எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் அவர்களின் பாலஸ்தீன பயணம்…. தொடர் கட்டுரை.. பாகம் – 4…

அ.முத்துக்கிருஷ்ணன் தமிழ் சூழலில் காத்திரமாக இயங்கி வருபவர். விளிம்புநிலை மக்கள், சிறுபான்மையினர், சுற்றுப்புறச் சுழல்,  உலகமயம்,  மனித உரிமைகள் தொடர்பான பல்வேறு தலைப்புகளில் தொடர்ந்து எழுதியும், தீவிரமாக இயங்கியும் வரும் பத்திரிக்கையாளர். அப்சலை தூக்கிலிடாதே (அருந்ததி ராயின்), தோழர்களுடன் ஒரு பயணம் ஆகியவை இவரது முக்கிய மொழியாக்க நூல்கள். ஒளிராத இந்தியா, மலத்தில் தோய்ந்த மானுடம் ஆகியவை இவரது இரு கட்டுரை தொகுதிகள். காஷ்மீர் குறித்து “தலித் முரசு” இதழில் வெளியான “புதைக்கப்டும் பள்ளத்தாக்கு”  என்ற இவரது கட்டுரை தமிழ் பத்திரிக்கை உலகில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது குறிப்பிடதக்கது.

கடந்த வார தொடர்ச்சி….பாகம் – 4

தமது சிந்தனையாலும் கொள்கை உறுதியாலும் பாலஸ்தீன மக்களின் விடுதலைக் கனவுகளுக்கு உற்சாகமூட்டி வந்த சிந்தனையாளர் எட்வேட் சயீத் முதல் மேற்குக் கரை குடியேற்றத்திற்கெதிராக மனிதக் கவசமாக நின்று போராடி உயிர் நீத்த ரோச்சல் கோரி வரையிலான மகான்களின் நினைவுகள் அந்த மக்களுக்கு எவ்வளவு தூரம் ஆதாரமாக உள்ளது??

 எட்வர்ட் சயீத் முதல் ரேச்சல் கோரி வரை அனைவரும் தியாகிகளாக மக்களின் போராட்டங்களுக்கு ஊக்கம் அளிக்கிறார்கள். காசாவின் மக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்கிறார்கள் என்பது அவர்களை காணும் போதே தெரிகிறது. வெளி உலகில் இருந்து அங்கு வருபர்களிடம் கூற அவர்களிடம் ஓராயிரம் கதைகள் உள்ளது. 1948 மே 15 ஆம் நாள் நஃபகாவை அவர்கள் நேற்று நடந்தது போல் நம்மிடம் விவரிக்கிறார்கள். இஸ்ரேல் இவர்களின் 675 கிராமங்களையும் வரலாற்று சிறப்புமிக்க நகரங்களையும் தாக்குதல் தொடுத்து தன் வசம் எடுத்துக் கொண்டது. அதில் 476 கிராமங்களை அது எவ்வாறு முற்றாக அழித்து விட்டது என்பதை அவர்கள் விவரிப்பதை கேட்கவே சகிக்கவில்லை. பல சமயங்களில் அவர்களின் மொழி எனக்கு புரியாதபோதும் அவர்களின் உணர்வுகள் நம் மனங்களில் படிகிறது. உலகம் முழுவதும் துயரத்தின் மொழி, வலி என எல்லாம் ஒரே அலைவரிசையில் தான் இயங்குகிறது. அறுபது ஆண்டுகள் கழித்து இன்னும் தங்களின் கிராமங்களுக்கு திரும்ப வேண்டும் என்கிற வைராக்கியத்துடன் வாழும் மூதாட்டிகளை காணும் போது தான் அவர்களின் அரசியல் உறுதி நமக்கு விளங்குகிறது.

அவர்களின் சுதந்திரப் போராட்டத்திற்கு உள்ளே எத்தகைய ஆதரவு கிடைத்து வருகிறது? சில யூதக் குழுவினர் கூட பாலஸ்தீனர்களின் சுதந்திரப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருவதாக அறியப்படுகிறது அதன் உண்மை நிலை என்ன??

