எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் அவர்களின் பாலஸ்தீன பயணம்…. தொடர் கட்டுரை.. பாகம் 1..

முன்னுரை:-

 அ.முத்துக்கிருஷ்ணன் தமிழ் சூழலில் காத்திரமாக இயங்கி வருபவர். விளிம்புநிலை மக்கள், சிறுபான்மையினர், சுற்றுப்புறச் சுழல், உலகமயம், மனித உரிமைகள் தொடர்பான பல்வேறு தலைப்புகளில் தொடர்ந்து எழுதியும், தீவிரமாக இயங்கியும் வரும் பத்திரிக்கையாளர்.   தனது எழுத்துப் பணிகளுக்காக கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக தொடர் பயணங்கள் மேற்கொண்டு வருபவர். குஜராத், ஒரிசா, விதர்பா, ஜார்கண்டு, ஆந்திரா என இந்தியாவெங்கும் களப்பணிக்காக மாதத்தின் பாதி நாட்கள் பயணத்திலேயே இருப்பவர். மிக அபூர்வமான தகவல்களையும், பார்வைகளையும் தமிழக மக்களுக்கு வழங்கி வருபவர்களில் முக்கியமானவர். தமது எழுத்தின் ஒரு பகுதியாக பல முக்கிய படைப்புகளைத் தமிழுக்கு மொழியாக்கம் செய்தவர். குஜராத் இனப்படுகொலை குறித்து “தெஹல்கா இதழ்” வெளியிட்ட ஆவணங்களை இந்திய மொழிகளிலேயே முதன் முதலில் தமிழில் வழங்கியவர். அத்துடன் அப்சலை தூக்கிலிடாதே (அருந்ததி ராயின்), தோழர்களுடன் ஒரு பயணம் ஆகியவை இவரது முக்கிய மொழியாக்க நூல்கள். ஒளிராத இந்தியா, மலத்தில் தோய்ந்த மானுடம் ஆகியவை இவரது இரு கட்டுரை தொகுதிகள். காஷ்மீர் குறித்து “தலித் முரசு” இதழில் வெளியான “புதைக்கப்டும் பள்ளத்தாக்கு” என்ற இவரது கட்டுரை தமிழ் பத்திரிக்கை உலகில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது குறிப்பிடதக்கது.

 இவர் மேற்கொண்ட பயணங்களில் மிக முக்கியமானது அவர் சில வருடங்களுக்கு முன்னராக சென்ற வந்த பாலஸ்தீனில் உள்ள காஸாவுக்கு சென்றதே. காஸாவுக்கு செல்வது என்பது அத்தனை சுலபமான காரியம் அல்ல என்பதை நாம் அனைவரும் அறிந்ததே. உலக முஸ்லிம்களின் புனித பூமியான ஜெருசலம் பகுதியில் உள்ள காஸாவில் இஸ்ரேலின் தொடர் தாக்குதலுக்கு தினமும் மக்கள் பலியாகி வருவது நாம் அறிந்த விசயம். இஸ்ரேல்-அமெரிக்க கூட்டாளிகள் மத்திய கிழக்கு நாடுகளை அழிக்க போட்டுள்ள திட்டத்தின் முதல் பகுதிதான் பாலஸ்தீனத்தை கைப்பற்றியது. பாலஸ்தீனத்தை மெல்ல மெல்ல உலக வரை படத்தில் இருந்து அகற்றுவதுதான் அவர்களின் திட்டம்.   கடந்த 2010ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி தில்லியிலிருந்து சாலை வழியாக பாகிஸ்தான், ஈரான், துருக்கி, சிரியா, லெபனான், எகிப்து ஆகிய நாடுகளினூடே சாலை வழியாக 8000 கிலோ மீட்டர்கள் பயணித்து காஸா சென்ற குழுவில் இடம்பெற்ற ஒரே தமிழர் அ.முத்துக்கிருஷ்ணன். காஸாவில் அவர் கண்ட காட்சிகளையும் அரசியல் நிலைகளையும் இத்தொடரில் பகிர்ந்து கொள்கிறார்.

” நெடுங்காலமாக இஸ்ரேலுக்கு ஆயுதங்களும் பண உதவியும் தந்து பாலஸ்தீனத்தை உலக வரைபடத்திலிரந்தே மெல்ல அகற்றும் பணியை அமெரிக்கா நாசூக்காக செய்து வருவதை நாம் அறிந்தே வைத்திருக்கிறோம். நம் ஊரில் செய்தித் தாள்களில் வாசிக்கும் செய்திகளுக்கும், உண்மைக்கும் இடைவெளி இருப்பது போல் நிச்சயம் காஸாவைப் பற்றி நாம் வாசிக்கம் ஆங்கில கட்டுரைகளுக்கும், அங்குள்ள யதார்த்த நிலைக்கும் மிகப்பெரும் இடைவெளி இருப்பதை பல சந்தர்ப்பங்களில் உணர்ந்துள்ளேன். இந்த இடைவெளியை நேரில் காண்பதுதான் இந்தப் பயணத்தின் நோக்கம்.”

