உயிரை பலி வாங்கும் ‘செல்பி’ மோகம்.. தனுஷ்கோடியில் விபரீதம்…

ராமநாதபுரம் மாவட்டத்தின் தீவுப்பகுதியான தனுஷ்கோடி கடல் பகுதி எப்போதும் கொந்தளிப்புடன் காணப்படும். மேலும் நீரோட்டத்தின் வேகமும், சுழற்சியும் அதிகமாக இருக்கும். இதையடுத்து தனுஷ்கோடி கடலில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப் பட்டுள்ளது.

ஆனால் தனுஷ்கோடி வரும் சுற்றுலா பயணிகள் கடலை பார்த்த மகிழ்ச்சியிலும், ஆர்வத்திலும் கடலில் இறங்கி குளிப்பது தொடர்ச்சியாக நடந்து வருகிறது. முகுந்தராயர்சத்திரம் கடற்கரையில் உள்ள மீன்பிடி இறங்கு தளத்திற்கு வரும் சுற்றுலாபயணிகள் சீறி எழும் கடல் அலையை செல்பி எடுத்து வருகின்றனர். கடந்த 2 நாட்களாக தனுஷ்கோடி பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசி வருவதுடன் கடல்கொந்தளிப்பு அதிகமாக உள்ளது.

இந்நிலையில் கீழக்கரையில் ஒரு தனியார் கல்லூரியில் படிக்கும் விளாத்திகுளம் மாணவர் அஜித்குமார் (வயது 20), சக மாணவர்கள் சிறைமீட்டான், தினேஷ், கணேஷ்பாண்டியன், ஜெயம்பாண்டியன், மார்டின், ஜெயசூர்யா, அஜித், மதிவாணன், மணிகண்டன் உள்ளிட்ட 11 பேருடன் தனுஷ்கோடி வந்திருந்தார். அப்போது முகுந்தராயர்சத்திரம் கடற்கரையில் உள்ள மீன்பிடி இறங்கு தளத்தில் நின்று மாணவர்கள் செல்பி எடுத்துள்ளனர்.

அப்போது திடீரென மீன் பிடி இறங்கு தளத்தின் மீது மோதி எழுந்த ராட்சத கடல் அலை, மாணவர் அஜித்குமாரை இழுத்துச்சென்றது. உடனே அவரை காப்பாற்ற மணிகண்டன் உள்ளிட்ட 3 பேர் கடலில் குதித்தனர். அஜித்குமாரை மீட்க போராடிய அவர்கள் முடியாததால் 3 பேரும் நீந்தி கரைக்கு வந்துவிட்டனர். இதுபற்றி அவர்கள் உடனே கடலோர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கடலோர போலீசார் விரைந்து சென்று மீனவர்கள் உதவியுடன் கடலில் விழுந்து மாயமான மாணவரை தேடினர். நேற்று இரவு வரை அவர் கிடைக்கவில்லை.

இந்நிலையில் இந்த சம்பவம் நடைபெறுவதற்கு முன்னதாக இதே பகுதியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் கடல் அலையை செல்பி எடுத்தபோது 2 பேர் அலையில் சிக்கி கடலில் விழுந்தனர். அவர்கள் அதிர்ஷ்டவசமாக கடற்கரையில் ஒதுங்கி உயிர்தப்பினர்.

மீன்பிடிஇறங்குதளத்திற்கு சென்று கடலை வேடிக்கை பார்ப்பதையும், செல்பி எடுப்பதையும் கடலோர போலீசார் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..