நாம் முன்னெடுக்கும் காரியங்கள் தடைபடுவது ஏன்??

இன்று நம் சமுதயாத்தில் பல சம்பவங்களை தினம் தினம் சந்தித்து வருகிறோம். அதற்கெல்லாம் தீர்வாக நினைப்பது அப்பிரச்சினையை சமூக வலைதளங்களில் பதிவிடுவதும், ஆதரவாக பல அன்பர்களும் வழிமொழிவதுதான் தீர்வு என்று எண்ணி முடிவெடுத்து விடுகிறோம்.

மிக சுருக்கமாக சொல்வதென்றால் நாம் எந்த ஒரு காரியத்திற்கும் ஆக்கபூர்வமாக சிந்தித்து முடிவெடுக்காமல், உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுப்பது தான் பிரச்சினைக்கு தீர்வின்மையாகிறது.  அடுத்தது அன்றைய பிரச்சினைக்கு தீர்வு எட்டினால் போதும் என்ற மனப்பான்மையும், அதை போன்று மீண்டும் எழப் போகும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை நாம் அடையாளம் காண்பதும் இல்லை.

உதாரணமாக கடந்த இரண்டு நாட்களாக கீழக்கரையில் இயங்கி வரும் தனியார் பேக்கரியில் வாங்கப்பட்ட பொருள் உண்ண தகுதியில்லாத பொருளாக இருந்தது என்றும் அதற்க முறையான பதில் அந்த பேக்கரி நிர்வாகத்தில் இருந்து கிடைக்கவில்லை என்ற செய்தி சமூக வலைதளத்தில் பதிந்தவுடன் பல அன்பர்கள் உடனே அந்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பலமான கோரிக்கை வைத்தார்கள். இன்று நகராட்சி ஊழியரின் சோதனையும் நடந்தது அந்நிறுவத்திற்கு எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டு விட்டது. ஆனால் இப்பிரச்சினை நகராட்சி நிர்வாகத்திற்கு முன்னரே தெரியாதா??

பிரச்சினைக்கு இதுதான் தீர்வா?? நிச்சயமாக இல்லை அல்லது இது போன்ற தவறுகள் வேறு எந்த பேக்கரி நிறுவனங்களிலும் நடக்கவில்லையா??.  ஆக அரசு அதிகாரிகள் அவர்கள் செய்ய வேண்டிய பணியை தொடர்ச்சியாக செய்யாத காரணமே இன்று உணவு தொழில் செய்பவர்களின் அலட்சியப்போக்குக்கு முக்கிய காரணமாகி விடுகிறது. முதலில் பொதுமக்கள் இது போன்ற பிரச்சினைகளை சந்திக்கும் பொழுது உணர்ச்சிவசப்படாமல் அதன் உண்மைத்தன்மைக்கான ஆதாரத்தை சேகரிக்க வேண்டும் பின்னர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் கொண்டு செல்ல வேண்டும் அதை வைத்து ஆணித்தரமாக அந்நிறுவனத்தை ஒதுக்கி வைக்க முடியும்.

நாம் எடுத்து வைக்கும் இந்த செயல் இத்தொழிலில் இருப்பவர்களை மட்டும் அல்ல அனைவருக்கும் ஒரு எச்சரிக்கை மணியாக இருக்க வேண்டும்.  இதைத் தவிர்த்து மற்ற நிறுவனங்கள் அனைத்தும் முறைப்படிதான் தொழில் செய்கிறார்கள் என்பதை நாம் நிச்சயமாக கூற முடியாது.

ஆக உணர்ச்சிபூர்வமாக சிந்திப்பதை விட்டு விட்டு ஆக்கப்பூர்வமாக சிந்திப்போம்.. நிரந்தர முடிவு காண்போம்.