“தன்னம்பிக்கை இருந்தால் நம் ஊரிலும் சாதிக்கலாம்” – கீழை மரச் செக்கு சகோதரர்களின் நம்பிக்கை குரல்…

கீழக்கரையில் உள்ள பெரும்பாலான இளைஞர்கள் வெளிநாட்டில் வேலையில் உள்ளவர்களாகத்தான் இருப்பார்கள். இதில் பல பேர் குடும்ப சூழ்நிலைக்காக சென்றவர்களாக இருப்பார்கள். பல பேர் வெளிநாடு சென்று சில வருடங்களுக்கு சம்பாதித்து விட்டு ஊரில் வந்து தொழில் தொடங்கலாம் என்று சென்றவர்களாக இருப்பார்கள். ஆனால் அவ்வாறு வெளிநாடு சென்றவர்களின் நிலை புலி வாலை பிடித்த கதைதான். பிடித்துக் கொண்டிருப்பதும் கஷ்டம், வாலை விட்டால் கடித்து விடும் என்ற பயம். அதில் சில பேர்தான் புலி வாலை தைரியமாக விட்டுவிட்டு வீறு நடை போடுவார்கள். அந்த வகையில் வெளி நாட்டிலிருந்து ஊரில் தொழில் முனைய நாடு திரும்பிய கீழக்கரை இளைஞர்கள் இருவர் இயற்கையான தொழிலான மர செக்கு மூலம் எண்ணெய் தயாரிக்கும் பண்டைய கால முறையை அறிமுகப்படுத்தியுள்ளார்கள். இயற்கை உணவை மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற நோக்கில் பழைய அத்தியாயத்தை புரட்டும் நோக்கில் இந்த இளைஞர்கள் களத்தில் இறங்கியுள்ளார்கள். அதுதான் “கீழை மரச் செக்கு எண்ணெய்”.


வரும் வியாழன் அன்று கீழை நியூஸ் டிவியில் கீழை மரச் செக்கு – ஒரு நேரடி ரிப்போர்ட், காண தவறாதீர்கள்.


நமது முன்னோர்கள் சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணை வகைகளையும் இயற்கையான முறையிலேயே தயாரித்து இருக்கிறார்கள். எள், தேங்காய், கடலை ஆகியவற்றை உலரவைத்து மரசெக்கும் மூலம் எண்ணெய்களை உருவாக்கி பயன்படுத்தி இருக்கிறார்கள். மருத்துவ குணம் நிறைந்த வாகை மரத்தினால் மர செக்கு செய்யப்படுகிறது. அந்த மர உரலில் மட்டை பூட்டி இயக்க செய்து அவற்றில் உலர வைத்த எள், தேங்காய், கடலை ஆகியவிற்றை போட்டு ஆட்டி எண்ணெய் தயாரிக்கிறார்கள். இது இயற்கை மற்றும் மருத்துவ குணம் நிறைந்தது.

கால மாற்றங்களுக்கு ஏற்ப மர செக்குகளும் மாறுதலை சந்தித்து விட்டது. மாட்டை பூட்டி மர உரலை இழுக்கும் வேலையை இப்போது இயந்திரங்கள் செய்து கொண்டிருக்கின்றன. எரி பொருள் அல்லது மின்சாரத்தில் இயங்கும் இயந்திரங்களைக் கொண்டு எண்ணெய் வகைகளை தயாரித்து வருகின்றனர். மேலும் எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களில் இரும்பு உலக்கைகளை பயன்படுத்தி எண்ணெய்யை பிழிந்து வருகின்றனர், அதனால் எண்ணெய் அதிகமாக சூடேற வாய்ப்பிருக்கிறது. இதனால் எண்ணெய்யில் உள்ள நல்ல கொழுப்பு சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்கள் குறைந்து விட அதிக வாய்ப்பிருக்கிறது.