 பாலஸ்தீன் குறித்த முதல் அறிமுகம் உங்களுக்கு எப்போது கிடைத்தது?? இப்பிரச்சினையின் பக்கம் உங்கள் கவனம் முதன் முதலாக எப்போது திரும்பியது.??

 பாலஸ்தீனம், யாசர் அராபத் ஆகிய வார்த்தைகள் என் பள்ளி பருவத்திலேயே எனக்கு அறிமுகம் ஆயின. பாலஸ்தீனம் எங்கோ இந்த உலகத்தில் இருக்கும் ஒரு நாடாகவும், யாசர் அராபத் அவர்கள் இந்திரா காந்தியுடன் நிற்கும் புகைப்படங்களை நாளிதழ்களில் பார்த்து அவர் ஒரு சர்வதேச தலைவராகவும் மனதில் மங்கலான பதிவுகள் தான் முதல் அறிமுகங்கள். பாலஸ்தீனம், இஸ்ரேல் ஆகிய சொற்கள் ஏறக்குறைய வாரம்தோறும் செய்தியாக மாறிய பிறகு இந்த பிரச்சனையின் வீரியம் மெல்ல என் கவனத்தை கோரியது. இருப்பினும் நாளிதழ்களை தவிர்த்து என்.ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய நீதிக்காக போராடும் பாலஸ்தீன மக்கள் என்கிற நுலையும் தன்யா ரென்யத் எழுதிய இஸ்ரேல்-பாலஸ்தீனம் ஆகிய நூல்கள் தான் இந்த பிரச்சனையின் அடிப்படைகளை புரிந்து கொள்ள பெரிதும் உதவின. அதன் பின் கோவாவை சேர்ந்த ரஞ்சன் சாலமன் என்பவர் எனக்கு பாலஸ்தீனம் தொடர்பாக வாரந்தோறும் அனுப்பும் செய்தி மடல்களின் தொடங்கி ஊடகங்களின் துணையுடன் இந்த வரலற்று பிரச்சனையை புரிந்துகொள்ள முயன்று வருகிறேன். இந்த பயணத்தை நான் மேற்கொண்டது கூட பாலஸ்தீனத்தை இன்னும் ஆளமாக புரிந்துகொள்ள வேண்டும் என்கிற ஆவல் தான்.

பல்வேறு சாகசங்கள் நிறைந்த இந்தப் பயணக்குழுவில் நீங்கள் இணைந்ததன் பின்னணி குறித்து விளக்க முடியுமா? பாலஸ்தீன் செல்ல வேண்டும் என்று நீங்கள் விரும்பியது ஏன்??

 நான் இந்த குழுவில் இணைந்தது மிகவும் தற்செயலாக நடந்த நிகழ்வு தான். கோழிக்கோட்டை சேர்ந்த பிஷ்ருத்தீன் ஷர்கி அவர்கள் என்னுடைய இணைய நன்பர். தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக நாங்கள் பல கருத்துக்களை செய்திகளை விவாதித்து வருகிறோம். கடந்த ஆண்டு திருவனந்தபுரம் திரைப்பட விழாவிற்கு சென்றிருந்த போது அவர் என்னை அடையாளம் கண்டு வந்து பேசினார். இது தான் எங்கள் முதல் நேரடி சந்திப்பு. அதன் பின் எங்கள் நட்பு இன்னும் நெருக்கமானது. ஒரு நாள் இணையத்தில் உரையாடிக் கொண்டிருந்த பொழுது அவர் குராணில் இடம்பெற்றுள்ள முக்கிய தளங்கள் (Q-Destinations) சார்ந்த ஒரு சுற்றுலாவுக்கு செல்லவிருப்பது குறித்து விரிவாக கூறினார். அப்பொழுது நான் இந்த பயணத்தில் இடம் பெரும் நகரங்கள் அனைத்தும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை என குறிப்பிட்டேன். கட்டாயம் ஒரு முறை உங்களுடன் இந்த பயணத்தின் நானும் உடன் வருவேன் என தெரிவித்தேன் . உடன் அவர் டிசம்பர் மாதம் காசாவுக்கு ஒரு ஆசிய குழு செல்லவிருக்கிறது என்பதை தெரிவித்து என்னை அதற்கு விண்ணப்பிக்கும் படி கேட்டுக் கொண்டார். உடன் அதன் நடைமுறைகளை பின் தொடர்ந்து ஓடினேன். இந்திய அளவிலான முக்கிய எழுத்தாளர்கள், சிந்தனையாளர்களுடன் எனக்கு இருந்த நேரடி அறிமுகம் எனக்கு இந்த வாய்ப்பு கிடைக்க பெரிதும் உதவியது.

