. தற்போது மத்திய கிழக்கு நாடுகளுக்கிடையே நிலவி வரும் அசாதாரண சூழல் காரணமாக இந்த அறிவிப்பு மேலும் அமைதியை சீர்குலைக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தினமும் போராட்டமே வாழ்க்கையாக இருக்கும் பாலஸ்தீனிய மக்களுக்கு  இஸ்ரேலியர்களின் ஆக்கிரமிப்பை எதிர்ப்பதும், மண்னை மீட்கும் உரிமைப் போராட்டமும் ஒரு தொடர் நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.

1 Comment

Comments are closed.