வாய் மணக்க வைக்கும் வெற்றிலை.. வெற்றிலை விவசாயத்திற்கு கை கொடுக்கும் கிணற்று பாசனம்..

தமிழர்களின் அன்றாட வாழ்வில் வெற்றிலைக்கு என்றும் ஒரு தனி இடமுண்டு. வீட்டில் நடக்கும் எந்த ஒரு நல்ல காரியங்களுக்கும் வெற்றிலையே முதன்மை இடம் வகிக்கும். வெற்றிலை எந்த ஒரு பாகுபாடுமின்றி அனைவராலும் விருப்பத்துடன் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பொருள் என்றே கூறலாம். அதற்கும் மேலாக வெற்றிலையில் அடங்கியிருக்கும் மருத்துவ குணத்திற்காகவே அக்காலத்தில் உணவுக்கு பின் உட்கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்கள்.

தென் தமிழகத்தில் முத்துப்பேட்டை, பெரியபட்டினம் உள்ளிட்ட கடற்கரையோர கிராமங்களில் பணப்பயிராக வெற்றிலை விவசாயம் நடந்து வருகிறது. முத்துப்பேட்டையில் 5 ஏக்கரிலும், பெரியபட்டினத்தில் 15 ஏக்கரிலும் வெற்றிலைக்கொடிகள் உள்ளது. கடற்கரையை ஒட்டியுள்ள தென்னந்தோப்புகள் அதிகம் உள்ள பகுதிகளில் கிணற்றுப்பாசனத்தில் வெற்றிலைக்கொடிகள் சாகுபடி செய்யப்படுகிறது. நிலத்தடி நீர் உவர்ப்பு தன்மை இல்லாமலும், குடிப்பதற்குரிய நல்ல தண்ணீர் மூலம்பாய்ச்சப்படுகிறது.

கடந்த 2015ல் பெய்த மழைக்கு நல்ல மகசூல் கொடுத்த நிலையில் சென்ற ஆண்டு மழையில்லாததால் வாடல்நோய் தாக்கியதில் பெருத்த நஷ்டம் ஏற்பட்டது. முத்துப்பேட்டை விவசாயி ஆதிலிங்கம், வயது-55, கூறுகையில், “மல்லிகை செடியைப்போன்றே வெற்றிலைக்கொடிக்கும் பதியம் போடும் முறையில் சாகுபடி செய்யப்படுகிறது. 9 மாதத்தில் புதிய கொடி பலனளிக்கும். அகத்தி, முருங்கை மரங்களுக்கு இடையே அரை அடி இடைவெளியில் வெற்றிலை வளர்க்கப்படுகிறது. இங்கு வளர்க்கப்படும் வெற்றிலை அடர் மற்றும் வெளிர் பச்சை நிறத்தில் காரத்தன்மை கொண்டதாக உள்ளது. காலை நேரங்களில் பறிக்கப்படும் வெற்றிலையை ராமநாதபுரம், பரமக்குடி, கீழக்கரை, மதுரை ஆகிய இடங்களில் இருந்து வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். வருடம் முழுவதும் வெற்றிலையை பறித்தாலும், பங்குனி, சித்திரை மாதங்களில் அதிகளவு மகசூல் கிடைக்கும். முற்றிலும் இயற்கை உரத்தை மட்டுமே பயன்படுத்துகிறோம். இந்தாண்டு பருவமழை பெய்தால், சென்ற ஆண்டு நஷ்டத்தில் இருந்து தப்பிக்க உள்ளது என்றார்.

பாரம்பரியத்துடன் கலந்த வெற்றிலையை பாதுகாக்க வேண்டியது நம் அனைவருடைய கடமையாகும். உண்ணும் உணவில் இருந்து பருகும் பானம் வரை வெளிநாட்டு மோகம் பெருகி வரும் நிலையில், இன்றும் வெற்றிலை விவசாயத்தை காத்து வரும் விவசாயிகள் மிகவும் போற்றுதலுக்குரியவர்கள் என்றால் மிகையாகாது.