 ஈராக், ஆப்கான் வரை நீளும் ஆக்டோபசின் கரங்கள் நம் காலத்து சோகம் என்றால், நெடுங்காலமாக இஸ்ரேலுக்கு ஆயுதங்களையும் பணத்தையும் கொடுத்து பாலஸ்தீனத்தை உலக வரைபடத்தில் இருந்தே மெல்ல மெல்ல அகற்றும் பணியை அமெரிக்கா நாசுக்காக செய்து வருவது நாம் அறிந்ததே. காசா பகுதியின் மீது தினமும் குண்டுமழை பெய்து கொண்டே இருப்பது ஆங்கில செய்தி ஊடகங்களுக்கு கச்சா பொருளாக மட்டுமே இருந்தாலும் அதை பார்க்கும் பொழுதெல்லாம் மனதில் பெரும் துயராக ஒலித்துக் கொண்டேயிருந்தது. அந்த பதட்டம் மிகுந்த பகுதிக்கு நல்லிணக்க பயணக்குழு செல்கிறது என்றவுடன் இது எனக்கு கிடைத்த வாழ்நாள் சந்தர்ப்பமாக மனதில் பட்டது. நம் ஊரிலே செய்திதாள்களில் நாம் வாசிக்கும் செய்திக்கும், உண்மைக்கும் இடைவெளி இருப்பது போல. நிச்சயம் காசாவை பற்றி நாம் வாசிக்கும் ஆங்கில கட்டுரைகளுக்கும் அங்குள்ள எதார்த்த நிலைக்கும் மிகப் பெரும் இடைவெளி இருப்பதை பல சந்தர்ப்பங்களில் உணர்ந்துள்ளேன். இந்த இடைவெளியை நேரில் காண்பது தான் இந்த பயணத்தின் நோக்கம்.

 இதையெல்லாம் விட இந்திய நாட்டின் எல்லையை இதுவரை ஒருமுறை கூட நான் கடந்ததில்லை, பல நாடுகளை அதுவும் நம் வரலாற்றுடன், பண்பாட்டுடன் தொடர்புடைய மூத்த நாகரீகங்களின் ஊடே செல்லும் பயணம் என்றவுடன் என் ஆவல் இன்னும் பல மடங்காக பெருகியது. பொதுவாக என் நண்பர்கள் அனைவரும் சிங்கப்பூர், ஐரோபா சென்று வருவார்கள். என் முதல் வெளிநாட்டு பயணம் ஒரு சமூகம் பொறுப்பு மிக்க உலகின் துயரத்துடன் தொட்ர்புடையது என்கிற மகிழ்ச்சியுடன் பைசா காசு இல்லாமலும் எப்படியாவது நன்பர்களின் துனையுடன் கிளம்பிவிடலாம என் நம்பிக்கையுடன் புறப்படேன். ஏறக்குறைய ஒரு மாத காலம் நாங்கள் கடக்கு இந்த எல்லா நாடுகளின் தூதரகங்களை எல்லாம் முட்டி மோதி விசா வாங்குவது என்பதே பெரும் அனுபவமாக அமைந்தது.

இந்த பயணத்தை ஏற்பாடு செய்தது மும்பையை சேர்ந்த நண்பர் பிரோஸ் மித்தீபோர்வாலா. இவர் பல ஆண்டுகளாக பாலஸ்தீனம் தொடர்புடைய உலக நிகழ்வுகளில் முக்கிய பங்காற்றி வருபவர். அவர் தான் இந்த ஆசிய பயணக்குழுவை ஒழுங்கு செய்தவர். இந்த பயணக்குழு ஆசியாவின் 18 நாடுகளில் இருந்து 160 நபர்களை அழைத்து சென்றது. 18 நாடுகளில் இந்த குழுவின் நண்பர்கள் அனைவரும் US$1 மில்லியன் பெருமான நிதியையும் நிவாரணப் பொருட்களையும் திரட்டி அதனை காசாவுக்கு எடுத்துச் செல்வது தான் பயணக்குழுவின் நோக்கம். உணவு பொருட்கள், ஆம்புலன்ஸ், மருந்துகள், அறுவை சிகிச்சை கருவிகள், கல்வி தொடர்புடைய உபகரணங்கள், கம்பளி உடைகள் என காசா மக்களின் உடனடி தேவைகளை கருத்தில் கொண்டு தான் இவை எல்லாம் தருவிக்கப்பட்டன.

இந்த பயணம் சாலை வழியாக செல்வதால் பல கலாச்சாரங்களுடன் கை குலுக்கிச் செல்வது மிகவும் புதிய அனுபவத்தை தந்தது. ஒவ்வோரு நாளும் புதிய நிலப்பரப்பு, புதிய மக்கள், புதிய மொழி என நான் இதுவரை புத்தகங்களில், புகைப்படங்களில், திரைப்படங்களில் மட்டுமே பார்த்த படித்த விடயங்களை நேரில் அனுபவித்தது வியப்பான அனுபவமாக இருந்தது. பலவித முகங்கள், பாவனைகள், நிறங்கள், உடைகள், மொழிகள், உணவுகள் என இந்த பயணம் மனிதகுல நாகரீங்கள் தோன்றிய நிலங்களின் ஊடே பயணித்தது, எங்கள் அனைவருக்குமே பிரமிப்பை தந்தது.

இன்னும் பயணம் தொடரும்..