உலகம் முழுவதிலும் யூதக் குழுக்கள் பாலஸ்தீனர்களின் சுதந்திர போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பது  குறித்து பதிவுகளை நான் வாசித்திருக்கிறேன். நாங்கள் ஈராணிலும், லெபணணிலும் பயணித்த போது பல ஊர்களில் யூதர்கள் வந்து வரவேற்பு கூட்டங்களில் பேசினார்கள். என்னுடைய அனுமானம் என்னவென்றால் இப்படியான குழுக்களின் நடவடிக்கைகளுக்கு உலக ஊடகங்களில் கிடைக்கும் விளம்பரம், உண்மையிலேயே காசா, மேற்குகரை மக்களுக்கு, உலகம் முழுவதும் சிதறிக் கிடக்கும் 80 லட்சம் பாலஸ்தீன அகதிகளுக்கு கூட பல சமயங்களில் கிடைத்ததில்லை. யூதர்கள் தொடர்ந்து இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவது பெயர் அளவிலான விஷயமாக இல்லாமல் இஸ்ரேல் அமெரிக்கா நிலங்களில் உள்ள அரசுகளை நெருக்கடி தரும் அளவுக்கு வளர வேண்டும் என்பது தான் என் ஆசை.

காஸா ரமலா மேற்குக்கலை போன்ற பகுதிகளிலிருந்து அகதிளாகத் துரத்தப்பட்ட மக்களின் இன்றைய நிலை என்ன?? அவர்களின் யாரயேனும் சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்ததா?

இன்று பாலஸ்தீனப் பிரச்சனையை உலகம் முழுவதிலும் முன்னின்று தலைமையேற்று நடத்தும் தலைவர்களில் 90% பேர் அகதி முகாம்களில் பிறந்தவர்களே. அவர்கள் பலர் பாலஸ்தீனத்திற்கே சென்றதில்லை. சிரியா, லெபணன், ஜோர்டன் என இந்த தேசம் எங்கும் பாலஸ்தீன அகதிகள் சிதறிக் கிடக்கிறார்கள். அவர்களின் முகாம்கள் பெரும் நகரங்களாகவே உருமாறியுள்ளன. இந்த நாடுகளில் பாலஸ்தீன அகதிகளுக்கு சில வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது, அவர்களுக்கு பள்ளி, கல்வி, வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு உள்ளது. எல்லாம் இருந்த போதும் அவர்கள் அனைவரும் தாயகம் திரும்பு நாளுக்காய் காத்திருக்கிறார்கள். இந்த நாடுகளில் உள்ள அகதிகள் முகாம்களில் எங்களுக்கு சிறப்பு கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த முகாமில் உள்ள குழந்தைகளுடன் கால்பந்து விளையாடினோம். கால்பந்து தான் இவர்களை உலகுடன் இணைக்கும்  மொழியாக உள்ளது. எங்களுடன் முதலில் பேச மறுத்த குழந்தைகள் விளையாட்டுக்கு பின் தினமும் எங்களை சந்திக்க சிரியாவின் துறைமுக நகரமான லத்தாக்கியாவில் உள்ள விடுதிக்கு வந்தார்கள். பார்க்கும் போதும் இந்த அகதிகள் முகாமில் உள்ளவர்களுக்கு இருக்கும் உத்திரவாதங்களும் பாதுகாப்புகளும் காசாவில் வாழும் மக்களுக்கே இல்லை.

பாலஸ்தீன பிரச்சினையில் பிற அரபு நாடுகளின் அணுகுமுறை குறித்து அம்மக்களின் கருத்து என்ன?

அரபு நாடுகள் பல விதங்களில் பிளவுபட்டு கிடப்பதுதான் இஸ்லாமியத்தை சூழ்ந்துள்ள பெரும் நெருக்கடியாக நான் பார்க்கிறேன். அமெரிக்க ஏகாதிபத்தியமும், ஐரோப்பாவும் வளைகுடா நாடுகளை ஒரு சந்தையாக மட்டுமே பாவித்து வருகிறது. அமெரிக்கா எண்ணெய்க்கான யுத்தம் என்பதை ஒரு நூற்றாண்டுக்கு முன்பே தொடங்கி விட்டது. ஜனநாயகத்துடன் மக்களுக்கான அடிப்படை உரிமைகளுடன் திகழவேண்டிய நாடுகள் எல்லாம் அமெரிக்காவின் கைபாவைகளாக அரசுகளை நிறுவி கடந்த ஐம்பது ஆண்டுகளாக அமெரிக்காவின் வெளியுறவு கொள்கைப்படிதான் இந்த பகுதி மாற்றி மாற்றி அடுக்கப்படுகிறது. நான் பயணித்த நாடுகளில் பாலஸ்தீனப் பிரச்சனை என்பது அவர்களின் சொந்த பிரச்சனையாகவே கருதப்படுகிறது. இஸ்லாத்தில் உள்ள ஷியா-சன்னி பிளவுகள் அரபு நாடுகள், ஈராண் என அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட தடையாக உள்ளது. பாலஸ்தீன மக்களை பொறுத்தவரை உங்களின் சொந்த விருப்பு வெறுப்புகளை எங்களின் பிரச்சனையிலாவது விலக்கி வைத்துவிட்டு ஒன்றிணைந்து போராடுங்கள், இந்த ஒற்றுமையான போராட்டம் மொத்த பகுதியின் விடுதலைக்கான போராட்டமாக மலரும் என்கிற நம்பிக்கையுடன் அவர்கள் களத்தில் இருக்கிறார்கள்.

