கவுரி லங்கேஷ் கொலைக்கு எதிராக அமெரிக்க பாராளுமன்றத்தில் ஒலித்த குரல்.

உலகம் முழுவதும் தனி நபரின் கருத்து சுதந்திரம் கேள்வி குறியாக்கப்படுகிறது என்பதனை அவர்கள் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதல்களும், அச்சுறுத்தல்களும் சான்றாக உள்ளது. ஆனால் இந்தியாவில் இது போன்ற நிகழ்வுகள் அவ்வப்போது நடந்த வண்ணம் உள்ளது என்பதை சமீபத்தில் பெங்களூரில் நடந்த எழுத்தாளர் கவுரி லங்கேஷ் கொலை சம்பவம் மூலம் நம்மால் உணர முடிகிறது. இச்சம்வம் நாடு முழுவதும் தீயாக பரவி அதிர்வலையை ஏற்படுத்தியோடு  அமெரிக்க பாராளுமன்றத்திலும் பத்திரிக்கையாளர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பும் அளவுக்கு சென்றது.

அமெரிக்கா குடியரசு கட்சியை சார்ந்த அமிரிக்க பாரளுமன்ற உறுப்பினரான ஹரொல்ட் ட்ரங் ஃப்ராங்க்ஸ் என்பவர் இச்சம்பவம் குறித்து அவர் கூறுகையில், “எழுத்தாளர் கவுரி லங்கேஷ் மக்கள் விரோத போக்கை கண்டித்து அதிகாரத்தில் இருக்கும் ஆளுங்கட்சியை தைரியமாக விமர்சித்து வந்த நிலையில் அவர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார். மேலும் கோவிந்த் பன்சாரே, எம்.எம்.கல்பர்கி, நரேந்திர தபோல்கர் போன்ற எழுத்தாளர்கள் கொல்லப்பட்டது போல் இவரும் கொலை செய்யப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

சில வாரங்களுக்கு முன்பாக பாஜக கூட்டாணியில் உள்ள தெலுங்கு தேச கட்சியை சார்ந்த சட்டமன்ற உறுப்பினர், கன்ச்சா இளைய்யாவை பொது வெளியில் தூக்கிலிட வேண்டும் என்று கூறியதையும், வலது சாரி கட்சியை சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கன்ச்சா இளையாவிற்கு மிரட்டல் விடுத்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பேராசிரியர் கன்ச்சா இளைய்யா அரசியல்  விமர்சகரும், ஜாதிய கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுப்பவர் என்று அனைவராலும் அறியப்பட்டவர். அவர் பொது  கூட்டத்திற்காக வெளியே செல்லும் போது சமூக விரோதிகள் கற்களால் தாக்குவதும், கொலை மிரட்டல்களும் தொடர்ந்து வருவதால் பாதுகாப்பு கருதி வீட்டு சிறையில் இருப்பதை தாமாகவே விதித்து கொண்டார் என்பதையும் அவர் பதிவு செய்தார்.

மேலும் அவர் பாராளுமன்றத்தின் மூலம் அமெரிக்க அரசும் ,உலக சமூகமும் கன்ஜா இளைய்யாவின் உயிர் அச்சுறுத்தல் குறித்து பெரிதும் கவலை கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்தியாவில் நடக்கும் அவலத்தை குறித்து கவலை கொள்ளும் பொழுது இங்குள்ள ஊடகங்களும், அரசியல்வாதிகளும் மௌனம் காப்பது மிகவும் வேதனையான விசயம்.