கந்து வட்டி உணர்ச்சிபூர்வமாக சிந்திப்பதை விட… செயல்வடிவில் சிந்திப்பதே பலன் தரும்..

நேற்று (24-10-2017) திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு குடும்பமே கந்துவட்டிகாரர்களின் கொடுமையால் தீ வைத்து கொளுத்திக் கொண்டு பலியாகியுள்ளார்கள்.  இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையாகாது. இந்த சம்பவத்திற்கு யாரைக் குற்றம் காண்பது?? புகார்களை அலட்சியப்படுத்திய அதிகாரிகளையா?? கட்டுப்படுத்த சட்டம் இருந்தும் நடைமுறைபடுத்தாதா அரசாங்கமா?? மனிதாபிமானம் இல்லாமல் ஒவ்வொரு நிகழ்வையும் காசாக்க நினைக்கும் ஊடகத்துறையா?? மனிதஉயிர்களுக்கு மதிப்பில்லாமல் அதிலும் ஜாதி விஷத்தை கக்கும் அரசியல்வாதிகளா?? இவ்வாறு அடுக்கிக் கொண்டே போனால் அனைவரும் குற்றவாளிக்கூண்டில் ஏற்றப்பட வேண்டியவர்களே??.

இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் பொதுமக்களாகிய நாம்தான்.  நடக்கும் ஒவ்வொரு சம்பவத்தையும் உணர்ச்சிபூர்வமாக மட்டுமே நாம் பார்க்கிறோம் அதற்கு தீர்வு காணும் வகையில் செயல்வடிவில் சிந்திப்பதே கிடையாது.  ஜல்லிக்கட்டு தமிழகமே வெகுண்டு எழுந்தது அதைத் தொடர்ந்து வெளிநாட்டு பானங்களே அருந்தமாட்டோம் விற்க மாட்டோம் என்ற கோஷங்கள் மேலோங்கியது ஆனால் ஜல்லிக்கட்டு தடை நீங்கியது அதே போல் மக்கள் மனதில் என்ன கோஷம் போட்டோம் என்ற எண்ணமும் நீங்கியது.  பணமதிப்பு நீக்கம் நாடே கொந்தளித்தது விமர்சனங்கள் பறந்தது ஆனால புதிய நோட்டுக்கள் புழக்கத்தில் வந்தது மக்கள் மனதில் பழைய நோட்டுக்கள் வண்ணமும் மறைந்து விட்டது.  ஜி.எஸ்.டி வரி விதித்தார்கள் மக்களும் பக்கம் பக்கமாக விவாதித்தார்கள் ஆனால் பல ஊழல் விவாதத்துடன் வரி பிரச்சினை படிப்படியாக மடிந்து விட்டது. இவ்வாறு பல பிரச்சினைகளை அடுக்கி கொண்டே போகலாம். நம் மக்களின் உணர்ச்சிகளும் ஞாபக மறதியுமே எழும் பிரச்சினைக்கு தீர்வு இல்லாமலே நீர்த்து போவதற்கு காரணம்.

என்ன வழி:-

கந்து வட்டிக்கு என்னதான் தீர்வு?? முதலில் வாழ்கையை திட்டமிட்டடு வாழ்தல், அடுத்து நம் வாழ்ககைக்கு என்ன தேவையோ அதை தேர்ந்தெடுத்து வாழ்தல்,  ஆசை என்ற பெயரில் தேவையில்லாத ஆடம்பரத்தில் வீழ்வது,  இது போன்ற செயல்களே பெரும்பாலான மக்களை வட்டியின் பக்கம் மக்களை இழுத்துச் செல்கிறது.  ஆனால் அதற்கும் மேலாக அத்தியாவசியமான,  அவசியமான தேவைகளுக்கு கூட உதவ சரியான அமைப்புகளும்,  சங்கங்களும் பொதுமக்கள் மத்தியில் வளராத காரணம்.   இந்தக் கந்துவட்டி கொடுமையை விமர்சனம் செய்வதோடு நின்று விடாமல் பொதுமக்கள் மத்தியில் சேமிப்பின் அவசியத்தை முன்னிறுத்தி பிரச்சாரங்கள் செய்யப்பட வேண்டும்.  ஒவ்வொரு பகுதியில் இருக்கும் சமூக அமைப்புகளும் அப்பகுதியில் உள்ள கந்துவட்டிகாரர்களை அடையாளம் கண்டு சட்டபூர்வமாக அவர்கள் மீது வழக்கு பதியவேண்டும். ஆனால் இந்த செயலை தனி மனிதனாக செயல்படுத்தும் பொழுது கந்துவட்டி குண்டர்கள் தாக்குதல் நடத்தவும்,  லஞ்சத்தில் திளைத்த அரசியல்வாதிகள் மூலம் அடக்கு முறையை கையாளக்கூடும்.  ஆனால் அதையே ஒரு குழுவாக அல்லது அமைப்பு மூலமாக நடவடிக்கை எடுப்பது மூலம் கந்துவட்டிகாரர்களை கட்டுப்படுத்த வாய்ப்புகள் அதிகம்.

இப்பொழுது நம் மனதில் எழும் கேள்வி அவசரத்திற்கு கடன் கொடுப்பவர்களே இல்லையென்றால் பின்னர் தேவையுடையவர்கள் என்ன செய்வார்கள்?? இங்குதான் நம்முடைய முக்கியமான பணிகள் தொடங்க வேண்டும்.  ஒவ்வொரு பகுதியில் வாழும் மக்களும் குழுவாக இணைந்து அல்லது சமூக அமைப்புகளுடன் இணைந்து சேமிப்புடன் கூடிய வட்டியில்லா கடன் திட்டத்தை ஆரம்பம் செய்தல் இதன் மூலம் மட்டுமே மக்களை கந்து வட்டி எனும் கொடுமையில் இருந்து காப்பாற்ற முடியும் அதைவிட வாழ்வுக்கு தேவையான சேமிப்பு பழக்கத்தையும் உருவாக்க முடியும்..

சிந்திப்போம்.. செயல்படுவோம்..வட்டியில்லா சமுதாயமாக உருவெடுப்போம்..

புனித ரமலான் வாழ்த்துக்கள்..