ஹமாஸ் – பத்ஹ் அமைப்புகளின் தலைவர்கள் நிர்வாகிகளைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்ததா?? அவர்களின் தரப்பிலிருந்து எந்த மாதிரியான வரவேற்ப கிடைத்தது? வேறு யாரையெல்லாம் சந்தித்தீர்கள்?

ஈராணில் அந்த நாட்டின் அதிபர் அஹமதேநிஜாத் எங்கள் பயணக்குழுவை தெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் வந்து சந்தித்து வாழ்த்தினார். அன்று இரவு அவர்களின் புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் எங்களுக்கு பெரும் அரச விருந்தளித்தார். உணவுக்கு பின் அவர்களில் தொன்மையான பாராளுமன்றமான மஜ்லீசில் எங்களுக்கு ஒரு பாராட்டு விழாவும், ஈராணின் பாரம்பரியம் மிக்க   வெள்ளி மோதிரமும் அணிவித்தார். ஈராணின் அனைத்து நகரங்களிலும் வரவேற்பும் விருந்தும் அந்த நகரங்களின் மேயர்கள் தான் ஏற்பாடு செய்தார்கள். பயணம் வரும் தகவல் ஊடகங்களில் தினமும் வெளிவர ஏற்பாடுகளில் அவர்களுக்குள் ஒரு போட்டியே நிலவியது.

சிரியாவின் அரசாங்கமே எங்களை எல்லைக்கு வரவேற்க வந்தது. தலைநகர் தமாஸ்கசில் நாங்கள் ஒரு வார காலம் தங்கியிருந்தோம். அங்குள்ள எல்லா அரசியல் குழுக்களும் எங்களை தினமும் வந்து சந்தித்து பாலஸ்தீனம் தொடர்பாக விவாதித்தன உரையாடின. ஹமாசின் அரசியல் தலைவர் காலித் மிஷால் எங்களுடன் ஐந்து மணி நேரம் இருந்தார். மொசாத்தின் தாக்குதல்களால் பல முறை மரணப்படுக்கையில் இருந்து மீண்டு வந்த காலித் மிஷாலை சந்தித்தது மிக மறக்க முடியாத ஒரு நெகிழ்வான சந்தர்ப்பம்.

பாலஸ்தீன அரசின் பிரதமர் இஸ்மாயில் ஹானியா அவர்களை சந்தித்தோம். பிரதமர் அலுவலகத்தில் நடந்த வரவேற்பு நிகழ்வில் காசாவில் உள்ள அனைத்து இயக்கங்களின் தலைவர்களும் அழைக்கபட்டிருந்தனர். பல அடுக்கு பாதுகாபுடன் இந்த கூட்டம் நடந்தது. காசாவின் மனநிலை எத்தகைய கொந்தளிப்புடன் உள்ளது அவர்களின் எதிர்பார்புகள் என பல விஷயங்கள் சார்ந்த தெளிவு கிடைத்தது. இருப்பினும் அனைத்து இயக்கங்களும் ஒன்றினைத்து எங்களை அரசு சார்பாக வரவேற்றது அனைவருக்கும் மகிழ்ச்சியை நம்பிக்கையை அளித்தது. பத்ஹ்-ஹமாஸ் அமைப்புகள் சில புள்ளிகளில் இணைந்து செயல்படுவது தொடர்பாக தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளபட்டு வருகின்றன. பத்ஹ் மேற்குகரையில் ஏராளமான ஹமாஸ் ஊழியர்களை சிறையில் அடைத்து வைத்திருப்பது தான் இந்த நடைமுறைகளுக்கு தடையாக உள்ளது. இந்த கைது நடவடிக்கைகளுக்காக இஸ்ரேல் பத்ஹ் அமைப்பை பாராட்டியுள்தை இங்கு குறுப்பிட விரும்புகிறேன்.

விவா பாலஸ்தீனா (Viva Palestina ), ப்ரி காசா(Free Gaza) ஆகிய பல்வேறு அமைப்புகளின் மூலம் இதற்கு முன்பே காசா வந்து சென்ற அனுபம் உள்ள பலர் எங்களுடன் வந்ததும், அவர்களின் அனுவங்களும் பல புதிய வெளிச்சங்களை அளித்தது.

பயணம் இன்னும்  தொடரும்