எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் அவர்களின் பாலஸ்தீன பயணம்…. தொடர் கட்டுரை.. பாகம் – 6…

அ.முத்துக்கிருஷ்ணன் தமிழ் சூழலில் காத்திரமாக இயங்கி வருபவர். விளிம்புநிலை மக்கள், சிறுபான்மையினர், சுற்றுப்புறச் சுழல்,  உலகமயம்,  மனித உரிமைகள் தொடர்பான பல்வேறு தலைப்புகளில் தொடர்ந்து எழுதியும், தீவிரமாக இயங்கியும் வரும் பத்திரிக்கையாளர். அப்சலை தூக்கிலிடாதே (அருந்ததி ராயின்), தோழர்களுடன் ஒரு பயணம் ஆகியவை இவரது முக்கிய மொழியாக்க நூல்கள். ஒளிராத இந்தியா, மலத்தில் தோய்ந்த மானுடம் ஆகியவை இவரது இரு கட்டுரை தொகுதிகள். காஷ்மீர் குறித்து “தலித் முரசு” இதழில் வெளியான “புதைக்கப்டும் பள்ளத்தாக்கு”  என்ற இவரது கட்டுரை தமிழ் பத்திரிக்கை உலகில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது குறிப்பிடதக்கது.

கடந்த வார தொடர்ச்சி….பாகம் – 6

இப்பயணத்தில் ஏற்பட்ட கசப்பான மன்னிக்க முடியாத அனுபவம் ஏதேனும் உண்டா??

இந்த மொத்தப் பயணத்தில் எங்களை மிகவும் கேவலமாக நடத்தியது எகிப்து மட்டுமே. எகிப்து ராணுவமும் காவல்துறை அதிகாரிகளும் எங்களை குற்றவாளிகளைப் போலவே நடத்தினர். எங்களை அவ்வாறு நடத்தி தங்களின் எஜமானர்களான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு மீண்டும் தங்களுடைய விசுவாசத்தை நிரூபித்தார்கள்.  எங்கள் பாஸ்போர்ட்களை பறித்து வைத்து விட்டு அதனை திருப்பி தரவும் மறுத்தார்கள். மிகவும் மோசமான பேருந்துகளில் ஏற்றி எங்களிடமிருந்த ஏராளமான பணத்தையும் பறித்தார்கள்.

பிறகு அதைவிட மோசமான பேருந்துகளில் ஏற்றி அங்கிருந்து கெய்ரோ நோக்கி அழைத்துச் சென்றனர். போகும் வழியில் எதிர்பாராத விதமாக பெரிய விபத்தைச் சந்தித்து பலக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு அவசர சிகிச்சைக்கு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டோம்.  எனக்கு முழங்காலில் ஒரு சிறிய காயம் மட்டுமே ஏற்பட்டதால் தப்பித்தேன்.  இருப்பினும் நடுங்குளிரில் வெட்டவெளியில் நாங்கள் இரவை கழித்தோம். எகிப்து நிர்வாகம் மிகவும் அலட்சியத்துடன் இந்த விபத்து குறித்து கவலைப்படவேயில்லை.  அதன் பின் நாங்கள் அந்தச் சாலையை மறித்து போக்கவரத்து ஸ்திம்பிக்க செய்த பின்தான் ஒரு வழியாக காரியங்கள் நகர்வு பெற்றன.

கெய்ரோ விமான நிலையத்திலும் எங்களை அறைகளில் அடைத்து வைத்து விமானம் புறப்படும் கடைசி நேரத்தில்தான் வெளியே விட்டார்கள். இதுதான் காஸா செல்பவர்களை எகிப்து அரசு நடத்தும் முறை என வந்தபின்தான் அறிந்து கொண்டேன்.  இருப்பினும்,  இந்த இடர்கள் எல்லாமதான் எங்கள் பயணத்தை மேலும் அர்த்தம் பொதிந்ததாக மாற்றியது.

துருக்கி அனுபவம் எப்படி இருந்தது?

துருக்கி வான் தியார்பகீர் காசியான் டெப் ஆகிய ஊர்களின் வழியே சிரியா நோக்கிப் பயணித்தோம். துருக்கியில் எங்களுக்கு முழுக்க வழிகாட்டுதலும் உபசரிப்பும் செய்தது ப்ரீடம் பளோட்டில்லாவை ஏற்பாடு செய்த ஐ ஹெச் ஹெச்  (IHH- Insani Yardin Vakfi) எனும் அமைப்புதான். முழுக்க கூடைப்பந்து மைதானங்களில்தான் இரவு தங்கினோம். துருக்கியின் மிக அழகான நிலப்பரப்பு பனி மலைகள் உணவு உபசரிப்பு என எல்லாவற்றையும் ரசிக்க முடியாக நெருக்கடியான ஒரு மனநிலை தொடர்ந்து வந்தது.

