கீழக்கரை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் அராஜக போக்கு…மூத்தக்குடி மகன்களையும் அலைக்கழிக்கும் அவலம்..வாடிக்கையாளர் சேவை என்பதை மறந்து போன சோகம்..

இந்தியாவில் மக்கள் அலைக்கழிக்கப்படுவது பல விதம். அதுவும் பணநீக்கம் முதல் ஆதார் சேர்க்கும் வரை பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர். பணநீக்கத்திற்காக மக்களை வீதியில் நிறுத்தி, எந்த வசதியும் செய்யாததால் கீழக்கரை இந்தியன் ஒவர்சீஸ் வங்கியில் ஒரு முதியவர் உயிரிழந்தது யாரும் மறந்திருக்க முடியாது. இப்பொழுது ஆதார் எண் இணைப்பு என்ற பெயரில் சாமானியர் முதல் மூத்தகுடிமகன்கள் வரை அலைக்கழிக்கும் அவலம் நிறைவேறி வருகிறது.

சில நாட்களுக்கு முன்னர் கீழக்கரை வடக்குத் தெருவைச் சார்ந்த 85 வயதுடைய மூத்த குடிமகன் ஒருவர் தன்னுடைய ஆதார் எண்ணை இணைப்பதற்காக சென்றுள்ளார். ஆனால் எப்பொழுதும் போல் ஆதார் அட்டையில் தகப்பனார் பெயருடன் சேர்த்து வினியோகிக்கப்பட்டிருந்தது, இதை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் புதிதாக வந்துள்ள மேலாளர் சம்பத்குமாரிடம் தெரிவித்து, தான் 30 வருட காலமாக வங்கி கணக்கு வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார். ஆனால் வங்கியின் மேலாளரோ எதையும் காதில் வாங்கி கொள்ளாமல் உங்களுடைய பெயர்தான் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை, ஆகையால் பத்திரிக்கையில் 2 மாதம் விளம்பரம் கொடுத்து, அரசு பதிவுப்புத்தகத்தில் மாற்றி விட்டு ஊரில் உள்ள இரண்டு முக்கிய நபர்களை அழைத்து வாருங்கள் என்று அலட்சியமாக கூறியுள்ளார். பிறகு தன்னால் இயலாது என்று கூறியபொழுது வங்கி மேலாளர் 30வருட வாடிக்கையாளர் என்பதை கூட கருத்தில் கொள்ளாமல் வங்கி கணக்கை முடக்கி 30வருட வாடிக்கையாளரின் உறவை துண்டித்துள்ளார்.

இந்தியாவின் உள்ள மூத்த குடிமகன் ஒருவருக்கே இந்த நிலை என்றால் சாமானியனின் நிலையே நினைத்தாலே பயமாக உள்ளது. இது சம்பபந்தமாக பாதிக்கப்பட்டவரிடம் விசாரித்த பொழுது, தான் பத்திரிக்கை துறையில் பணியாற்றியுள்ளேன், மேலும் கீழக்கரையில் உள்ள சமூக அமைப்புகளில் பல வருடங்கள் பணியாற்றியுள்ளேன். ஆகையால் கீழக்கரை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளரின் அராஜக போக்கை நிச்சயமாக மேல் அதிகாரிகளிடம் முறையிட்டு, அவர் மீது நடவடிக்கை எடுக்க முயற்சிப்பேன், எனக்கு ஏற்பட்ட நிலை வேறு யாருக்கும் ஏற்படக்கூடாது என்று கூறினார்.

(சம்பந்தப்பட்டவரின் பெயர் அவசியத்தினை கருத்தில் கொண்டு வெளியிடவில்லை)

புனித ரமலான் வாழ்த்துக்கள்..