பள்ளி மாணவர்கள் செல்லும் வழியில் ஆபத்தான நிலையில் வாறுகால் மூடி..

கீழக்கரை தெற்குத் தெருவில் இருந்து பள்ளிக்கூடங்கள் மற்றும் பள்ளிவாசலுக்கு செல்லும் சாலை வழியாக தினமும் நூற்று கணக்கான மாணவர்கள் பள்ளி கூடங்களுக்கு சென்று வருகிறார்கள். இந்த பாதையில் சாக்கடைக்காக போடப்பட்டுள்ள வாறுகால் மூடிகள் உடைந்து ஆபத்தான நிலையில் காட்சியளிக்கிறது. அவ்வழியில் நடந்து செல்லும் மாணவர்கள் கவனக் குறைவாக உடைந்த பகுதியில் காலை வைத்தால் உயிருக்கே ஆபத்து ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

மேலும் இதே வழியில் ஆட்டோ மற்றும் பிற வாகனங்கள் செல்வதால், வாறுகால் மூடியின் உடைப்பும் பெரிதாகி கொண்டே செல்கிறது. நகராட்சி நிர்வாகம் உடனடியாக நீர்வு காணும் பட்சத்தில், பள்ளி குழந்தைகளை ஆபத்தில் இருந்து காப்பாற்ற முடியும்.

அதே சமயம் இது போன்று பல தெரு பகுதிகளில் வாறுகால் மூடிகள் உடைந்து சாக்கடை நீர் வெளியில் ஓடிய வண்ணம்தான் உள்ளது. இதற்கு நகராட்சி நிர்வாகத்தில் இருந்து வரும் பதில் “பல மாதங்களாக ஒப்புதல் கிடைத்து விட்டது, டென்டர் விடப்பட்டு சில வாரங்களில் சரி செய்யப்பட்டு விடும் ” என்பதுதான். ஆனால் எப்பொழுது இந்த சில வாரங்கள் கெடு முடியும் என்பதுதான் கேள்வி குறியாக உள்ளது..