முமாவி மர்மரா கப்பலில் கொல்லப்பட்ட Cengiz Akyuz (42), Ali Haydar Bengi (39), Ibrahim Belgen (61), Furkan Dogan (19), Cvedet Kiliclar(38) ,Cengiz Songur (47) ,Cetin Topcuoglu (53), Fahri Yaldiz (43) and Necdet Yildirim (32) ) ஆகியோர் பற்றிய நினைவுகள் சதா அலைக்கழித்தது. அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட மயானக் கரைக்குச் சென்றது பெரும் நெகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது.

நான் ஏற்கனவே இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலைப் பற்றி கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். ஐ.ஹெச்.ஹெச் விரிவான அறிக்கைகளையும் வாசித்திருக்கிறேன்.  இப்பயணத்தில் ஒரு நாள் மாலை ஐ.ஹெச்.ஹெச் அலுவலகம் சென்று அவர்கள் வசம் இருந்த விரிவான குறுந்தகடுகள் பிரசுரங்களை பெற்று வந்தேன்.  இந்தப் பயணத்தில் ஐ.ஹெச்.ஹெச் யின் ஊழியர்கள்  செயல்பாட்டாளர்கள் மிகப் பெரும் ஆதர்ஷமாக அமைந்தார்கள்.  அவர்களின் சுறுசுறுப்பு தெளிவு வேலை செய்யும் முறை நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்யும் நேர்த்தி என எல்லாம் மனதை வெகுவாக ஈர்த்தது.

இப்பயணத்தில் பல்வேறு இஸ்லாமிய நாடுகளுக்குச் சென்றீர்கள். அங்கு உங்களுக்கு மிகவும் வியப்பை ஏற்படுத்திய நிகழ்வுகள் ஏதேனும்??

நல்ல கேள்வி இந்த மொத்தப் பயணமும் இஸ்லாமியப் பெணகள் குறித்தான எனது பார்வையை மாற்றியது. பொதுவாக இந்திய ஊடகங்கள் ஈரான் குறித்த இறுக்கமான பழமைவாதப் பார்வைகள் நிறைய புழங்குகிறது.  எனக்கு மின்னஞ்சல்களில் வரும் செய்திகளிலும் ஈரான் குறித்தும் இஸ்லாமிய நாடுகள் குறித்தும் இஸ்லாம் குறித்தும் எத்தனையோ அவதூறுகளை இந்தியாவில் இந்துத்வாவினர் திட்டமிட்டு பரப்பி வருகிறார்கள் என்பது பட்டவர்த்தனமாக புரிந்தது. குறிப்பாக ஈரானின் பெண்களுடன் பேசுவது குற்றம் பழகுவது குற்றம் என்கிற அளவில்;தான் எங்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன.

ஆனால் நாங்கள் அங்கு சென்றபோது கண்ட காட்சி முற்றிலும் வேறானதாக இருந்தது. பெண்கள்தான் ஆயிரக்கணக்கில் தெருக்களில் திரண்டு நின்று எங்களை வரவேற்றனர்.  அங்கு வாழத்து கோஷங்களை எழுப்பியதும் பெணகள்தான்.  பாலஸ்தீனத்திற்கான பெண்களின் பிரத்யேக ஓவியக் கண்காட்சி என எங்களை பிரமிக்க வைத்தது.  எங்களுடன் பத்துக்கும் மேற்பட்ட பெண் மொழிபெயர்பாளர்கள் நாங்கள் ஈரானில் இருந்த காலம் முழுவதும் உடன் இருந்தனர்.  நாம் ஈரானிய சினிமாக்களில் காண்பது போலவே அவர்கள் சுதந்திiமானவர்களாகத்தான் இருந்தனர். ஈரானின் மிகப் பெரிய மசூதிகளில் கூட அதை பராமரிப்பவர்கள் பெணகளாகத்தான் இருந்தார்கள்.

