*கீழக்கரை தாலுகா மருத்துவமனையில் பணி நேரத்தில் மாயமாகும் மருத்துவர்கள் – நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் நல பாதுகாப்புக் கழகம் மற்றும் பலர் மனு*

கீழக்கரை தாலுகா அரசு மருத்துவமனையில் பணி நேரத்தில் வேலை செய்யாமல் மாயமாகும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மக்கள் நல பாதுகாப்புக் கழகத்தினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் பல தனி நபர்கள் இணைந்து மக்கள் குறை தீர்க்கும் நாளான இன்று மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு கொடுத்துள்ளனர்.

அந்த மனுவில் கீழக்கரை தாலுகா அரசு பொது மருத்துவமனையில் பெரும்பாலான வேலை நேரங்களில் மருத்துவர்கள் இல்லாததால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் கடுமையான மன வேதனைக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த தாலுகா மருத்துவமனையில் கீழக்கரை, மாயாகுளம், புல்லந்தை, முள்ளுவாடி, காஞ்சிரங்குடி, பாரதிநகர், மங்களேஸ்வரி நகர், திருப்புல்லாணி உட்பட ஏராளமான சுற்று வட்டார கிராமங்களிலிருந்து வெளி நோயாளிகளாக 300-க்கும் மேற்பட்டோர் தினமும் வருகின்றனர்.

சாலை விபத்து, பாம்புக்கடி, நாய்க்கடி மற்றும் இரவு நேரங்களில் ஏற்படும் நெஞ்சு வலி, மூச்சுத் திணறல் மற்றும் அவசர சிகிச்சைகளுக்காக, இங்கு அழைத்து வரப்படும் நோயாளிகள், பணி நேரத்தில் மருத்துவர்கள் இல்லாததால், வேறு வழியின்றி இராமநாதபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். பல நேரங்களில் வேலை நேரங்களில், அவசர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் மாயமாகி விடுவதால் செவிலியர்களே மருத்துவ சிகிச்சை அளிக்கும் அவல நிலை நிலவுகிறது.

இரவு நேரங்களில் இங்கு பணி மருத்துவர் இருப்பதில்லை. மேலும் சில நேரங்களில் மட்டும் மருத்துவமனைக்கு வரும் மருத்துவர்கள் இங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை அவமரியாதையுடன் நடத்தும் விதம் தொடர்கதையாகி வருகிறது. பணிக்கு மருத்துவர்கள் சரியான நேரத்திற்கு வராததால் புறநோயாளிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சிலர் மயக்க நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

ஆகவே மரியாதைக்குரிய மாவட்ட ஆட்சியர் அவர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட சுகாதார துறையினருக்கு அறிவுறுத்தி, பணி நேரத்தில் மாயமாகும் மருத்துவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..