இன்றைய காலகட்டத்தில் அன்றாட சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய எண்ணெய் வகைகள் செயற்கை முறையில் சுத்திகரிக்கப்பட்டதாகவே இருக்கின்றன. அப்படி சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்யில் இயற்கை நிறத்தையும், கொழப்புத் தன்மையையும், கொழுப்புச் சத்தையும் நீக்குவதற்காக சோப்பு தயாரிக்க பயன்படும் காஸ்டிக் சோடா என்ற சோடியம் ஹைடிராக்சைடு, பீளிச்சிங் பவுடர் ஆகியவற்றை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.

இந்த எண்ணெய்களை பயன்படுத்துவதால் உடன் ஆரோக்கியத்திற்கு கேடு ஏற்படுகிறது. இது உடலில் உள்ள செல்களில் இணைந்து அதன் இயக்கத்தை தடுக்கிறது. இதனால் உடலில் பல நோய்கள் உண்டாகிறது. மேலும், இதய் நோய், மூட்டு வலி, மூட்டு தேய்மானம், இளநரை, குடல் நோய், புற்று நோய், ரத்த குழாய் அடைப்பு போன்ற பாதிப்புகள் ஏற்பட காரணமாகிறது.

ஆனால் மரச்செக்கிலிருந்து எடுக்கப்பட்ட எண்ணெய்களில் ஊட்டச்சத்துகள்,  உயிர்ச்சத்துகள், புரோட்டீன்கள், வைட்டமின்கள், இரும்பு சத்து, நார் சத்து, தாது பொருட்கள், கால்சியம் உள்பட பல சத்துக்கள் கொண்டதாக இருக்கிறது. உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு சத்துக்களும் அதிகமாக அடங்கியிருக்கின்றன.

மரச்செக்கு எண்ணை பயன்படுத்தினால் நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கிறது. மரசெக்கு எண்ணெய் வகைகளிலும் கலப்படம் செய்வதற்கும் வாய்ப்பு இருக்கிறது. அவற்றின் தரம் மற்றும் சுத்தம் என்பதை பரிசோதித்து வாங்க வேண்டும். செக்கில் தயாரித்த எண்ணெய் நுரையுடன் கூடிய மணத்துடன் அடர் பழுப்பு நிறத்திலும், சற்று கசடுகளோடு காணப்படும். சந்தையில் விற்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்கள் பார்ப்பதற்கு கண்ணாடி போன்று பளப்பளப்புடன் இருப்பதால் மக்களின் கவனத்தை எளிதில் ஈர்ந்து விட்டன.

வெளிநாட்டில் இருந்து கீழக்கரையில் “கீழை மரச் செக்கு” வியாபாரத்தை தொடங்கியிருக்கும் நூருல் ஜமான் மற்றும் ஜமீல் ஆகியோர் கூறுகையில் “வெளிநாட்டில் வேலை பார்த்து விட்டு ஊரில் வந்து தொழில் தொடங்குவது என்பது, மிகவும் கடினமான விசயம்தான், ஆனால் நம் நாட்டில் வியாபாரம் செய்ய எத்தனையோ வாய்ப்புகளை நாம்தான் சரியாக தேர்ந்தெடுக்க வேண்டும், நம்மாலும் முடியும் என்ற தன்னம்பிக்கையுடன் தொழில் தொடங்கலாம்” என்று தன்னம்பிக்கையுடன் கூறி முடித்தார்கள். கீழை மர செக்கில் எண்ணெய் தவிர்த்து இன்னும் மக்களுக்கு பயன் அளிக்க கூடிய பலன் தரக்கூடிய இயற்கை உணவுகளையும் சந்தைபடுத்த போகிறார்கள் என்பது நமக்கு கிடைத்த கூடுதல் தகவல்.


2 Comments

  1. தன்னம்பிக்கை இருந்தால் நம்ஊ ஊரிலும் சாதிக்கலாம்.உண்மையான நம்பிக்கை ஊட்டும் வரிகள்.

Comments are closed.