தெஹ்ரானில் உள்ள அவர்களது அரசாங்க தொலைக்காட்சி நிறுவனத்தின் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நான் சென்றபோது அங்கும எனக்கு ஆச்சரியமே காத்திருந்தது நான் பங்கு பெறும் நிகழ்ச்சிக்கு இன்னும் கொஞ்ச நேரம் இருந்ததால் நான் அங்கு மாடிகளில் உள்ள படப்பிடிப்புத் தளங்களுக்குச் சென்று பார்வையிட்டேன் அத்தனை மாடிகளிலும் தொழில் நுட்ப கலைஞர்கள்  ஒளிப்பதிவு செய்பவர்கள் செய்தி வாசிப்பாளர்கள் உதவியாளர்கள் என அந்த தளம் முழுவதும் பெண்கறே நிரம்பி இருந்தனர்.  இப்படி ஒரு படப்பிடிப்பு தளம் என்பது நம் இந்தியாவில் கூட யோசித்து பார்க்க முடியாது.

ஈரானில் பல பெண் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினார்கள் எங்களை சந்தித்து அங்குள்ள பெண்களின் நிலை குறித்து எடுத்துரைத்தார்கள். அவர்கள் காலத்தின் புரட்சி போர்கள் என எங்களுடன் மிக லாவகமாக உரையாடினார்கள.  ஒரு நாட்டை கட்டமைப்பதில் பெண்களின் பாhத்திரம் பற்றி அவர்கள் அரசியல் கூர்மையுடன் கூறிய விசயங்களை இன்னொரு சந்தர்ப்பத்தில் விளக்கமாக எழுத வேண்டும்.

இந்தப் பயணக் குழுவில் உங்களுடன் வந்த டாக்டர் சந்தீப் பாண்டே “காஸா மக்கள் ஒரு போதும் தோல்வி அடையமாட்டார்கள். அவர்களை யாராலும் தோற்கடிக்க முடியாது என்கிறார். நமது ஊடகங்கள் அவர்களை கல் வீசுபவர்களாகவும் தீவிரவாதிகளாகவும் சித்திரிக்கின்றன.  காஸா மக்கள் குறித்து உங்கள் மதிப்பீடு என்ன??

சந்தீப் பாண்டேயின் கூற்று முற்றுலும் உன்மையானது. காசாவின் மக்களை யாராலும் தோற்கடிக்க முடியாது. அறுபது ஆண்டுகள் இத்தனை தாக்குதல்களை சந்தித்தவர்கள் மனம் தளராதவர்களாக இன்னும் இன்னும் எத்தனை கஷ்டங்களையும் தங்களின் பூமிக்காய் சந்திக்க காத்திருப்பவர்களாக இருக்கிறார்கள். அல் குத்ஸை (Al-Quds/Baitul-Maqdis), அல் அக்சாவை (Al-Aqsa) இன்னொரு முறை பார்த்தால் போதும், அங்கு ஒரு முறை தொழுது விட்டால் போதும் இந்த மனம் நிம்மதியாகிவிடும் என்பது மட்டுமே அவர்களின் பலரது வாழ்நாள் ஆசையாக உள்ளது. அவர்களின் மனதிற்கு மிகவும் நெருக்கமான ஜெருசலத்தை மீட்க வேண்டும் என்பதும் அவர்களது தீராஏக்கம். காசாவின் பிரதமர் அலுவலகத்தில் கூட ஒரு மைல் கல் உள்ளது அதில் ஜெருசலேம் 79.37கிமி என்று பொறிக்கப்படுள்ளது.

மருத்துவமணைகளில் மரணப்படுக்கையில் மருந்துகளின்றி அவதிப்படுபவர்கள் கூட சுயமரியாதையை விட்டு கொடுக்க சம்மதிக்காதவர்களாக இருக்கிறார்கள். இந்த பயணம் நெடுகிலும், காசாவுக்குள் நுழையும் போதும் ஏதோ காசா மக்களுக்கு உதவ செல்கிறோம் என்பதான் உணர்வுதான் இருந்தது ஆனால் காசாவை சுற்றி விட்டு அந்த மக்களின் உணர்வுகளை எல்லம் பார்த்தபோது நான் இவர்களுக்கு செய்வதற்கு எதுவுமில்லை மாறாக இவர்களிடம்   இருந்து நிறைய கற்று வெளியேருகிறேன் என்றே உணர்ந்தேன். ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு வீரம் செறிந்த போராட்டத்தை இந்த மக்கள் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டம் இந்த உலகிறகு பல படிப்பினைகளை வழங்குகிறது….

பயணம் தொடரும்…                        

புனித ரமலான் வாழ்த்துக்கள்..